
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற வெற்றியை கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் வீரமறவர்களுக்கு சமர்ப்பணம் செய்கின்றோம் என தமிழ் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வட-கிழக்கு இணைந்த தாயக பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வரலாறு காணாத வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்றுள்ளது. அதை எவரும் மறுப்பதற்கில்லை. எனவும் அவர் தெரிவித்தார்.
கரைச்சி பிரதேச சபையில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பதவியேற்பு வைபவம் கிளிநொச்சியில் நேற்று காலை எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமை தாங்கினார். சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க நகரின் மத்தியில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் அனைவரும் கரைச்சி பிரதேச சபை செயலகம் வரை அழைத்து செல்லப்பட்டனர்.
அதன் பின்னர் அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய எம்.எம்.ரதன்,

இன்று வரலாற்று பெருமை வாய்ந்த நிகழ்வில் நாம் நிற்கும் சர்வதேசமே வியந்த ஒரு மிகப்பெரும் நகரிலே நின்று நாம் விழா எடுக்கின்றோம். எங்கள் முப்பது வருடகால போராட்டத்திலே குறிப்பாக நான்காம் கட்ட ஈழப்போரிலே கிளிநொச்சி என்ற நகர் வரலாற்று பிரசித்தி பெற்றது.
இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் நான்கு மாதங்களுக்கு மேலாக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்நகரில் மீண்டும் ஓர் தேசியம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் இந்த அரசாங்கம் யாழ்ப்பாணம், கிளிநொச்சியை நோக்கி தனது முழுவளத்தையும் பயன்படுத்தியது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சகோதரர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள், ஏனைய பட்டாளங்கள் என அனைவரும் இங்குதான் முகாமிட்டு பிரச்சாரம் செய்தார்கள். தாமே வெற்றியடைவோம் என கனவு கண்டார்கள். இறுதியில் நடந்தது என்ன?
எமது தமிழ் பேசும் மக்கள் மிகத் தெளிவான செய்தியை யாவருக்கும் சொல்லியுள்ளார்கள். “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று நிற்பதற்கு வாக்களித்துள்ளார்கள்.
நாம் வாழ பிறந்தவர்கள், ஆளப் பிறந்தவர்கள் என்ற நிலையில் நாம் தோற்று போனவர்களும் அல்ல தோற்கடிக்கப்பட்டவர்களும் அல்ல என்ற நிலையில் கொள்கையின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்திற்காக வாக்களித்துள்ளனர்.
எனவே இந்த வெற்றியை மண்ணின் விடுதலைக்காக போராடி எமது தேசத்தின் விடுதலைக்கு வலுச்சேர்த்த 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களுக்கும், இறுதி வரைக்கும் எங்கள் போராட்டத்துடன் நின்று உயிர்நீத்த 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கும் காணிக்கை ஆக்குகின்றோம்.
இவர்களின் இத்தியாகத்தை நிறைவேற்ற வட-கிழக்கு இணைந்த எமது தாயகத்தின் விடுதலைக்காக தொடர்ந்தும் நாம் போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment