Monday, September 5, 2011

யாழ் வரும் சிங்களவர்களைச் சோதிக்க ஆனையிறவில் மனநோய் வைத்தியசாலை !


யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்கள் புளுத்து விட்டார்கள். இதனால் அவர்களில் ஒரு சிலரை பொதுமக்களால் பிடிக்க முடிந்துள்ளது. நேற்று முன்தினம் கோண்டாவில் பகுதியிலும் நேற்று சுழிபுரம் பகுதியிலும் இரண்டு மர்ம மனிதர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனம் சார்ந்தவர்கள் என்பதும் இங்கு நோக்குதற்குரியது. தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார்கள் என்பது உண்மையாயினும் தென் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்திலுள்ள கிராமங்களில் தனித்துத் திரிவதை சாதாரணமான காரணங்கள் மூலம் நியாயப்படுத்த முடியாது.

இந்நிலையில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட தென்பகுதியைச் சேர்ந்த இருவரையும் பொலிஸார் பொறுப்பேற்றிருக்கின்ற நிலையில், அவர்கள் இருவரும் மனநோயாளிகள் என்று கூறப்படுகின்றது. அப்படியானால் தென்பகுதியைச் சேர்ந்த மனநோயாளிகள் பலர் யாழ்ப்பாணத்திற்குள் நுழைகின்றார்கள் என்று கருதவேண்டியுள்ளது. இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ஒருமுறை இலங்கைக்கு வருகை தந்தபோது அவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய படையினரில் ஒருவர் தான் வைத்திருந்த துவக்கால் ராஜீவ் காந்தியைத் தாக்கினார்.எனினும் ராஜீவ் காந்தியைத் தாக்கிய படைத் தரப்பைச் சேர்ந்த நபர் மனநோயாளி என்று கூறப்பட்டது.

பின்னாளில் அந்த மனநோயாளியும் இலங்கைப் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார். ஆக! ராஜீவ் காந்தியைத் தாக்கியவர் முதல், தற்போது யாழ்ப்பாணத்தைக் கலக்கும் மர்ம மனிதன் வரை மனநோயாளிகள் எனில், நிலைமை மோசமானது என்றே கூறவேண்டும். எனவே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆனையிறவு பகுதியில் மனநோயாளர் வைத்திய சாலை ஒன்றை அமைத்து தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகின்றவர்களை சோதனையிட வேண்டும்.குறித்த நபர் மனநோயாளி அல்ல. அவர் மன ஆரோக்கியம் உள்ளவர் என மருத்துவ நிபுணர்கள் உறுதிச் சான்றிதழ் வழங்கிய பின்பே அவர்களை யாழ்.குடாநாட்டுக்குள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தால் எப்படியிருக்கும்? மக்களின் உறக்கத்தைக் கலைத்து அவர்களை பயப்பீதிக்கு ஆளாக்கும் மனநோய் கொண்ட மர்ம மனிதர்களை கட்டுப்படுத்துவதற்கு வேறு வழியேதும் உண்டா ?

நன்றி: வலம்புரி

No comments:

Post a Comment