Tuesday, August 30, 2011

போராளிகளுக்கு விமானம் வந்தது எப்படி ? ரிப்போர்ட்


லிபியாவில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள போராளிப் படையினர் தமது தாக்குதல்களுக்கு உதவியாக உபயோகித்தது, கனடாவில் வாங்கப்பட்ட உளவு விமானம் என்ற விபரம் வெளியாகியுள்ளது. போராளிப் படையினர் வெற்றி பெற்ற பின்னர், இந்த விமானத்தின் கனேடியத் தயாரிப்பு நிறுவனம், விமானம் வாங்கப்பட்ட பின்னணித் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஒன்டாரியோ மாகாணம் வாட்டர்லூவிலுள்ள ஏர்யான் லேப்ஸ் என்ற நிறுவனமே இந்த விமானத்தைப் போராளிப் படையினருக்கு விற்பனை செய்துள்ளதாம். இந்த நிறுவனத்தின் தலைவர் டேவிட் குரோட்ச், �இந்த வருடம் ஜூன் மாதத் தொடக்கத்தில், போராளிப் படையினரின் பிரதிநிதி ஒருவர் எம்மைத் தொடர்புகொண்டு, உளவு விமானம் பற்றி விசாரித்தார். அப்போதே எமக்கு இது லிபியாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு போராளிப் படையினரால் உபயோகிக்கப்படவுள்ள விபரம் கூறப்பட்டிருந்தது� என்று விமானம் வாங்கப்பட்ட பின்னணி பற்றிக் கூறுகிறார்.

இது ஒரு அரசுக்கு (லிபியா) எதிரான யுத்தத்துக்கு உபயோகிக்கப்படவுள்ளது என்பதால், உடனடியாக விற்பனைக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம் என்கிறது கனேடிய நிறுவனம். ஒரு போராளி இயக்கம் விமானம் வாங்க விசாரிக்கும் விபரம் பற்றி கனேடிய பாதுகாப்பு அமைச்சுக்கு உடனே அறிவித்து விட்டது. எந்த விடுதலை இயக்கம் என்ற விபரத்தைக் கேட்டறிந்த கனேடிய பாதுகாப்பு அமைச்சு, ஆலோசனைக்காக ஓரிரு நாட்களை எடுத்துக் கொண்டது. விமானம் லிபியாவில் ராணுவத்துக்கு எதிராக உபயோகிக்கப்படவுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின், விற்பனைக்கு பச்சைக் கொடி காட்டியது கனேடிய அரசு என்ற தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் வாங்க விரும்பிய உளவு விமானம் அளவில் சிறியது. மொத்த நிறையே 2 கிலோவுக்கு குறைவானது. ஆனால், இரவிலும் பகலிலும் போட்டோக்களை எடுக்கக்கூடிய வசதியுடையது. ஒரு போராளிப் படை ஆபரேஷனுக்கு இப்படியான உளவு விமானம்தான் தேவை. ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பறக்க விடப்பட வேண்டும். பெரிய தோற்றம் இருக்கக்கூடாது. இலகுவில் வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும் விதத்தில் இருக்க வேண்டும். விமானத்தின் விலை கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சம் டொலர்.

�ஒரு போராளி அமைப்புக்கு விமானம் விற்பது மிகவும் குழப்பமான நடைமுறை� என்கிறார் டேவிட் குரோட்ச். �ஒரே நபருடன் டீல் பண்ண முடியாது. வெவ்வேறு டைப்பான ஆட்களுடன் டீல் பண்ண வேண்டியிருந்தது. இந்த போராளி அமைப்பு, நேர்த்தியான திட்டமிடலுடைய அமைப்பல்ல என்பது அவர்களுடன் டீல் பண்ணத் தொடங்கிய உடனேயே புரிந்து விட்டது�

மற்றொரு விஷயம், விமானத்துக்கான பைனான்ஸிங்.

விமானத்தை வாங்குவது ஒரு விடுதலை இயக்கம், அரசுக்கு எதிராக யுத்தம் புரிவதற்கு! இதற்கு பணம் கொடுப்பது, வெளிநாடுகளில் வசிக்கும் லிபியர்களும், வேறு சில அமைப்புகளுமே. இதனால், இந்த விமானம் வாங்குவதற்குத் தேவையான பணம், 8 வெவ்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்து சேரவேண்டியிருந்ததாம். இவையெல்லாம் சில நாட்களிலேயே முடிந்துவிட, ஜூலை மாதத்தில் ஸாரிபா செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த சார்லஸ் பார்லோ, இந்த விமானத்தை எடுத்துக் கொண்டு ஆபிரிக்கா சென்றார். லிபியாவில் யுத்தம் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. அரசாங்கத்துக்கு எதிராகப் போராடும் அமைப்புக்கான விமானத்துடன் போய், தலைநகர் ட்ரிபோலியில் உள்ள விமான நிலையத்தில் இறங்க முடியாது அல்லவா.

இவரை விமானத்துடன் மால்டா நாட்டுக்கு வருமாறு தகவல் கொடுத்திருந்தனர் போராளி அமைப்பினர். மால்ட்டாவிலிருந்து லிபியாவுக்கு செல்வதற்கு ஒரு கப்பல் தயாராக இருக்கும் என்று அவருக்கு கூறப்பட்டிருந்தது. கப்பல் ஒன்று தயாராகத்தான் இருந்தது. ஆனால், அது பயணிகள் கப்பல் அல்ல. மீன் பிடிக்க உபயோகிக்கப்படும் கப்பல். தென் கொரிய மீன்பிடிக் கப்பல் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர் போராளி அமைப்பினர். மால்டாவில் இருந்து அந்தக் கப்பல் புறப்பட்டபோது, விமானம் சகிதம் சார்லஸ் ஏறிக் கொண்டார். அதே கப்பலில் பி.பி.சி.யிலிருந்து வந்திருந்த சில கேமராமேன்கள், ஜேர்மன் ரெட் கிராஸினால் வழங்கப்பட்ட இரு மருத்துவ வாகனங்கள், சில செல்போன் தொழில்நுட்ப ஆட்கள் என்று கப்பல் நிறைந்துவிட்டது. கடலில் 18 மணிநேர பயணத்தின்பின் கப்பல், லிபியாவின் துறைமுக நகரமான மிசூராடாவில் நங்கூரமிட்டது.

மிசூராட்டா நகரத்தில் ஏற்கனவே போராளிப் படையினருக்கும் ராணுவத்துக்கும் இடையே யுத்தம் நடைபெற்று முடிந்திருந்தது. ராணுவம் அந்த நகரைக் கைவிட்டு தப்பியோட, போராளிப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் நகரம் வந்திருந்தது. இதனால், இவர்கள் அங்கே போய் இறங்குவதில் சிக்கல் ஏதுமில்லை. இமிகிரேஷன், கஸ்டம்ஸ் என்று ஏதும் இல்லாமல், நேரே கொண்டுபோய் கரையில் இறக்கி விட்டார்கள். அங்கே காத்திருந்த போராளிப் படையினர் சார்லஸை அழைத்துச் சென்றனர். சார்லஸ் அந்த நகரில் இரு தினங்கள் தங்கி, விமானத்தை இயக்குவதற்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருந்தது. அந்த இரு தினங்களுத், நகருக்கு வெளியே இருந்து கடாபி ராணுவத்தினர், நகருக்கு உள்ளேயுள்ள இலக்குகளை நோக்கி ஆட்டிலரி ராக்கெட் தாக்குதல்களை நடாத்திய வண்ணம் இருந்தனர்.

நகருக்குள் ஒரு பக்கமாக ஆட்டிலரி ஷெல்கள் வந்து வீழ்ந்து அதிர்ந்து கொண்டிருக்க, மறு பக்கமாக இந்த விமானத்தை இயக்கப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார் சார்லஸ். தலைநகர் ட்ரிபோலியை போராளிப் படையினர் கைப்பற்றுவதற்கான இறுதிப் போர் தொடங்கியது. போராளிப் படையினரின் நகர்வுக்கு இந்த உளவு விமானம் பெரிதும் உதவியாக இருந்தது. ராணுவத்தினர் எங்கே இருந்தபடி ஆட்டிலரி தாக்குதல்களை நடாத்துகின்றார்கள் என்பதைத் துல்லியமாகப் படமெடுத்து அனுப்பியது இந்த விமானம். இதன் உதவியோடு போராளிகள் பல இடங்களை வென்றனர் என்ற செய்தி இப்போதுதான் கடாபிக்கே சென்றிருக்கும். ஆக மொத்தத்தில் மேற்குலகம் என்ன நினைக்கிற்தோ அதுவே உலகின் பல பாகங்களில் நடைபெற்று வருகிறது. புலிகள் இயக்கத்தை இல்லாதொழிக்க அவர்களே முதலில் நினைத்தார்கள். அதுதான் நடந்தும் முடிந்தது.

1 comment: