Tuesday, January 17, 2012

இராணுவத்திற்குக் காணி சுவீகரிப்பு! இலங்கையை விட்டு தமிழர்கள் வெளியேற்றப்படுவார்களா?

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதற்கப் பால், நாளாந்தம் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் குறித்து நினைக்கும் போது பேரினவாதம் ஒருபோதும் திருந்தப் போவதில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. தமிழ் மக்களின் உரிமை என்பது வேறு ஒரு கோணத்தில் சிந்திக்கப்படுகின்றது. ஆனால், இங்கோ படையினருக்கான காணி சுவீகரிப்பு என்பது தமிழ் மக்களின் இருப்பிற்கே உலை வைப்பதாக அமைகின்றது. தனியார் காணிகள், வீடுகளில் படை முகாம்களை வைத்திருப்பதால் அதற்குரித்தான மக்கள் இருக்க இடமின்றியும் பொருளாதாரப் பாதிப்பையும் ஏக நேரத்தில் அனுபவிக்கின்றனர். படையினர் என்ற கோதாவில் தனியாரின் காணிகளை சுவீகரம் செய்வதென்பது மிகப் பெரும் உரிமை மீறலாகும். சில இடங்களில் கேட்டுக்கேள்வியின்றி காணிகளைக் கையகப்படுத்தி அதில் நிரந்தரமாகப் படை முகாம் அமைக்கும் பணிகளும் நடந்து கொள்கின்றன. தமிழர் பிரதேசங்களில் தனியார் காணிகளை சுவீகரம் செய்வது தொடர்பில் பல முறைப்பாடுகள் எழுந்தாலும் அது தொடர்பில் நேர்த்தியான பதிலை வழங்குவதற்கு அரசு ஒருபோதும் தயாரில்லை. அதேநேரம் அரச அதிகாரிகளுக்கும் இது விடயத்தில் தெளிவின்மை நிலவுகின்றது. என்னிடம் இருக்கக்கூடிய ஒரேயொரு சொத்து காணி மட்டுமே. அந்தக் காணியும் படையினரிடம் வசப்பட்டுவிட்டதெனில் எனக்கான வாழ் வாதாரம் என்ன? என்று கேட்கக்கூடிய ஒரு தமிழ்க் குடிமகனுக்கு இந்த நாடு கூறக்கூடிய பதில் என்னவாக இருக்க முடியும்? போரினால் இழந்தவை ஏராளம். சொத்துகள் மட்டுமின்றி எக்காலத்திலும் ஈடுசெய்ய முடியாத உயிரிழப்புக்களையும் தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டனர். நிலைமை இதுவாக இருக்கையில், இப்போது காணி சுவீகரிப்பு என்பது தமிழ் மக்களை மேலும் அவலத்திற்குள் தள்ளிவிடுவதற்கும், பேச்சுவார்த்தை, தெரிவுக்குழு என்று எப்பெயர் சூட்டி இனப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கி பயணிப்பு நடந்தாலும், முதலில் இந்த நாடு தமிழர்களுக்கும் சொந்தமானது என்ற மனநிலை ஆட்சியாளர்களிடம் ஏற்பட வேண்டும். இத்தகையதொரு மனநிலையில்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது. அரசு செய்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நீதிமன்றம் செல்வதென்பது நடைமுறை சாத்தியமற்றதென்பதால், காணி சுவீகரிப்பு உள்ளிட்ட விடயங்களில் அரசும், படைத்தரப்பும் ஈடுபடும் போது, அது தொடர்பில் மாற்று வழிமுறைகளை தெரிந்தெடுக்க தமிழ் அரசியல் தலைமைகள் தயாராக வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் அதேசமயம், தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் உரிமை விவகாரங்களை பாதிக்கக்கூடிய எந்த விடயத்தையும் அரசு நகர்த்தக்கூடாது என்பதை உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும். இல்லையேல், தீர்வு கிடைத்தாலும் எங்கள் இறைமையை பாதுகாக்க முடியாது என்ற நிலை உருவாகிவிடும். இது இவ்வாறிருக்க இராணுவத்திற்கென தமிழர் காணிகளை சுவீகரித்து அவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றும் ஒரு திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு தற்போதைய அரசின் செயற்பாடுகள் அத்திபாரமாக அமைகின்றது என புத்திஜீவிகளால் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் அதீத அக்கறை எடுத்து மாற்று வழி மூலம் உடனடித் தீர்வு காண வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக அமைகின்றது.

No comments:

Post a Comment