Friday, February 18, 2011

இணையம் இணைத்த இதயம்!


‘காதல் எதையும் சாத்தியப்படுத்தும்’ என்பதற்கு இவர்களே சாட்சி! தேசம் அடைவதற்கான போராட்டத்தில் அகதி களாகத் துரத்தப்பட்ட இருவர், தேச எல்லைகள் கடந்து, நேசம் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சிக் கதை இது!

அகிலன், துஷ்யந்தி… இருவரும் இலங்கை யுத்தத்தின் அகதிகள். 2000-ம் ஆண்டுகளில் துஷ்யந்தி கனடாவுக்கு அகதியாகச் செல்ல, 2006-ல் தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்தவர் த.அகிலன். உறவுகள் அற்ற ஊரில் இவர்களுக் குள் இணையத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, வெப்கேமில் முகம் பார்த்து, அலைபேசியில் குரல் கேட்டுக் காதல் வளர்ந் தது. திருமணம் என வந்தபோது, அது நீண்ட நெடிய போராட்டமானது. பாஸ்போர்ட், விசா, விசாரணை, அலைக்கழிப்பு, அவமானங் கள், புறக்கணிப்புகள்… அனைத்தும் கடந்து பிப்ரவரி 12-ம் தேதி இருவருக்கும் கனடாவில் கல்யாணம். இருவருடனும் ஒரு ‘skype’ பேட்டி…அகிலன் ஆரம்பித்தார். ”கிளிநொச்சி எனது சொந்த ஊர். துஷ்யந்திக்கு மல்லாவி. ஒரே நாட்டில், கிட்டத்தட்ட பக்கத்துப் பக்கத்து ஊர்களில் பிறந்திருந்தாலும், நான் துஷ்யந்தி யைச் சென்னையில்தான் முதன்முதலில் சந்தித்தேன். சென்னையில் நான் தனியே அகதியாகத் தங்கியிருந்தபோது ஈழத் தமிழர் களைச் சந்திப்பதும், அவர்கள் வீட்டில் இலங்கை உணவைச் சாப்பிடுவதுமாக நாள் கள் கழிந்தன. அப்படி நண்பர் ஒருவரை அண்ணா நகரில் சந்தித்தபோது, அந்த வீட்டில் துஷ்யந்தியும் இருந்தாள். பார்த்தவுடன் காதல் பற்றிக்கொள்ளவில்லை. ஆனால், அன்றைக்கு அவர்கள் வீட்டில் எனக்குத் தரப் பட்ட இலங்கைத் தேத்தண்ணி (தேநீர்) பிடித்திருந்தது. அதைத் தயாரித்தது துஷ்யந்தி தான். ஒரு தேத்தண்ணி வழியேதான் எனக்கு அறிமுகமானாள் துஷ்யந்தி.

தூக்கம் வராத ஓர் அதிகாலையில் இணையத்தைத் திறந்தால், அரட்டைப் பெட்டியில் துஷ்யந்தி பெயர். ஒரு ‘ஹாய்’ போட்டுவைத்தேன். அடுத்த நாள் அலாரம் வைத்து எழுந்து பேசும் அளவுக்கு இருந்தது முதல் நாள் பேச்சு. என்னுடன் பேசுவதற்காக எல்லா வேலைகளையும் பறந்தடித்து முடித்துவிட்டு, வேகமாக வந்து இணையத்தைத் திறப்பேன் என இப்போது துஷ்யந்தி சொல்கிறாள். உண்மை யில், அப்போதைய மனநிலையில் எனக்கு யாராவது வேண்டியிருந்தது. நான் பேச, என்னைத் தன் பொருளாகப் பாவிக்க, என் தனிமையையும் துயரங்களையும் போக்க ஒரு துணை வேண்டியிருந்தது. அதை இணையம் வழியும், தொலைபேசி வழியும் எனக்குத் தந்தவள் துஷ்யந்தி. எங்கள் இருவருக்கும் ஒரே இரவும், ஒரே பகலும் வர வேண்டும் என்பது தான் எங்களுடைய ஒரே கனவாக இருந்தது. கனடாவுக்கும், சென்னைக்கும் 13.5 மணி நேர வித்தியாசம். எனது இரவுகள் அவளது பகல்களாகவும், அவளது இரவுகள் எனது பகல்களாகவும் இருந்தன. ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் துஷ்யந்தி எனக்கொரு டைரி அனுப்புவாள். அதில் எழுதப்பட்டு இருக்கும் முதல் வசனமே, ‘இந்த வருசமாவது நானும் நீங்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்’ என்பதாக இருக்கும்.

இணையத்தின் அரட்டைப் பெட்டி எங்கள் முத்தங்களை, கோபத்தை, அழுகையை சொற்களாக்கிச் செரித்துக்கொண்டு இருந்தது.

சினிமா லட்சியத்துடன், ஒரு மீனவனைப் போல கட்டிய சாரத்துடன் ராமேஸ்வரத்தில் வந்து இறங்கியவன் நான். வாழ்க்கை என்றால் என்னவென்று எனக்குக் கற்றுத் தந்தது சென்னை. ஒரு ஈழத் தமிழ் அகதியை,இந்தியா பைத்தியமாகத் தெருவில் அலையவிடும் என்பதைச் சொந்த அனுபவத்தில் உணர்ந்து திடுக்கிட்டேன். அந்தச் சமயம், காதல் என்னை கனடாவுக்கு அழைத்தது. ஆனால், அங்கு செல்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பது அனுபவத்தில்தான் தெரிந்தது” என்று அகிலன் நிறுத்த… வெப்காம் இடம் மாறி துஷ்யந்தி பேசத் தொடங்கினார்.

”இணையத்தில் அறிமுகமாகி நாங்கள் காதலித்த சமயத்தில்தான், இலங்கையில் கடுமையான இறுதிக்கட்ட யுத்தம். ஒரே நேரத்தில் இணையத்தில் போரின் அவலக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே இருவரும் முகம் பார்த்துப் பேசிக்கொள்வது பெரிய துயரம். கனடாவில் எனக்குப் பகலில் வேலை, இரவில் அகிலனுடன் கதைக்கலாம் என்றால், இந்தியாவில் அது இரவு. அகிலன் இங்கே வரலாம் என்றால், அதிலும் பல பிரச்னைகள். அதற்காக நான் இங்கே 21 நாள் விரதம் எல்லாம் இருந்தேன். கடைசியில் அகிலன் வந்துட்டுது” எனச் சிரிக்கிறார். தொடர்ந்தார் அகிலன்.

”அம்மாவைப் பார்க்கவும், கனடா செல்வதற்கு முயற்சி செய்யவும் இலங்கை செல்ல விரும்பினேன். ஆனால், இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வழியாக ஓர் அகதியாக நான் வருவதற்கு எதிர்கொண்ட சிரமங்களைவிட வும், இந்தியாவில் இருந்து எனது சொந்த ஊருக்குத் திரும்பிப் போவதற்கு எதிர்கொண்ட சிரமங்கள் பல மடங்கு. ஈழத் தமிழர் கள் அதை எக்ஸிட் எடுப்பது என்றுசொல்வார் கள். அகதி முகாம், காவல் நிலையம், வீட்டு உரிமையாளரின் கடிதம், பாஸ்போர்ட் ஆபீஸ், இலங்கைத் தூதரகம்… என நடையாக நடக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றிலும் பணம், பணம், எங்கும் பணம். அதிலும் ஈழத் தமிழன் என்றால், பணம் காய்க்கும் மரமாகவும், தீவிரவாதியாகவும், அண்டிப்பிழைக்க வந்த அநாதையாகவுமே நடத்தப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அவமானமாக இருக்கும். துணைக்காக உள்ளூர் நண்பர் ஒருவரை அழைத்துச் சென்றபோது, ‘ஆளைக் கூட்டி வந்து மிரட்டுறியா? எவனும் ஒண்ணும் புடுங்க முடியாது. நான் நினைச்சா, உன் வாழ்க்கைக்கும் உன்னை ஊருக்கே போக முடியாமப் பண்ணிருவேன்’ என பாஸ்போர்ட் ஆபீஸின் பியூன் மிரட்டினார். பலகட்ட அவமானங்களுக்குப் பிறகு, இலங்கை சென்று சேர்ந்தேன். அகதி முகாமில் இருந்து வெளியில் வந்திருந்த அம்மாவைச் சந்திக்க முடிந்தது. ஆனால், பெருங்கொடுமையாக கனடா அரசாங்கம் எனக்கு விசா மறுத்துவிட்டது. மறுபடியும் மூன்று மாதம் இந்திய வாசம். தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, ஒருவழியாக விசா கிடைத்தது.

எத்தனையோ இன்னல்களை, துயரங்களை, இழப்புகளைக் கடந்து எங்கள் திருமணம் நடைபெறுகிறது. எல்லாவற்றையும் எதிர்கொண்டு கடந்துவந்து எங்களை இணைத்து வைத்தது காதலன்றி வேறென்ன?!”

– ஆனந்த விகடன்

சும்மா போனா எப்படி ???ஒரு ஓட்டு பொட்டுட்டு போங்க.................

No comments:

Post a Comment