Saturday, September 3, 2011

ஈழத்துக்கு எம்.ஜி.ஆர். எப்படி உதவினாரோ, அந்த அளவுக்கு முதல்வர் அம்மாவும் உதவுறாங்க! அம்மா இன்னொரு எம்.ஜி.ஆர். தான்!


வடுக்களையும் வருத்தங்களையும் மட்டுமே சுமந்தவர்களின் முகங்களில் சட்டென வசந்தக் காற்று வீசினால் எப்படி இருக்கும்? சென்னை உயர் நீதிமன்றம், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தபோது அப்படித்தான் இருந்தது.

நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணா இருவரும் எட்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை என அறிவித்ததும், நீதிமன்ற வளாகமே ஆரவாரித்தது. சீனியர் வழக்கறிஞர்கள் சிலர், ''இது நீதிமன்றம் என்பதை மறந்துவிட வேண்டாம்!'' எனக் கோபம் காட்ட, நீதிபதிகளே 'இது மக்களின் உணர்வு’ எனக் கை காட்டி அந்த ஆரவாரத்தை ரசித்தார்கள்.

வெற்றி முழக்கம், இனிப்புப் பகிர்வு, நன்றி அறிவிப்புகள் எனத் தமிழகம் முழுக்க ஆனந்தக் கொண்டாட்டம்.

இந்த இடைக்காலத் தடை உத்தரவு, மரண வாசலில் திக்திக் இதயத்தோடு நிற்கும் பேரறிவாளன்,முருகன், சாந்தன் மூவருக்கும் மறுஜென்ம நிறைவைக் கொடுத்திருக்கிறது. சிறைக் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி, இந்த இடைக்காலத் தீர்ப்பு அறிவிப்பை முதலில் பேரறிவாளனிடம் சொல்லி இருக்கிறார். 'நிச்சயம் தடை கிடைச்சிடும்னு நம்பிக்கை இருந்துச்சு. உடனே, இதை முருகன், சாந்தன்கிட்டயும் சொல்லுங்க சார்!’ எனத் துள்ளி இருக்கிறார் அறிவு.

9-ம் தேதி தூக்கு என நாள் குறிக்கப்பட்டதுமே, மூன்று பேரும் உயர் பாதுகாப்புத் தொகுதியில் தனித் தனியாக அடைக்கப்பட்டார்கள். 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்கள். திடீரென 'ஏ கிளாஸ்’ உணவு மூவருக்கும் வழங்கப்பட்டது. மெடிக்கல் செக்கப், ஒயிட் அண்ட் ஒயிட் உடை எனத் தூக்குத் தண்டனையை நினைவுபடுத்தும் அனைத்து வேலைகளும் நடந்தபடியே இருந்தன.

''நீங்கள் இறந்த பிறகு, உங்கள் உடலை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?'' என்கிற கேள்வியும் சிறைத் துறை வழக்கப்படி கேட்கப்பட்டது.

பேரறிவாளன் தனது தாய் அற்புதத்தம்மாளிடம் உடலை ஒப்படைக்கச் சொல்லி எழுதிக் கொடுத்தார்.

முருகனும் சாந்தனும் 'எங்களுக்காக எல்லாவிதப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் சீமான் அண்ணனிடம் ஒப்படையுங்கள்’ என எழுதிக் கொடுத்தார்கள்.

போர்க் குற்றத்தைக் கண்டித்து சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் நிச்சயம் நம் விஷயத்தில் தலையிட்டு, நல்ல தீர்வைக் கொடுப்பார்!'' என தூக்குத் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பேரறிவாளன் சொல்லி வந்தாராம்.

இடைக்காலத் தடையோடு சட்டமன்றத்தில் தூக்குத் தண்டனையைக் குறைக்க வலியுறுத்தும் தீர்மானமும் இயற்றப்பட, ''ஈழத்துக்கு எம்.ஜி.ஆர். எப்படி உதவினாரோ, அந்த அளவுக்கு முதல்வர் அம்மாவும் உதவுறாங்க. இன்னொரு எம்.ஜி.ஆர்-னா அது அம்மாதான்!'' எனக் கொண்டாடி இருக்கிறார் முருகன். சட்ட மன்றத் தீர்மானம், இடைக்காலத் தடை குறித்து சொல்லப்பட்ட பிறகுதான், சாந்தனின் முகத்தில் கொஞ்சம் புன்னகை.

நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் வாதாடி முடித்த பிறகு வைகோ எழுந்தார். ''மூன்று பேரையும் தனிமைச் சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்!'' எனச் சொல்ல, அதற்கும் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். ம.தி.மு.க. சட்டப் பிரிவுச் செயலாளர் தேவதாஸ் மூலமாக, வழக்கறிஞர்கள் காலின் கான்சிவேல்ஸ், சபரீசன் ஆகியோரை வேலூர் சிறைக்கு அனுப்பிவைத்தார் வைகோ.

திருவள்ளூர் மாவட்டச் செயலாளரான செங்குட்டுவன், வழக்கறிஞர்கள் மொகித் சவுத்ரி, பாரி, மலர் ஆகியோரை சிறைக்கு அழைத்துப் போனார். பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் சந்தித்த வழக்கறிஞர்கள், ''தூக்குத் தண்டனைக்கு எதிரான விஷயமாகத்தான் இந்த வழக்கைக் கையில் எடுத்தோம். ஆனால், நீதிமன்றத்திலும் சாலைகளிலும் திரண்டு இருந்த மக்களின் ஏகோபித்த உணர்வைப் பார்த்து சிலிர்த்துப்போனோம்.

இந்த மூவருடைய தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு மாநிலமே கைகோத்து நிற்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த வழக்கில் ஆஜரானதற்காகப் பெருமிதப்படுகிறோம்!'' எனச் சொல்ல, மூவருக்கும் கண் கலங்கிவிட்டது.

சிறைக்குள் மூவருடைய மனநிலையும் எப்படி இருந்தது என்பது குறித்து அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

தூக்கு நாள் நெருங்கியதை நினைத்து, அவர்கள் பயப்படவில்லை. ஆனாலும், தூக்குத் தண்டனைக்கான சம்பிரதாயங்களை நாங்கள் நடத்தியபோது, பதற்றமானார்கள். இதேபோன்ற சம்பிரதாயங்கள் இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டபோதே ஒரு முறை நடத்தப்பட்டது.

இதற்கிடையில் செங்கொடி தீக்குளித்து இறந்த செய்தி கேட்டு மூவரும் உடைந்துபோனார்கள். அந்தக் குடும்பத்துக்கு நாங்க என்ன செய்யப்போறோம் எனக் கலங்கிய பேரறிவாளனைத் தேற்றவே முடியவில்லை.

முருகனும் சாந்தனும், எங்களுக்காக இனியும் யாரும் சாக வேண்டாம். சீக்கிரமே எங்க கதையை முடிச்சிடுங்க சார்... எங்களுக்காக தீக்குளிச்ச தங்கச்சியோட முகத்தைக்கூட பார்க்க முடியாமப்போச்சே எனப் புலம்பினார்கள்.

இடைக்காலத் தீர்ப்பு, சட்டமன்றத் தீர்மானம் என இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்தும், செங்கொடி மரணத்தால் அந்த மூவரும் பெரிதாக மகிழவில்லை. பேரறிவாளனும் முருகனும் 'நன்றி தாயே’ என உரக்கக் குரல் எழுப்பினார்கள்.

மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். திங்கட்கிழமை தங்களை சந்திக்க வரும் சீமான் மூலமாக கடிதத்தை முதல்வர் கையில் சேர்க்கப்போகிறார்கள். நன்றிகளால் அந்தக் கடிதம் நிரம்பி இருக்கிறது! என்றார்கள் சிறைத் துறை அதிகாரிகள் சிலர்.

மூவரையும் சந்தித்துவிட்டுத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலர், ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்கள் 20 வருடங்களாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். தனிமைச் சிறையின் கொடுமையை முன்னுதாரணமாகக் காட்டியே குற்றவாளிகளுக்குத் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட சம்பவங்கள் நிறைய இருக்கின்றன.

எட்டு வார காலத் தடைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வலியுறுத்துவோம். அதேபோல், ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் ரொபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் 20 வருடங்களாக உள்ளே இருக்கிறார்கள். அப்படி என்றால், ஆயுள் தண்டனையின் கால அளவு எத்தனை வருடங்கள்? அடுத்த கட்ட சட்டப் போராட்டங்களில் இத்தகைய வாதங்களையும் எடுத்துவைப்போம்! என்கிறார்கள்.

இதற்கிடையில் இன்னும் சில உணர்வாளர்களோ, ''செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில், சிறைகளில் இருந்து யார் யாரை எல்லாம் விடுவிக்கலாம் என்கிற ஆய்வு நடக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்களின் பெயர்களும் பரிசீலனைப் பட்டியலில் இருக்கின்றன.

போர்க் குற்றத்தை எதிர்த்தும், தூக்குத் தண்டனையைக் குறைக்கச் சொல்லியும் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதா, ஆயுள் தண்டனையைக் கடந்தும் சிறையில் வாடுபவர்களை மீட்டால், அது காலத்துக்கும் மறவாத சாதனையாக இருக்கும்! என்கிறார்கள் நம்பிக்கையோடு.

ஆச்சரிய மாற்றங்கள் தொடரும் என நம்புவோம்!

ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment