Wednesday, November 23, 2011

மாவீரர் தினத்தை குழப்பும் ‘கணக்கு மா அதிபர்கள்’!- ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்


‘காகத்திற்கு கனவிலும் ஏதோ நினைவு’ என்பார்கள். சிலர் பிறந்த காலநேரமோ என்னவோ அவர்களுக்கு சர்ச்சை, பிரச்சனை இல்லாவிடில் அவர்களது வாழ்க்கையில் நிம்மதி கிடையாது.

இவர்களுக்கு உலகில் தெரியாத விடயங்கள் ஒன்றும் இல்லை. மேதாவி போல் நடிப்பதும், நாரதர் போல் காண்பிப்பதும் இவர்களது சிறந்த பணி. பாவங்கள், சட்டியில் இருந்தால் தானே ஆகப்பையில் வருவதற்கு.

இப்பொழுது மாவீரர் தினம் நடைபெறும் காலம். இதை காடையரும் மேதாவிபோல் நடிப்பவர்களும் தமக்கு ஏற்ற முறையில் பாவிக்கிறார்கள். இந்த கில்லாடிகளினால் பிரச்சினைகள், சர்ச்சைகள் தினமும் அதிகரிக்கப்பட்டு அதில் இன்பம் அடைகிறார்கள்.

இந்த காடையிருடன் தொடர்பில் உள்ளவர்கள் ஒன்றை மட்டும் மனதில் கொள்ள வேண்டும். கானல் நீரான இவர்களிடம், இதுவரையில் நீங்கள் கூறிய விடயங்கள் யாவும், ஏற்கனவே காடையர்களின் நாடாக்களில் பதிவு செய்யப்படப்பட்டுள்ளது. என்று இந்த காடையரை நீங்கள் எட்ட வைக்க எண்ணுகிறார்களோ, அன்று உங்கள் சம்பாஷணையிலிந்து பதிவு செய்யப்பட்ட நாடாக்கள் யாவும் சந்திக்கு வந்து நீங்கள் ‘பிளாக் மெயில்’ செய்யப்படுவீர்கள்.

யாரும் விளக்கம் கொடுக்கவில்லை?

ஏன் இன்னுமொரு மாவீரர் தினம் நடைபெற வேண்டும் என்பதற்கு இன்றுவரை யாரும் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. உண்மையை கூறுங்கள், இராண்டாவது மாவீரர் தினம் நடத்துவது பற்றி உங்களுக்கு அடிப்படையாக யார் இந்த ஊக்கத்தை, ஆலோசனையை கொடுத்தார்கள்? ஏன் இந்த வீண் வம்பு.

அநாமதேயமாக வெளியாகும் துண்டுகளில், இரண்டாவது மாவீரர் தினத்தை செய்யவுள்ளவர்கள் பற்றி பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே உள்ளன என்பதை யாவரும் அறிவார்கள். இக் குற்றச்சாட்டுகளை இதுவரையில் யார் யார் பெரிதாக எடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் நவம்பர் 27ம் திகதி இரண்டாவது மாவீரர் தினம் உலகில் நடைபெற்றால், இரண்டாவது மாவீரர் செய்பவர்கள் பற்றி நிச்சயம் தமிழீழ மக்கள், விசேடமாக புலம்பெயர் வாழ் மக்கள் ஓர் திடமான முடிவை கொள்வார்கள் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது.

தயவு செய்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில், தவறான பிழையான ஆலோசனைகள், வழிகாட்டல் மூலம் ஈழத் தமிழ் மக்களுக்கு இழுக்கு ஏற்படுத்தும் எந்த செயலையும் செய்யாதீர்கள்.

கானல் நீரான காடையரை நம்பி, நவம்பர் 27ம் திகதி இரண்டாவது மாவீரர் தினத்தை செய்ய முனையாதீர்கள். இந்த காடையரை பற்றி சில குறிப்புகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

கூடுதலான சந்தர்ப்பங்களில் தேசியத் தலைவர், தமிழ் செல்வன், காஸ்ரோ எனப்படும் மணிவண்ணன் போன்ற முக்கிய தளபதிகள் தம்முடன் கலந்தலோசித்து தான் சகல வெளிநாட்டு கிளைகளுடனான செயற்பாடுகளை நடத்தியது போல் கதை விடுகிறார்கள். இந்த பெயர்வழிகள் அம்புலிமாமா, கல்கி போன்ற சஞ்சிகைகளுக்கு நல்ல கற்பனை கதைகள் எழுதி பரிசு பெறக்கூடியவர்கள். என்ன செய்வது, ‘பேய்காட்டப்படுபவன் இருக்கும் வரை பேய்காட்டுகிறவனும் இருப்பான்’ என்பது முதுமொழி.

‘கணக்கு மா அதிபர்கள்’ (Auditor General)

கணக்கே தெரியாத இவர்கள், தண்டிக்கப்பட்ட நாள் - 1990ம் ஆண்டு முதல் தாம் கடற்கரை தாளங்காயாகி விட்டதனால், தங்களை தாங்களே தமிழீழ மக்களின் ‘கணக்கு மா அதிபராக’ (Auditor General) நியமித்து, அன்றிலிருந்து இன்றுவரை தமது உண்மையான பெயரை மறைத்து, பொய்யான பெயருடன் விதண்டாவாதம் கதைப்பது தான் இவர்களது தொழில்.

தமது உண்மையான பெயரை யாரும் அறிந்தால், தம்மை பற்றிய உண்மைகளை அறிந்து விடுவார்கள் என்ற காரணத்திற்காக, பொய் பெயரில் வாழ்பவர்கள் தான் இக் காடையர்கள்.

இதேவேளை இந்த காடையர் கூட்டம் கணக்கு விடயத்தில் நேர்மையானவர்களும் அல்ல. சில உதாரணத்தை இங்கு தருகிறேன்.

1990ன் பிற்பகுதியில் இந்த காடையரும் மேதாவிபோல் நடிப்பவர்களும், ஓர் தமிழ் நாட்டின் பாதிரியாருடன் இணைந்து, ஐரேப்பாவில் ஓர் ஊடகம் மூலமாக சேர்த்த நிதி யாவும் விமானம் நிலையம் ஒன்றில் தொலைந்ததாக கதைவிட்டார்கள். இதற்கு யார் பொறுப்பு? எங்கே இப் பணம்? இதற்கு கணக்கு காட்டப் போவது யார்? இது மக்கள் பணம் இல்லையா?

(2) அடுத்து ஐரோப்பாவில் ஓர் ஊடகம் நடத்துவதற்கு பெருந்தொகையான பணம் தேவை. இப்படியான நிலையில் சாதாரண வேலை பார்ப்பவர்கள், எப்படியாக ஊடகத்தை ஆரம்பித்து நீண்ட காலமாக நடத்த முடியும்?

இதற்கு யார் நிதி வழங்குகிறார்கள்? இதற்கு யார் கணக்கு காட்டப் போகிறார்கள்? பிதற்றாமல் உண்மையை கூறுங்கள்.

தமது ஊடகம் நடத்துவதற்கு கடைத்தெருவில் வியாபாரிகளிடம் விளம்பரப் பிச்சையும் எடுக்கிறார்கள்? இது பொதுமக்கள் பணம் இல்லையா? இதற்கு கணக்கு எங்கே?

இவர்களது ஊடகத்தில் எத்தனை முழுநேர, பகுதிநேர ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்? இவர்கள் யாவரும் காற்றை குடித்து வாழ்கிறார்களா? இல்லை கொடுப்பனவு கொடுக்கிறீர்களா? அப்படியானால் யாரிடமிருந்து உங்களுக்கு பணம் வருகிறது? பொதுமக்களிடம் தண்டல் செய்த பணத்திலிருந்தே இந்த காடையர்களின் ஊடகமும் நடைபெறுகிறது என்பது தான் உண்மை.

மற்றவர்களிடம் கணக்கு கேட்பதற்கு முன்னர், உங்களிடம் உள்ள பொதுமக்களின் பணத்திற்கு முதலில் கணக்கு சொல்லுங்கள்.

காடையரும் மேதாவிபோல் நடிப்பவர்களும் தமது ஊடகத்தை ஆரம்பிப்பதற்கு, தாம் வாழும் நாட்டில் அனுமதி கேட்ட பொழுது, உங்கள் ஊடகம் ‘தமிழீழ விடுதலை புலிகளுக்கு’ பிரச்சார வேலை செய்யப் போகிறதுவென குற்றச் சாட்டப்பட்ட பொழுது, லண்டனில் உள்ள ஓர் நபர் மூலம், தாம் வாழும் நாட்டில் உள்ள சிறிலங்கா தூதுவராலயத்திலிருந்து ‘தாம் தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் இல்லையென்று’, கடிதம் பெற்று கொடுத்து தான் தமது ஊடகத்திற்கு அனுமதியை பெற்றார்கள்.

ஆகையால் இவர்கள் மாவீரர் தினத்தை குழப்பி சிறிலங்கா அரசிற்கு துணை போவது புதுமையான விடயம் அல்ல.

‘காற்றுக் குடித்து வாழும் கடையர்கள்' தமக்கு பிடிக்காத சகலரும் மக்கள் பணத்தில், கொடுப்பனவில் வாழ்கிறார்கள் என்பது பற்றி கூடுதாலாக அலட்டுவது வழக்கம். காரணம் ‘குற்றம் உள்ள மனம் குறுகுறுக்கும்' என்பது போல், 1989ம் தம்மை முழுநேர உறுப்பினராக்கி தமக்கு கொடுப்பனவு கொடுக்கப்படவில்லை என்பதால், தாம் வாழும் நாட்டில் ஊரையே குழப்பியவர்கள் தான் இவர்கள். ஓர் விடுதலைப் போராட்டத்திற்கு உண்மையில் பிரயோசனமாவர்கள் என்றால், அதுவும் அன்று மனிதவலு குறைந்த நேரத்தில் இவர்கள் துரத்தப்பட்டிருக்க மாட்டார்கள்!

அது மட்டுமல்ல, இந்த காடையரின் உடன்பிறப்புக்கள் தான் மக்கள் பணத்தில், கொடுப்பனவில் பல தசாப்தங்களாக வாழ்ந்தார்கள், திருமணம் செய்தார்கள், பிள்ளைகளும் பெற்றார்கள்.

இவர்களின் உறவினர் தான் தமது சுயநலத்திற்காக, தமக்கு அகதி அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, முழுப்பொய்கள் அடங்கிய பத்திரிகை செவ்வி ஒன்றை கொடுத்து தம்மை நிலைபடுத்திக் கொண்டவர்கள்.

இந்த காடையர்களுக்கு துணிச்சலிருந்தால் இவைபற்றி இவர்களது கள்ளுத் தவறணை அலட்டலில், வாசகர்களுக்கு விளக்கம் கொடுப்பார்களா?

ஏற்கனவே தொப்பி அளவானவர்கள் போட்டுள்ளார்கள், இதையும் விரும்பினால் போட்டுக் கொள்ளுங்கள்.

இரண்டாவது மாவீரர் தினத்திற்குள் மறைந்து நின்று, மற்றவர்கள் மீது சக்கைகள் எறிகிறீர்கள். ஆனல் நீங்கள் கண்ணாடி அறையில் இருக்கிறீர்கள் என்பதை மட்டும் மறந்துவீட்டீர்கள்.

உங்கள் ஊடகத்தின் பெயரைச் சொல்லி உங்களுக்கு ஓர் அங்கீகாரம் தரவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? தொடர்ந்து சக்கைகள் எறியுங்கள் கூடிய விரைவில் பொதுமக்கள் அங்கீகாரம் தருவார்கள்.

இக் காடையர்கள், முன்பு ஒரு பத்திரிகையாளருக்கு சில நிபந்தனைகளை முன்வைத்து, ஒரு நாட்டின் காவல்துறையினர் செய்ய எண்ணாத விடயங்களை எல்லாம் செய்தார்கள் என்பதை யாவரும் அறிவோம். உலகில் பித்தலாட்டங்களுக்கு ஒரு பொழுதும் இடமில்லை. தீக் கோழி வாழ்க்கை நீண்ட காலம் நீடியாது.

நான் ஒருபொழுதும் இரட்டைவேடம் போடவேண்டிய அவசியமில்லை!

என்னை பல புதிய பழைய பெயர்வழிகள் சந்தித்து உரையாடுவது வழக்கம். அதற்காக என்னுடன் யாரும் இரண்டு மாவீரர் தினம் தாம் நடத்தவிருப்பதாக கூறியதே இல்லை. ஆனால் புதியவர்கள் பலரிடம், மக்களுக்கு முன் காட்சியளிக்க தயங்கிய பல கடற்கரை தாளங்காய்களுக்கும், விலாசமற்றவர்களுக்கும் நல்ல அங்கீகாரம் கொடுத்திருக்கிறீர்களென்று பல தடவை கூறியுள்ளேன்.

இரண்டாவது மாவீரர் தினத்தை செய்ய தூண்டுவதனால், ஈழத் தழிழரின் மானம் காற்றில் பறக்கப் போகிறது என்பதை அறிவதற்கு காடையர்களிற்கு அறிவு போதுமா?.

முள்ளிவாய்க்காலில் நாம் இழந்த உயிர்கள், பொருளாதாரத்தை விட மேலாக நாம் ஒன்றையும் ஒற்றுமையின் அடிப்படையில் இழக்க மாட்டோம். மண்டபத்திற்கு பணம் செலுத்தியதற்காகவும், பூ மாலைகள் பூக்களுக்கு பணம் கொடுத்தற்காக கட்டாயம் இரண்டாவது மாவீரர் தினம் நடைபெற வேண்டுமென்றால் இது அர்த்தமற்ற கதை.

சிங்கள தேசம் வெற்றிக் களிப்பில் மிதக்கப் போகிறது. தயவு செய்து கிணற்றுத் தவளை போல் சிந்தியாது, தமிழீழ மக்களின் வாழ்வில் ஓர் நீண்ட பார்வை வேண்டும்.

ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
tchrfrance@hotmail.com
(ஈழமுரசு, பாரிஸ், பிரான்ஸ்)

No comments:

Post a Comment