Sunday, January 29, 2012

நடுவீதியில் பொதுமக்கள் மீது படையினர் தாக்குதல்!! கிளி நொச்சி பரந்தன் சந்தியில் அராஜகம்!

பஸ் நடத்துனருக்கும் சிவல் உடையில் பயணித்த படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் பயணிகளும் படையினரால் தாக்கப்பட்டனர். இதையடுத்து பஸ் சாரதி, நடத்துனர், படையினர் நால்வர் என 6 பேரைக் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பஸ்ஸில் பயணித்த பயணிகள் வீதியில் இறக்கப்பட்டு பஸ்ஸூம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப் பட்டது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் கிளி நொச்சி பரந்தன் சந்தியில் நடைபெற்றது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி தனியார் பஸ் வந்துகொண் டிருந்தது. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நகரப் போக்கு வரத்துப் பொலிஸாரால் பஸ் மறிக்கப்பட்டது. மிதி பலகையில் பயணிகளை ஏற்றிய மைக்காக பஸ் நடத்துனரிடம் குற்றப் பணம் அறவிடப்பட்டது. பின்னர் பஸ் புறப்பட ஆயத்தமாகியதும் மிதி பலகையில் நின்ற பயணிகளை உள்ளே செல்லுமாறு பணித்தார் நடத்துனர். இதன் போது மிதி பலகையில் சிவில் உடையில் நின்ற படையினருக்கும் நடத்துனருக்கும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அது முற்றி கைகலப்பாக மாறியது. சம்பவத்தை அறிந்து அருகில் நின்ற இராணுவத்தினர் சிலரும் வந்து சேர்ந்தனர். நடத்துனரும் பயணிகள் சிலரும் படையினரால் தாக்கப்பட்டனர். பயணிகள் தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி, நடத்துனரையும் இராணுவத்தினர் நால்வரையும் கைது செய்து கொண்டு சென்றனர். பயணித்த பயணிகள் இறக்கப்பட்டு பஸ்ஸூம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் நடு வீதியில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் வேறு பஸ்களில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தனர். இரவு வேளையில் திடீரெனப் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் யாழ்ப்பாணம் நோக்கி வந்த பஸ்களில் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வீடு வந்து சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. படையினரும் பொது மக்களும் மோதிக்கொள்ளும் இத் தகைய சம்பவங்கள் வன்னியில் அதிகம் நிகழ ஆரம்பித்துள்ளன. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கும் பஸ் நடத்துனர் ஒருவருக்கும் இடையே கைகலப்பு இடம் பெற்றது. வேறு அசம்பாவிதங்கள் எவையும் நடை பெறவில்லை. இதனை அடுத்து அவர்களைக் கைது செய்து தாம் விசாரித்து வருவதாகவும் நேற்றிரவு கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment