Saturday, January 7, 2012

தமிழக மக்களுக்காக ஒரு போராட்டத்தை கூட நடத்த விரும்பாத நடிகர்கள் இனியும்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைக் காக்க உண்ணாவிரதம் இருப்போம் என்று வீராவேசமாக அறிவித்து விட்டு தற்போது அதே வேகத்தில் அதை ரத்து செய்து விட்டது தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம். இது மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒப்புக்காகக் கூட தமிழ் சினிமாக்காரர்களுக்கு தமிழக மக்களுக்காக ஒரு போராட்டத்தை நடத்த மனம் இல்லையா என்பது அதில் ஒரு கேள்வி. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்த் திரையுலகம் மகா அமைதியாக இருந்து வருகிறது. காரணம்தான் தெரியவில்லை. ஆனால் மலையாளத் திரையுலகில் அந்த மாநில அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு போராட்டத்தை நடத்தி விட்டது நடிகர்கள் சங்கம். மேலும் ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகமும் கேரள அரசுக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் இதுவரை தமிழக அரசுக்கு ஆதரவு என்றும், தமிழக மக்களுக்காகப் போராடுவோம் என்றும் கூறவில்லை. சமீபத்தில் தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த போராட்டத்தின்போது பேசிய சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, முல்லைப் பெரியாறு அணைக்காக தமிழ் சினிமா நடிகர்கள் குரல் கொடுக்காதது ஏன் என்பதை அவர்களிடம் மக்கள் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். பாரதிராஜா, சேரன், தங்கர்பச்சான், கெளதமன், அமீர் போன்ற இயக்குநர்கள் சிலர்தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நடந்த போராட்டங்களில் பங்கேற்றனர். மாறாக நடிகர் சங்கம் வாயே திறக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை அருகே தேனி மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்று பாரதிராஜா அறிவித்தார். இதற்கு நடிகர் சங்கம் உள்பட அனைத்துச் சங்கங்களும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் நடிகர் சங்கம் தனது செயற்குழுவைக் கூட்டி ஆலோசித்தது. இயக்குநர்கள் சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் தேவைப்பட்டால் சென்னையில் போராட்டம் நடத்துவோம் என்றும் மெல்லிய குரலில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். ஆனால் இப்போது இந்த உண்ணாவிரதப் போராட்டமும் கைவிடப்பட்டு விட்டது. எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதாகவும், எனவே போராட்டம் தேவையில்லை என்றும் சிம்பிளாக ஒரு காரணத்தைச் சொல்லி விட்டார்கள். ஆக நடிகர் சங்கத்திற்குப் போராட கிடைத்த இந்த வாய்ப்பும் கூட இல்லாமல் போய் விட்டது. மொத்தத்தில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக தமிழ்த் திரையுலகம் ஒரு போராட்டத்தைக் கூட நடத்தவில்லை, நடத்த முடியவில்லை, நடத்த விரும்பவில்லை என்று பதிவாகி விட்டது. முடிதிருத்துபவர்கள், பால் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், கடைக்காரர்கள், வேன் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், லோடுமேன்கள் என் சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக இன்று வரை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையான போராட்டத்தை நடத்தி தமிழக மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம் என்பதைக் காட்டி வருகிறார்கள் -உணர்வுகள் இருப்பதால். தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டங்கள் தொடர்ந்தபடிதான் உள்ளது. போராட்டம் நடத்துவதை இவர்கள் கடமையாக கருதவில்லை, மாறாக, தமிழகத்தின் உரிமைகளை காக்க தங்களது உணர்வுகளை இப்படி வெளிப்படுத்துகிறார்கள். இன்று வரை கேரளாவில் வாகனங்கள் தாக்கப்பட்டுக்கொண்டுதான் உள்ளன. இந்த நிலையில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்து செய்திருப்பதை மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள். ஏதேதோ சினிமா விழாக்களுக்கெல்லாம் இந்த நடிகர் நடிகைகளுக்கு நேரம் இருக்கிறது, அதில் கலந்து கொண்டு அரை குறை ஆடையுடன் ஆட நிறைய அவகாசம் இருக்கிறது. ஆனால் தமிழகமக்களின் உரிமைப் பிரச்சினைக்காக குரல் கொடுக்க அவர்களுக்கு தயக்கம் இருப்பது மக்களிடையே பெரும் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

No comments:

Post a Comment