
அமெரிக்காவின் மிக முக்கியமான மாநில அரசாங்கமான டெக்ஸாஸ் மாநிலம் தனியாகப் பிரிந்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் ஹுஸ்டன் குரோனிக்கல் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டெக்ஸாஸ் மாநிலத்தின் முக்கியமான அரசியல் அமைப்பொன்று அமெரிக்காவின் அரசியல் கொள்கைகளை விமர்சித்தபடி அமெரிக்காவை விட்டு டெக்ஸாஸ் மாநிலம் தனிநாடாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்று கோரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை கடந்த ஐந்தாம் திகதி அவுஸ்டினிலுள்ள கெப்பிட்டல் கட்டிடத்தின் முன் நடாத்தியுள்ளனர்.
தொடர்ந்தும் அமெரிக்காவுடன் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதைத் தீர்மானிப்பதற்காகவும், புதிய அரசியல் அமைப்பொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக் கணிப்பொன்றை நடாத்த டெக்ஸாஸ் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே பிரஸ்தாப ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
டெக்ஸாஸ் தேசிய இயக்கம்(Texas National Movement) எனும் அமைப்பினால் பிரஸ்தாப ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அதன் உப தலைவர்களில் ஒருவரான லோரன் சாவேஜ்(Lauren Savage) வாஷிங்டனிலிருந்து பிரிந்து சென்று தனி அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதே டெக்ஸாஸ் மாநில மக்களின் எதிர்கால சுபீட்சத்திற்கு அத்திவாரமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
டெக்ஸாஸ் மாநிலத்தின் அரசியல் அமைப்புக் கட்சி(Constitution Party) என்றழைத்துக் கொள்ளும் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான எரிக் கிரிக்லண்ட்(Eric Kirkland) என்பவரின் கருத்துக்கேற்ப அம்மாநில ஆளுனர் ரிக் பெரி(Rick Perry) சம்பிரதாயங்களுக்கு மதிப்பளிப்பதன் மூலம் டெக்ஸாஸ் மக்களுக்குப் பெரும் மோசடியொன்றைச் செய்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க சமஷ்டி அரசாங்கம் என்பது வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தமது நாட்டின் பாரம்பரிய குடிமக்களைப் பாதுகாக்கத் திராணியற்ற ஒன்றுக்கும் உதவாத ஒரு அரசாங்கம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் டெக்ஸாஸ் மாநில மக்களின் வரிப்பணத்தை மட்டும் அறவிட்டுக் கொண்டு அம்மாநில மக்களின் பாதுகாப்பைப் பற்றி கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் அம்மாநிலத்திற்குள் வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனி நபர்களை ஊடுருவ வழி செய்யும் வகையில் அமெரிக்க அரசாங்கம் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரஸ்தாப ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்களில் டெக்ஸாஸின் முக்கிய அரச அதிகாரியான லியோ பர்மன்(Leo Berman) என்பவர் முக்கியமானவர். இதற்கு முன்பும் அவர் டெக்ஸாஸ் மாநில மக்களின் நன்மை கருதி பல பொதுநல வழக்குகளைத் தொடுத்து வெற்றி கண்டவராவார்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உண்மையான பிறப்பிடம் குறித்தும் பகிரங்கமாக கேள்வியெழுப்பியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் அண்மையில் சட்டபூர்வமாக்கப்பட்ட ஓரிண திருமணம் தொடர்பான சட்டமூலமும் பாரம்பரிய கலாசாரங்களைக் கொண்ட டெக்ஸாஸ் மக்களால் பெரிதும் வெறுக்கப்படும் ஒரு சட்டமூலமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment