Wednesday, August 31, 2011

வாதாடுவதற்கு கட்டணத்தைப் பற்றி கவலையில்லை! மூன்று உயிர்கள் முக்கியம்! தமிழர்களுக்காக வருகிறேன்!- ராம் ஜெத்மலானி!


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் செப்டம்பர் 9-ம் தேதி தூக்குத் தண்டனை’ என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் தமிழ் உணர்வாளர்கள் தொடங்கிவிட்டார்கள்.

பூந்தமல்லி தனி நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்திய நிலையில்... தமிழக ஆளுநர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, மூவரும் 'கருணை மனு’ அனுப்பிவைத்தார்கள்.

தமிழக ஆளுநராக அப்போது இருந்த ஃபாத்திமா பீவி இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்தார். இதை எதிர்த்து பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். 'ஒரு மாநிலத்தின் ஆளுநர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.

மாநில அமைச்சரவையின் முடிவைத்தான் வழிமொழிய வேண்டும். எனவே, ஃபாத்திமா பீவியின் முடிவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்!’ என்று பழ.நெடுமாறனுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் சந்துரு சொல்ல... நீதிபதி அதனை ஏற்றுக்கொண்டு ஃபாத்திமா பீவியின் நிராகரிப்பைத் தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் இந்தியக் குடியரசுத் தலைவர் முன்னால் இருக்கும் மனு ஒன்று மட்டுமே பாக்கி இருந்தது. 1999-ம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்ட கருணை மனுவை 12 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார் பிரதிபா பாட்டீல்!

ஆளுநர், குடியரசுத் தலைவர் இருவருமே கருணை மனுவை நிராகரித்த நிலையில்... மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழ் உணர்வாளர்கள் முடிவெடுத்தார்கள்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை அடிக்கடி வேலூர் சிறைக்குச் சென்று சந்தித்து வந்த இளம் வழக்கறிஞர்களான பாரிவேந்தன், பிரபு ஆகியோர், 'கருணை மனு நிராகரிக்கப்பட்டால் அதன் பிறகு உடனடியாகச் செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்துவிடுவது...’ என்று பல மாதங்களுக்கு முன்பே வேலைகளை ஆரம்பித்தார்கள்.

டெல்லியில் காலின் கான்சிவேல்ஸ் என்ற வழக்கறிஞரை சந்தித்தனர். 'ஹியூமன் ரைட்ஸ் லா நெட்வொர்க்’ என்ற அமைப்பின் மூலம், நெடுங்காலமாக மனித உரிமை வழக்குகளுக்காக மட்டும் வாதாடி வருபவர் இவர்.

மனித உரிமைகளுக்கான உலகளாவிய பல விருதுகளைப் பெற்றவர். அவர் இந்த வழக்கில் வாதாடுவதற்கு ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையே, மும்பையில் இருக்கும் மொகித் சவுத்ரி என்ற இன்னொரு வழக்கறிஞர் குறித்த தகவல் கிடைத்தது. தூக்குத் தண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து வாதாடி வரும் மொகித் சவுத்ரியையும் இதற்காகக் கொண்டுவந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்து, இந்த வழக்கறிஞர்கள் அவரையும் சந்தித்தனர். 'ராம்ஜெத்மலானி இருந்தால் நல்லது’ என்று அவர் ஆலோசனை சொன்னாராம்.

மனித உரிமை, தூக்குத் தண்டனை ஆகியவை குறித்து எத்தனையோ சாதகமான விஷயங்கள், தீர்ப்புகளை நாங்கள் எடுத்துவைக்கலாம். ஆனால், ராம்ஜெத்மலானிதான் நீதிமன்றத்தில் அழுத்தம் திருத்தமாகவும்... கூடுதல் கடுமையாகவும்கூட வாதாடுவார்.

கடுமையாகக் கடைசி வரைக்கும் போராடுவார்’ என்று மொகித் சவுத்ரி சொல்ல... அவருடன் பேச முடிவானது. 'எனக்கு ஏராளமான வழக்குகள் இருக்கின்றன. எனவே, இதில் ஆஜராக முடியாது. அதுவும் சென்னைக்கு வர இயலாது’ என்று ஜெத்மலானி சொன்னதும்... இந்த வழக்கறிஞர்கள் வைகோவை சந்தித்து விஷயத்தைச் சொன்னார்கள்.

இது ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்தது!

ஜெத்மலானியைத் தொடர்புகொண்ட வைகோ, ''மூன்று தமிழர்களின் உயிரைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.கோடிக் கணக்கான தமிழர்களின் சார்பாக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மறுப்பு ஏதும் சொல்லிவிடாதீர்கள்!'' என்று எடுத்த எடுப்பிலேயே அழுத்தம் தர... அவரால் மறுப்பு ஏதும் சொல்ல முடியவில்லை.

மறுநாள் வேலூர் சிறையில் பேரறிவாளனை சந்தித்த வைகோ, நம்பிக்கையுடன் இருங்கள். விடுதலை ஆவீர்கள்...’ என்று சொல்லிவிட்டு வந்தார்.

இது தொடர்பான அனைத்து ஆவணங்களுடன், 23-ம் தேதி ராம்ஜெத்மலானியின் வீட்டில் நீண்ட நேரம் ஆலோசனைகள் நடந்தன. ''எந்தத் தேதியாக இருந்தாலும், அனைத்து வழக்குகளையும் தள்ளிவைத்துவிட்டுத் தமிழர்களுக்காக வருகிறேன்!'' என்று ஜெத்மலானி சொல்லி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் 25-ம் தேதி மூவரின் தூக்கையும் உறுதி செய்து மத்திய அரசில் இருந்து கடிதம் வந்தது. மீண்டும் வைகோ உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானியை சந்தித்தனர்.

அனைத்துத் தகவல்களையும் விரிவாகக் கேட்டுக்கொண்ட ஜெத்மலானி, ''இவர்கள் மூவரையும் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது'' என்றார் நெகிழ்வாக. ''மூன்று தமிழர்களின் உயிர்தான் எனக்கு முக்கியம். வாதாடுவதற்கான கட்டணத்தைப்பற்றிக் கவலைப்படவில்லை!'' என்று சொன்னாராம் ஜெத்மலானி.

ராம் ஜெத்மலானி, காலின் கான்சிவேல்ஸ், மொகித் சவுத்ரி ஆகிய மூவரது வாதங்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரது உயிரைக் காக்குமா... என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்!

ஜூனியர் விகடன்

1 comment:

  1. அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!

    http://arulgreen.blogspot.com/2011/09/3.html

    ReplyDelete