Monday, April 9, 2012

விடுக்கக் கோருகிறது அவுஸ்திரேலியா! கண்டுபிடிக்கக் காரணத்தைக் கேட்கிறது இலங்கை!!

நன்கு திட்டமிட்டுக் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மக்கள் கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணத்தை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவுஸ்திரேலிய வெளியுறசு அமைச்சர் பொப் கார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தம் நாட்டுப் பிரஜையான குணரட்ணத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கருதும் நிலையில் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் இந்த விவகாரத்தை நேரடியாக இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதனால்தான் அவுஸ்திரேலிய செனட் சபையின் உறுப்பினர் என்ற வகையில் எமது வெளியுறவு அமைச்சரிடமும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவரிடமும் நான் இதனை எடுத்துச் சென்றிருக்கிறேன்” என்று லீ ரெய்னன் கூறியுள்ளார். கடத்தப்பட்ட பிரேமகுமாரின் மனைவியான டாக்டர் சம்பா சோமரட்ணவை தான் தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசியதாகக் கூறியுள்ள செனட்டர் லீ, இந்த விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளை பிரேமகுமாரை கைது செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவே உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியிருப்பது குறித்து தான் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் லீ அவர்கள் கூறியுள்ளார். இதற்கிடையே பிரேம்குமார் குணரட்ணத்தை தாம் தேடிக் கண்டுபிடிப்பதாயின் அவர் எப்போது இலங்கை வந்தார் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோத்தபாய ராஜபக்ச அவர்கள் கூறியதாக இலங்கை செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியான பெயருடன் எவரும் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்ததாக அந்தச் செய்தி கூறியுள்ளது. இது குறித்து அவுஸ்திரேலிய செனட்டர் லீ ரெய்னன் அவர்களிடம் கேட்டபோது, ”இலங்கை அரசாங்கம் இப்படிக் கூறுவது குறித்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் பிரேம்குமார் குணரட்ணத்தின் மனைவியுடன் இன்று பேசினேன். அவர் இந்தச் சம்பவம் குறித்து மிகுந்த கவலையில் இருக்கிறார். அத்துடன்,தனது கணவர் இலங்கையில்தான் இருக்கிறார் என்பதிலும், ஏப்ரல் 6 ஆம் திகதி கடத்தப்பட்டார் என்பதிலும் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். அதனால், இந்த விடயத்தை மிகவும் உயர் மட்டத்துக்கு எடுத்துச் செல்லுமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துவேன்” என்று செனட்டர் லீ ரெய்னன் கூறினார். அதேவேளை முன்னதாக பிரேம்குமார் குணரட்ணத்தின் மனைவியான டாக்டர் சம்பா சோமரட்ண அவர்கள், இது குறித்து ஐநாவின் மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தனது கணவரான பிரேம்குமார் குணரட்ணம் என்று அழைக்கப்படும் ரட்ணாயக்க முதியன்சலாகே தயாலால் கடத்தப்பட்டதாக தெளிவாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடிதத்தில் தனது கணவரின் கடத்தல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் மீதே குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கிடையே, இலங்கையில் மாற்று கருத்துக்கொண்டவர்கள் கடத்தப்படும் சூழ்நிலை தொடர்வதால், அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது என்று கோரி அவுஸ்திரேலியாவில் ஒரு ஆர்ப்பாட்டம் இன்று நடந்துள்ளது. இதுவரை கடந்த இரு மாதங்களில் இலங்கையில் 29 பேர்வரை கடத்தப்பட்டதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ள செனட்டர் லீ ரெய்னன், தமது சொந்த அரசியல் கருத்துக்களுக்காக ஒரு அவுஸ்திரேலியப் பிரஜை இலங்கையில் ஆபத்துக்குள்ளாவது இது முதல் தடவை அல்ல என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment