தமிழினத்தின் பண்டைய வரலாறானது அந்நியர்களால் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டுவருகின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ். அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலைக்கென குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய மேல்மாடி வகுப்பறைக்கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை 9. மணியளவில் பாடசாலை முதல்வர் வீ. இந்திரலிங்கம் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வகுப்பறைக்கட்டடத்தை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய சிறீதரன்,
இற்றைக்கு உலகிலே தோன்றிய நாகரீக இனங்களுள் இன்றளவும் நாகரீகத்தை பேணிவரும் எம்மினத்தின் சிறார்களான நீங்கள் எமது முன்னோர்களின் பண்பாடுகள் கலாச்சாரங்களை அவர்களால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட அறிவியல்களை ஆழமாக ஆராய்ந்து அதன் நுணுக்கங்களை எமது எதிர்கால சந்ததியினர்க்கும் பயன்படும் வகையில் புதிய அணுகுமுறைகள் மூலம் வளமான ஓர் தேசிய இனமாக ஒன்று சேர்க்க வேண்டிய காலத்தில் நீங்கள் தற்போது உள்ளீர்கள் என்றார்.
திட்டமிட்டு அந்நியர்கள் எல்லோராலும் எமது பண்டைய வரலாறுகள் சிதைக்கப்பட்டு வந்துள்ளது. எனவே உங்களின் காலத்தில் உங்களால் பொறுப்பெடுக்கப்படவேண்டிய பல விடயங்கள் உங்கள் முன் உள்ளன. தற்போதைய சூழ்நிலைகளை எண்ணி உங்கள் கனவுகளை குறுகிய வட்டமாக்கி விடாதீர்கள்.
எனவே உலகம் உங்களை வியந்து பார்க்கும் அளவிற்கு உங்கள் கனவுகள் விரிவடைய வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வே. சிவயோகன், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் சி.நந்தகுமார் ஆகியோர் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment