Sunday, February 20, 2011

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்


தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறிலங்காவின் எல்லையை மீறி நுழையும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகள் தான் என்று குற்றம்சாட்டியுள்ளார் ஈபிடிபியின் சட்டவாளரான ரங்கன் தேவராஜ்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“போர் நடைபெற்ற காலங்களில் புலிகள் மீன்பிடிக் கலங்களை தமது ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்தி வந்தனர்.

அவர்களே தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறும் கலாசாரத்தை கற்றுக் கொடுத்தனர்.

குறிப்பிட்ட சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான பிரச்சினையாகக் காண்பிக்க முனைகின்றனர்.

ஆனால் இது இரு நாடுகளினதும் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை.

எல்லை மீறி ஊருவும் நடவடிக்கைளை நிறுத்த வேண்டும். இதனால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அத்துடன் தமிழ்நாட்டிலுள்ள முன்னணி மீன் வர்த்தகர்களிடம் பணியாற்றும் வறிய தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற நிலையும் ஏற்படுகிறது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை

நேற்றைய தினம் தமிழ்நாட்டு மீனவர்கள் 136 பேரும் விடுவிக்கப்பட்ட பின்னர் கருத்து வெளியிட்ட யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி மகாலிங்கம்,

“இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் நிகழாத வகையில் தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இரு நாடுகளினதும் மீனவர் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச வைப்பதும் இதில் ஒரு கட்டம் தான்.

அத்துடன் இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்படவுள்ளது“ என்று தெரிவித்தார்.

விடுவிப்பின் போது பரப்பப்பட்ட வதந்தி

தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது அதைக் குழப்பும் வகையில் யாழ்ப்பாணத்தில் தீயசக்திகளால் திட்டமிட்ட வகையில் வதந்திகள் பரப்பப்பட்டன.

20 மீன்பிடிப் படகுகளுடன் யாழ்ப்பாண மீனவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது.

இதனால் கரையோரப் பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்பட்டது.

அதேவேளை, மீன்பிடிக்கச் சென்ற சில படகுகளின் தொடர்புகள் இல்லாது போயுள்ளதாகவும், அவர்களைத் தேடுமாறு கடற்படையினரிடம் கூறியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கூறியிருந்தார்.

குருநகர் மீனவர்கள் நால்வர் தமிழ்நாட்டில் தடுப்பு

குருநகரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக்காலை ஐந்தாவது மணல்திட்டுப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக இந்தியக் கடலோரக் காவல்படையின் இராமேஸ்வரம் தளத்தின் அதிகாரியான கொமாண்டர் அகர்வால் தெரிவித்தார்.

தமது படகு ஒன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது இந்தியக்கடல் எல்லைக்குள் சந்தேகத்துக்கிடமான காணப்பட்ட படகு ஒன்றை மண்டபத்துக்குக் கொண்டு வந்து தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைத்ததாக அவர் கூறினார்.

குருநகரைச் சேர்ந்த பிரான்சிஸ் (60), தார்சீசியஸ் (49), ராஜலிங்கம் (59), அருள்ராஜ் (33) ஆகிய நான்கு பேருமே தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment