பொலன்னறுவை – திருகோணமலை அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின்மூலம் எதிர்காலத்தில் 10 மில்லியன் மக்களை திருகோணமலையில் குடியேற்ற அரசாங்கம் மறைமுக திட்டமொன்றை வகுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையில் மொத்தமாக 4.5 மில்லியன் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் வாழ்ந்து வருவதாகவும், எனினும் 10 மில்லியன் இலக்கு என்பது சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான திட்டமாக இருக்கலாம் என சிவில் சமூக அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
அதிவேக நெடுஞ்சாலைக்காக காண்பிக்கப்பட்டுள்ள வரைபடத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் தொகை ஒரு மில்லியன் என குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளது. இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
தொழில்ரீதியான அபிவிருத்தியை முன்வைத்து இன விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி திருகோணமலை மாவட்டத்தை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்றும் செயற்பாடாகவே இதனை பார்ப்பதாகவும் சமூக அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
வரைபடத்தில் சிங்கள பிரதேசமான தம்புள்ளவலிருந்து யாழ்ப்பாணம் திருகோணமலைக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கான பாதை அமைப்புக்கள் பிரித்து காண்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு, திருகோணமலை முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை இணைத்து அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிஙகள மாவட்டமான அநுராதபுரத்தை இணைத்தே பாதை அமைப்புக்களும் காண்பிக்கப்பட்டுள்ளன.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் 1983 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திலேயே சிங்கள குடியேற்றங்கள் கிழக்கு மாகாணத்தில் வேகமாக ஆரம்பிக்கப்பட்டன.
குறிப்பாக திருகோணமலை மாவட்டம் அரசாங்கத்தின் பிரதான இலக்காக இருந்தது. 1983 ஆம் ஆண்டிலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு சிங்களவர்கள் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டனர்.
வடக்கு கிழக்கு மாகாணம் இணைப்பு மற்றும் தமிழ்த்தேசியம் தமிழர் சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகளுக்கு எதிரான முறையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த 30 ஆண்டுகளிற்கு மேலாக செயற்பட்டு வருகின்றது.
குறிப்பாக வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லைக்கிராமங்களில் சிங்கள குடியேற்றங்கள் 1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபப்பட்டன. மணலாறு என்ற தமிழ் பிரதேசம் வெலியோயா என சிங்கள பெயராக மாற்றப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மாற்றப்பட்டன.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கதின்போது மணலாறு, தென்னமரவாடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி தனியான பிரதேசசெயலாளர் பிரிவொன்றும் உருவாக்கப்பட்டு அநுராதபுர மாட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அதிவேக நெடுஞ்சாலை என்ற பெயரில் தமிழர்களின் தாயக பிரதேசங்கள் துண்டாடப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் செய்யப்படுவதுடன் வடக்கு கிழக்கு இணைப்பு என்பதை இல்லாமல் செய்யக்கூடிய வேலைத்திட்டங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து யாழப்பாணம், திருகோணமலை போன்ற மாவட்டங்களிற்கு அதிவேக நெடுஞ்சாலை அவசியமாக இருந்தாலும் அதனை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளும், நில உரிமைகளையும் பறிக்கின்ற வேலை திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றமை தமிழர்களின் அரசியல் இருப்பிற்கு ஆபத்தாக அமையும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment