Wednesday, March 16, 2011

விஜய் அரசியலுக்கு வரலாமா? கூடாதா?- சீமான். சத்யராஜ், செல்வமணி


வெடிக்க செய்யும் முன்பு திரி பற்ற வைக்கும் நிகழ்ச்சியாக கருதினால் கூட தப்பில்லை சட்டப்படி குற்றம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை! ஜெ. வருவார், விஜயகாந்த் வருவார், விஜய் இருப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி இவர்கள் யாரும் இல்லாமலே சூட்டை கிளப்பியதுதான் ஆச்சர்யம்.

சட்டப்படி எதெல்லாம் குற்றம் என்று பிரித்து மேய்ந்தார் எஸ்.ஏ.சி. ஐம்பது லட்ச ரூபாய் செலவு செய்து தேர்தலில் ஜெயித்துவிட்டு ஐநுறு கோடி ரூபாய் கொள்ளை அடிப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? ஊரில் உள்ள காதலர்களையெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் சேர்த்து வைக்கிற போலீஸ் அதிகாரி தன் மகள் லவ் பண்ணினால் அவர்களை பிரிக்க நினைப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? என்று அடுக்கடுக்காக கேட்டவர், இந்த படத்தை பார்க்காமல் இருந்தால்தான் சட்டப்படி குற்றம் என்று முடித்தார்.
நிகழ்ச்சி சீரியஸாகவே போய் கொண்டிருந்தது குஞ்சுமோன் மைக்கை பிடிக்கிற வரைக்கும்! நாட்டு நடப்பைதான் இந்த படத்தில் சொல்லியிருக்கேன் என்று எஸ்.ஏ.சி சார் சொல்றதெல்லாம் சும்மா. இந்த கவருமென்ட்டுக்கு எதிராதான் சட்டப்படி குற்றம் படத்தை அவர் எடுத்திருக்காரு. நான் படத்தை பார்த்துட்டேன். ஃபயர் மாதிரி வந்திருக்கு. இதை பார்த்துட்டு இந்த கவர்மென்ட்டே அவரு காலை பிடிச்சி செஞ்சதெல்லாம் தப்புன்னு மன்னிப்பு கேட்குதா இல்லையா பாருங்க என்றார் பலத்த நகைப்பொலிக்கிடையில். நான் விஜய் சார் நடிச்ச படங்களையெல்லாம் டிஸ்ட்ரிபூட் பண்ணியிருக்கேன். ரெண்டு படங்களை தயாரிச்சிருக்கேன். ஒரு நாளு கூட அவருகிட்ட கால்ஷீட் கேட்டதில்லை என்று சந்தடி சாக்கில் தனது வெயிட்டிங் லிஸ்ட் நிலையையும் நினைவு படுத்தியவர், நாகப்பட்டினத்தில் அவரு கலந்துகிட்ட கண்டன கூட்டத்துக்கு கூட யாரும் கூப்பிடலை. நான்தான் வலிய போய் சப்போர்ட் பண்ணினேன். விஜய் சார் அரசியலுக்கு வரணும் என்றார் தனது மீசையை தடவிக் கொண்டே! இவரது பேச்சுக்கு ஏக களேபரமான ரெஸ்பான்ஸ் அங்கே!

நிகழ்ச்சி நடந்தது கமலா திரையரங்கத்தில். அதன் உரிமையாளர் சிதம்பரம் செட்டியாரும் எஸ்.ஏ.சியும் பதினெட்டு ஆண்டு கால நண்பர்களாம். "ஒரு விஷயத்தை சொன்னா சார் கோவிச்சுக்கக் கூடாது. நீங்க கட்சி ஆரம்பிங்க. எலக்ஷன்ல நில்லுங்க. அது உங்க விருப்பம். ஆனால் விஜய்க்கு இதெல்லாம் வேணாம். ஏன்னா, இப்படிதான் சிவாஜி சார் கட்சி ஆரம்பிக்கணும்னு சொன்னப்போ நான் வேணாம்னு தடுத்தேன். அவரு கேட்கல. கடைசி காலத்துல எங்க வீட்டுக்கு எந்த அரசியல்வாதியும் வரக் கூடாதுங்கற அளவுக்கு வெறுத்து போயிருந்தார். அதனால்தான் சொல்றேன். விஜய் நல்ல நடிகர். ஹாலிவுட்ல நடிக்கிற அளவுக்கு அவர் வளரணும்" என்று பெரிய சர்ச்சைக்கு விதை போட்டுவிட்டு அமர்ந்தார் சிதம்பரம் செட்டியார்.
விஜய் மாதிரி நல்லவங்களை ஏன் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு தடுக்கிறீங்க? அவர் வரலைன்னா மொள்ள மாரிகளும், முடிச்சவிக்களும்தான் அரசியலுக்கு வருவாங்க. நல்லவங்க ஒதுங்கி போறதுதான் கெட்டவங்களுக்கு வசதியா போவுது என்று கொதித்தார் சீமான். சத்யராஜ், செல்வமணி போன்றவர்களும் இதே கருத்தை வலியுறுத்த எஸ்.ஏ.சி முகத்தில் கொள்ளாத சந்தோஷம் கரை புரண்டு ஓடியது

No comments:

Post a Comment