Friday, February 25, 2011

அமெரிக்காவில் மேலும் 4 இந்திய மாணவர்களின் கண்காணிப்பு கருவி அகற்றம்


வாஷிங்டன், பிப். 25-

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள டிரிவேலி பல்கலைக்கழத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முறையான அங்கீகாரம் பெறாமல் நடத்திய டிரி வேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

அதில் படித்த இந்திய மாணவர்கள் 18 பேர் போலி விசா மூலம் அமெரிக்காவுக்கு வந்ததாக புகார் கூறப்பட்டது. எனவே அவர்கள் கால்களில் ரேடியோ கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதை தொடர்ந்து விசாரணைக்கு பிறகு 7 மாணவர்களின் கால்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவி அகற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் 4 மாணவர்களின் கண்காணிப்பு கருவி நீக்கப்பட்டது.

இதுவரை 11 மாணவர் களிடம் இருந்து கண்காணிப்பு கருவி அகற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை சான்பிரான் சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி சுஷ்மிதா கங்குலி தெரிவித்தார்.

கணிகாணிப்பு கருவி பொருத்தப்பட்ட 18 மாணவர்களில் 15 பேர் இந்திய தூதரகத்தின் மூலம் சட்ட உதவியை நாடினார்கள். 3 பேர் மட்டும் வக்கீல்கள் மூலம் தாங்களாகவே இப்பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இந்திய தூதரகம் தெற்காசிய வக்கீல் சங்கத்தின் மூலம் இப்பிரச்சினையை அணுகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

-மாலை நாளிதழ்-.

No comments:

Post a Comment