Sunday, December 25, 2011

கொழும்பில் திகிலூட்டுகிறார் 'செக்யூரிட்டி ஜோசப்'! (காணொளி இணைப்பு)

'செக்யூரிட்டி ஜோசப்' ஒரு குறுந் திரைப்படம். எட்டே நிமிடங்களில், ஆறு கதாபாத்திரங்களை மட்டுமே சித்திரித்து உருவாக்கப்பட்ட ஒரு திகிலூட்டும் குறுந்திரைப்படம் இது. இறந்த ஒருவரின் ஆவியை முக்கிய கதாபாத்திரமாக உருவகித்து, இப்படம் உருவாக்கப்பட்டடுள்ளது. இத்திரைப்படத்தை பார்க்கும் போதே, அடுத்து என்ன நடக்க போகின்றதோ என்ற ஆவல் - எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இது படமாக்கப்பட்டுள்ளது. நம்நாட்டுக் கலைஞர்கள் என்பதைவிட நம் நாட்டு இளைஞர்களால் இவ்வாறு ஒரு குறுந்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இலங்கைத் தமிழ் சினிமாத்துறையானது இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பின்னடைவைத்தான் கொண்டிருக்கின்றது என்பது பலரதும் கருத்தாக இருக்கின்றது. ஆனால் அதுவல்ல உண்மை. தற்போது இலங்கையில் சிறந்த கலைஞர்கள் இருக்கின்றனர். இவர்களால் பல படங்கள், பாடல்கள் உருவாக்கப்படும் போதெல்லாம் அது சமூகத்தில் இலைமறை காயாகவே இருந்து வந்துள்ளன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. தமது படைப்புக்களைச் சமூகத்தின் முன் கொண்டு வரவேண்டியது எமது கலைஞர்களின் கடமையாக இருக்கின்றது. அதேவேளை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுவதோ தமக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதோ எந்த வகையிலும் உவப்புடையதல்ல. இதனைத் தவிர்த்து ஏனையோரும் எமது படைப்புக்கள் மீது அதிக ஆர்வம் கொள்ளும் வகையில் ஊக்கத்துடன் செயலாற்ற வேண்டிய தவசியம். இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்பது போல், எமது நாட்டுக் கலைஞர்களின் படைப்புக்களை விடுத்து, அயல்நாட்டுக் கலைமீது நாட்டம் கொள்வதே நம்மவரின் வாடிக்கையாகிவிட்டது. எது எவ்வாறாயினும் நம் நாட்டுக் களைஞர்களை ஊக்குவிக்க ஊடகங்களின் பங்களிப்பும் அத்தியாவசியமாகிறது. குறிப்பாக நம் நாட்டுத் தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள், எமது கலைஞர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களின் கலைப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான், நம் நாட்டில் இலைமறைகாயாகப் பரவிக் கிடக்கும் ஈழத்துக்கலை ஆற்றல்கள் வெளிக்கொணரப்படும். எமது ஈழக் கலைஞர்கள் சிலரின் அண்மைய கலை வெளிப்பாடுதான் 'செக்யூரிட்டி ஜோசப்' எனும் குறுந்திரைப்படம். ஒரே இரவில் எடுக்கப்பட்டுள்ள இந்தக் குறுந்திரைப்படக் கலைஞர்களின் முயற்சி திருவினையாகவே வேண்டும். இவர்களின் முயற்சியும் நம் நாட்டுத் திரைப்படத்துறை மீதான ஆர்வமும் உண்மையில் பாராட்டுக்குரியதே. இவர்களின் இந்த அரிய முயற்சி, எதிர்காலத்தில் மேலும் பல திரைப்படக் கலைஞர்கள் நம் நாட்டில் உருவாவதற்கு நிச்சயம் வழிகோலும் என்பது திண்ணம். இறந்த ஒருவரின் ஆவியை முக்கிய கதாபாத்திரமாக உருவகித்து, panasonic p2 Full HD camera உதவியுடன், நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட அற்புதப் படைப்பே 'செக்யூரிட்டி ஜோசப்'. படத்தின் படைப்பாளிகளான சி. ஜெகன், ஷியாம், ஆர்.விஜிதகுமார், மெல்வின் மிரான்டா, லக்ஷ்மன், எஸ். சத்தியேந்திரன் ஆகியோருக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகவதோடு இது போன்று சமூக சிந்தனை கூறும் பல திரைப்படங்களை உருவாக்க வேண்டும். Interview with 'Security Joseph' short film team

No comments:

Post a Comment