
சேலத்தில், நள்ளிரவில் மூதாட்டியை கற்பழிக்க முயன்ற, 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.சேலம், நெத்திமேடு, ஆஞ்சநேயர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாயி(90). அவருடைய மகள், பேரன் உள்ளிட்டோர், மணியனூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
தனியாக வசித்து வரும் மூதாட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவில், சிறுநீர் கழிப்பதற்காக வீட்டுக்கு வெளியில் வந்தார்.
அப்போது, குடிபோதையில் அங்கு வந்த சீரகாபாடியைச் சேர்ந்த பெருமாள்(30), என்ற இளைஞர், திடீரென மூதாட்டி மீது பாய்ந்து, அவரை கற்பழிக்க முயன்றுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் உள்ளோர் பதறியடித்து வந்தனர். நடுரோட்டில், மூதாட்டியிடம் அநாகரிக செயல்களில் ஈடுபடுவதை கண்ட அவர்கள், அந்த இளைஞரை பிடித்து, தர்ம அடி கொடுத்து விரட்டியடித்தனர்.
இந்த சம்பவத்தில் மூதாட்டியின் கை, கால், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. நடக்க முடியாத நிலையில், ஊன்றுகோல் துணையுடன் நடந்து கொண்டிருந்த மூதாட்டி, இச்சம்பவத்தால் வேதனைக்குள்ளானார்.
அதிகாலை,நான்கு மணிக்கு, மீண்டும் மூதாட்டி வீட்டு அருகே, அந்த இளைஞர் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், அவரை நையப்புடைத்தனர்.
அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் அசோகன் விசாரணை மேற்கொண்டார்.
அதன் பின், அந்த இளைஞரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார், "கவனித்தனர்!' புகாரின் அடிப்படையில், பெண்ணை மானபங்க முயற்சித்ததாக, பெருமாள் கைது செய்யப்பட்டார்
No comments:
Post a Comment