Monday, August 8, 2011

தமிழ்ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு: வைகோ தலைமையில் டெல்லியில் 12 ம் திகதி அறப்போராட்டம்


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, உலகெங்கும் மனித உரிமை ஆர்வலர்களின் மனங்களில் அதிர்வு அலைகளை ஈழத்தமிழர் படுகொலை ஏற்படுத்தி விட்டது. தாய்த் தமிழகத்தில் இருந்து பதினெட்டுக்கல் தொலைவில், லட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள், சிங்கள இனவாத அரசால் மிகக்கொடூரமாக ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். உள்ளம் வெடித்துச் சிதறிய முத்துக்குமார் உள்ளிட்ட பதினேழு வீரத் தியாகிகள், தமிழகத்தில் தீக்குளித்து மடிந்தார்கள்.

கோடிக்கணக்கான தமிழர்கள் உள்ளம் விம்மி அழுதபோதும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கையின் முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களும், ஆயிரமாயிரம் கோடிப்பணமும் அள்ளித் தந்து, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முழுமையாக இயக்கி, மன்னிக்க முடியாத துரோகம் செய்தது. ஐ.நா. மன்றத்திலும், மனித உரிமை கவுன்சிலிலும் கொலைக்கார சிங்கள அரசுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தந்து, இனக் கொலைக்குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததை இந்திய அரசு வெளிச்சம் போட்டுக் காட்டவும் தயங்கவில்லை.

ஈழத்தமிழர்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் கொடூரமாக வதைத்து அழிக்கப்பட்ட கோரக்காட்சிகளை லண்டனின் சானல் 4 தொலைக்காட்சி, 2009 ம் ஆண்டு, ஆகஸ்டு மாதத்தில் இருந்தே தொடர்ந்து காணொளிகளாக வெளியிட்டு வருவதால், உலகில் பல்வேறு நாடுகளில் சிங்கள அரசுக்கு எதிராக கண்டனக் குரல் ஓங்கி வருகிறது.

இதுவரை சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த இந்திய அரசு, தன் துரோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இப்போதாவது ஐ.நா. மன்றத்திலும், மனித உரிமைகள் கவுன்சிலிலும், சிங்கள அரசுக்கு எதிர் நிலையை எடுப்பதற்கு முன் வரவேண்டும் என்பதையும், இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ள சிங்கள ராணுவத்தையும், பொலிசையும் உடனடியாக அகற்றவும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதோடு, அக்கிரமமாகக் குடியேறியவர்களை வெளியேற்றவும், இந்திய அரசும், உலக நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் மட்டுமே தீர்வாக முடியும் என்பதால், அதற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவதற்கும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவுமான நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் முன்னெடுப்பதற்குமான கோரிக்கைகளை வலியுறுத்தவும், இதற்கு இந்தியாவில் கட்சி, மாநில எல்லைகளைத் கடந்த ஆதரவைத் திரட்டவும், ஆகஸ்ட் 12 ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில், இந்திய நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள ஜந்தர் மந்தரில், என்னுடைய தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை ம.தி.மு.க. நடத்த இருக்கின்றது.

இதில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான கழகத்தோழர்கள், தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்கள். இந்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளை கழக நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தியும், டெல்லி மாநில ம.தி.மு.க. அமைப்பாளர் பழனிக்குமாரும் செய்து வருகிறார்கள்.

ஈழத்தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பங்கு ஏற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment