Saturday, November 19, 2011

யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும் போர்ச் சுற்றுலாக்கள்!

யாழ்ப்பாணம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அதனைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கின்றோம் எனக் கூறிக் கொண்டு தென்னிலங்கைச் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்துக்குப் படை எடுத்து வருகின்றனர்.

இலங்கையில் பிறந்தவர்கள் அந் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்க்க விரும்புவது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகும்.

ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்கள மக்கள் வீதிகளில் நின்று அதில் பயணிப்போருக்கு இடையூறாக தமது வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.

இதற்காக எந்தப் போக்குவரத்துப் பொலிஸாரும் நடவடிக்கை எடுப்பதும் இல்லை, வழக்குப் பதிவு செய்து நீதிமன்றம் கொண்டு செல்வதும் இல்லை.

இதற்குக் காரணம் என்ன? ஒரே இனம் என்பதாகும். ஆனால் தென்பகுதியைத் தமிழ் மக்கள் சுற்றிப் பார்க்கச் செல்லுமிடத்து, அங்கு அவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சிலவேளைகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பங்களும் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.

இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணத்தில் போக்குவரத்துச் சட்டதிட்டங்களை மதிக்காமல் வாகனம் செலுத்தியதாக ஒரு நாளுக்கு எத்தனையோ தமிழ் மக்கள் நீதிமன்றத்தில் தண்டப் பணம் செலுத்துகின்றனர்.

ஆனால் இதுவரைக்கும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஒரு சிங்களவரேனும் தண்டப்பணம் செலுத்தியிருக்கின்றாரா?

அதேநேரம் தமிழர்களின் வாகனமும், சிங்களவர்களின் வாகனமும் விபத்துக்குள்ளாகும் பட்சத்தில் குற்றத்துக்கு அப்பால் சென்று தமிழ் வாகனச் சாரதி சட்டத்திற்கு முறையற்ற விதத்தில் சிங்கள ஆயுததாரிகளால் தண்டிக்கப்படுகின்றனர்.

இவற்றுக்கு மேலாக யாழ்ப்பாணம் வருகின்ற சிங்கள மக்கள் நடந்து கொள்ளும் விதம், நாங்கள் ஆட்சி செய்யும் நாடு, பெரும்பான்மையின மக்கள் நாங்கள்தான் என்ற பெருமிதத்தோடு நடந்து கொள்வதுடன், தமிழர்கள் சிறுபான்மையினம், அவர்கள் இலங்கையில் வாழலாமே தவிர உரிமை கேட்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டித் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது அனைத்தும் மீண்டும் ஒரு போர்ச் சூழலை இலங்கையில் உருவாக்குவதற்கான அத்திபாரமாக, அறிகுறியாகவே இருக்கும்.

எனவே, யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலாவாக வரும் தென்னிலங்கை மக்கள் உங்கள் சுற்றுலாக்களைப் போர்ச் சுற்றுலாக்களாக மாற்றாதீர்கள்.

தமிழ் மக்கள் அநாதைகள், அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்ட இனம் என நினைத்து அவர்களை அடிமைப்படுத்த எத்தனிக்காதீர்கள்.

அது உங்களுக்கும், எங்கள் நாட்டுக்கும், அதன் எதிர்கால அபிவிருத்திக்கும் ஆரோக்கியமானதாக அமையாது.

அதேநேரம் யாழ்ப்பாணத்துக்குச் சிங்கள மக்கள் வந்து போகும் அதே சுதந்திரத்தைத் தென்பகுதிக்கு வரும் தமிழ் மக்களும் அனுபவிப்பதை உரிய தரப்புக்கள் உறுதிப்படுத்திக் கொள்வதும் காலத்தின் தேவையாகும்.

No comments:

Post a Comment