Sunday, December 18, 2011

இருப்பாய் தமிழா நெருப்பாய் ! – கவிஞர் காசி ஆனந்தனின் திரைப்பாடல்


‘இருப்பாய் தமிழா நெருப்பாய் – இருந்தது போதும் இதுவரை செருப்பாய் ‘ என்று உணர்ச்சியை வளப்படுத்தும் இக்கவிதை வரியை தமிழ் நேசிப்பாளர்கள் எவரும் அறிந்திருப்பர்.தமிழீழ விடுதலைப் போராட்ட பாடலில் இருந்த இந்த வரிகளும் அதை புனைந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் தமிழ் திரைப்படப் பாடல் துறைக்கு வர வேண்டும் என்பது கோடிக்கணக்கான தமிழர்களின் ஆசை.

ஈழ சோகங்களை இலக்கிய வடிவில் படைத்திருக்கும் ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற புகழேந்தி தங்கராஜின் திரைப்படம் மூலம் தமிழர்களின் அவ்விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார் காசி ஆனந்தன்.



“இருப்பாய் தமிழா நெருப்பாய் … நீ!
இழிவாய் கிடக்க செருப்பா… நீ!

ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிறதே…
துடித்து துடித்து உடல் சிதைகிறதே…
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே…
எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள் – (தணிக்கையில் நீக்கப்பட்ட வரி)
அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்? – (தணிக்கையில் நீக்கப்பட்ட வரி)

எரிமலை தணியுமா… தண்ணீரில்
கடல் அலை கரையுமா… கண்ணீரில்
முழங்கிடும் சங்கே முழங்காயோ
விலங்குகள் உடைக்க பிறந்தாயோ
அடிமையாய் வாழும் நிலம் ஒன்று
விடியலைக் காணும் களம் இன்று
வெட்டவெளியோ வீடானது…
பட்டினியோ உணவானது…
போராடு நீ வீரோடு!

மின்னலின் தொடர்ச்சியே… இடியாகும்
இன்னலின் தொடர்ச்சியே… விடிவாகும்
கொந்தளித்து அறம் வெடிக்காதோ
கொடியவர் மூச்சை முடிக்காதோ
ஆயிரம் அலைகளை தோளாக்கு
அடிமைக்கு விடுதலை நாடாக்கு (தணிக்கையில் நீக்கப்பட்ட வரி)
மாந்தர் உயிரோ நிலையற்றது…
மானம்தானடா நிகரற்றது…
போராடு நீ வீரோடு! ”

இப்படத்திற்கு பாடல் எழுத தூண்டியது எது ? என்றதற்கு, அவர் ” உச்சிதனை முகர்ந்தால் மட்டகளப்பு நாவக்குடா 13 வயது சிறுமி புனிதவதி போரின் பெயரால் சீரழிக்கப்பட்டதை உணர்த்தும் கதை. ஆனால் அது புனிதவதி பற்றிய கதை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழீழ தேசத்தின் சோக வரலாறு. எம் தேசத்தில் பல்லாயிரம் பெண்கள் பாலியல் வல்லுறவால் சீரழிக்கப்பட்டுள்ளனர். 89 ,000 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். இப்படம் ஒரு தேசத்தின் பெருமூச்சு.. ஒரு தேசத்தின் விக்கல்.. ஒரு தேசத்தின் கண்ணீர்.. ஒரு தேசத்தின் துடிப்பு.

ஈழத்தில் சிங்கள மயமாக்கலால் பெண்சமுதாயம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் திரைப்படமே ‘உச்சிதனை முகர்ந்தால்’. துப்பாக்கி, குண்டுகள், பீரங்கிகளை போலவே இலக்கியமும், கதையும் விடுதலையை மீட்டெடுக்கும் போராட்டக் கருவி தான் என்பதை இப்படம் உணர்த்தும்.

நான் எந்த உணர்ச்சியுடன் பாடலை எழுதினேனோ அவ்வுணர்ச்சியோடு இசையமைத்துள்ளார் இமான்” என்றார் காசி ஆனந்தன்.
” கவிஞர் காசி ஆனந்துடன் இசைப்பணி செய்தது ‘என் வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம் ” என்ற குறிப்பிட்டுள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்.

ஆனால் அவரின் வீரிய நெருப்பு வரிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளது திரைப்பட தணிக்கை துறை. ‘ இருப்பாய் தமிழா நெருப்பாய் ‘ என்ற எடுப்புடன் (பல்லவி) தொடங்கும் பாடலில் பின்வரும் வரிகளான ‘எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்,அவள் தாய் மண்ணை எங்கே புதைப்பார்கள் ! அடிமைக்கு விடுதலை நாடாக்கு’போன்ற பாடல் வரிகளை வெட்டியுள்ளனர் திரைப்பட தணிக்கை துறையினர்.

உணர்ச்சி தூண்டும் விதத்தில் இவ்வரிகள் அமைந்திருந்ததால் இவை நீக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்த தணிக்கை முறை கைவிடப்பட்டு சுதந்திரமான படைப்புகளுக்கு அங்கீகாரம் தருகின்றன. அப்படி நம் நாட்டில் இல்லாவிட்டாலும், சிலர் மனதை குளிர்விக்க பலர் மனதை வாடசெய்யப்படும் தணிக்கைகளை குறைக்கலாம் .

ஓர் படைப்பை தணிக்கை செய்வது என்பது ‘ஓர் படைப்புக்கு முழு சுதந்திரம் இல்லை’என்பதை உணர்த்தினாலும், ஒரு படைப்பை தணிக்கை செய்வது நாகரிகம் அற்ற தன்மையே என்பது பல படைப்பாளிகள் நெஞ்சில் சுமக்கப்படும் கருத்து.

No comments:

Post a Comment