Monday, April 22, 2013

தன்னைப் பாலியல் வல்லுறவுக் குட்படுத்தியவர்களில் ஒருவர் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்: விக்ரோரியா

தன்னைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய – தனது நண்பரை கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரின் குடும்பம் மகிந்தவுக்கு மிகவும் நெருக்கமானது என்பதால், குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படப் போவதில்லை என்று ரஸ்யப் பெண்ணான விக்ரோரியா கச்சேவா தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கையின் ஆளும்கட்சி உள்ளூர் தலைவர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விக்ரோரியா கச்சேவா இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் முதல் முறையாக – சண்டே ரைம்ஸ் வாரஇதழுக்கு செவ்வி அளித்துள்ளார். 24 வயதான விக்ரோரியா கச்சேவா ரஸ்ய மொழி பட்டதாரி. அவருடன் இலங்கையில் விடுமுறையைக் கழிக்க வந்த ஆண் நண்பரான பிரித்தானியாவைச் சேர்ந்த 32 வயதான செஞ்சிலுவைப் பணியாளரான குரம் சேய்க் என்பவரே கொலை செய்யப்பட்டார். தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய – குரம் சேய்க்கை கொலை செய்த குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படப் போவதில்லை என்று அச்சம் கொள்வதாக கச்சேவா கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், மகிந்தவுக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். “அங்கு நியாயமான விசாரணைக்கு வாய்ப்பே இல்லை, ஆனாலும் நீதி நிலைநாட்டப்படும் வரை தாம் ஓயப்போவதில்லை” என்கிறார் கச்சேவா. ‘எனக்குத் தெரியும், எனது இடத்தில் குரம் இருந்திருந்தால், இறுதிவரை செல்வார், அது என்னவோ அதையே நானும் செய்ய வேண்டும்” சிறார்களுக்கும், பெரியவர்களுக்கும் செயற்கைக் கால்களைப் பொருத்தும் செஞ்சிவைக் குழுவின் வல்லுனரான குரம், வடகொரியாவில் பணியாற்றிய போது, 2009இல் கச்சேவாவை சந்தித்தார். அப்போது தலைநகர் பியொங்யங்கில் கொரிய மொழி கற்றுக்கொண்டிருந்தார் கச்சேவா. குரம் காசாவுக்கு இடமாற்றம் செய்யப்படும் வரை அவர்களின் நட்புறவு தொடர்ந்தது. இலங்கையில் விடுமுறையை கழிக்க வந்திருந்த அவர்கள், தங்காலையில் தங்கியிருந்த போது, விடுதிக்கு வந்த குழுவொன்றுடன், நத்தார் இரவு விருந்தின் போது சேய்க்குக்கு சிறிய பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சற்றுத் தொலைவில் கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்த கச்சேவா பிரச்சினையை தீர்க்க அவர்களை அணுகிய போது, ஒருவர் தவறான நோக்கத்துடன் துரத்தத் தொடங்கினார். விடுதியை நோக்கித் திரும்பி ஓட முனைந்த போது அந்தக் குழுவினர் அவரை சூழ்ந்து கொண்டனர். எத்தனை பேர் என்று அவருக்குத் தெரியவில்லை. “நான் அவர்களை பார்க்கக் கூட முடியவில்லை. அவர்கள் என்னை அடிக்கத் தொடங்கினர். நான் நிலத்தில் விழுந்தேன். எனது கைகளால் தலையைப் பொத்திக் கொண்டேன். அதனால் எவரையும் பார்க்கமுடியவில்லை.” என்றார் அவர். “நீச்சல் குளத்தை அடுத்து அது நடந்தது, .திடீரென அவர்கள் உதைத்தனர். குத்தினர்.” அவரைத் தாக்கியவர்கள் நீச்சல் குளத்தினுள் தூக்கி வீசினர். “குளத்தில் இருந்து தப்பிக்க நான் முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை விடவில்லை.” இறுதியில் ஒருவாறு வெளியேற கச்சேவாவின் தலை உடைந்திருந்தது. “நான் குளத்தின் இன்னொரு பக்கம் வழியாக வெளியேறினேன். சில அடிகளை எடுத்து வைத்தபோது, குரம் தரையில் கிடந்ததை பார்த்தேன். அவரை நோக்கி ஓடினேன். அவரது பெயரைச் சொல்லி அழைத்தேன். ஆனால் பதில் இல்லை. அவருக்கு நினைவு கொண்டு வரமுயன்றேன். அவருக்கு நினைவு கொண்டுவர எதுவுமே இருக்கவில்லை.“ சேய்க்கின் முகத்தில் வெட்டப்பட்டிருந்ததை கச்சேவா கண்டார். அவரைக் கொன்றது குத்துக் காயமா குண்டுக்காயமா என்பதைக் கவனிக்கவில்லை. “எதும் செய்யமுடியாத – உதவியற்ற நிலையில் இருந்த நான் சத்தமாக கத்தினேன். அதன் பின்னர் நான் நினைவிழந்து விட்டேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதற்கு பின்னர் எதும் ஞாபகத்தில் இல்லை.“ அந்தக் கட்டத்தில் தான், அவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பார் என்று தோன்றுகிறது. ரி சேட் அணிந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து எழுந்திருந்த போது தான் அவரது அடுத்த நினைவுகள் தெரிகின்றன. அந்த ரீசேட் அவருடையது அல்ல. அவருடைய ஆடைகள் இரத்தம் தோய்ந்த நிலையில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் உள்ளாடை காணாமல் போயிருந்தது. அவரது முகம் வீங்கியிருந்தது. உடலில் காயங்கள் காணப்பட்டன. நத்தார் நாளன்று காலையில் விடுதியின் அறையொன்றில் கச்சேவா நிர்வாணமாக – மயக்கத்தில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சாட்சிகள் கூறினர். அவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அல்லது பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதற்கான காயங்கள் காணப்பட்டதாக காவல்துறை அறிக்கை கூறுகிறது. கச்சேவாவுக்கு தான் எங்கே – எப்போது கண்டுபிடிக்கப்பட்டார் என்று நினைவில் இல்லை. “என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் சிந்திக்க முயற்சிக்க வேண்டாம். ஆனால் இது அவமானகரமானது. ஏனென்றால், அவர்கள் குரம்மை கொன்றுள்ளனர். என்னை பாலியல் ரீதயாக தாக்கியுள்ளனர்“ என்கிறார். அவரது உள்ளாடை கண்டுபிடிக்கப்படவில்லை. உடைகள் எங்கோ வீசப்பட்டன. இவை இரண்டுமே காவல்துறைக்கு மரபணுச் சான்றுக்கு உதவக் கூடியவை என்கிறார் கசேவா. குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி எல்லா சந்தேகநபர்களுமே கடந்த நொவம்பரில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். “அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டபோது, நான் அழிக்கப்பட்டு விட்டேன்“ என்கிறார் கச்சேவா. இந்தச் சம்பவத்துடன் தொடர்டையவர்களை கண்டுபிடிக்க, மரபணு சான்று அறிக்கைக்காக காத்திருப்பதாக கடந்த மாதம் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment