Friday, January 22, 2016

மகிந்தவுக்கு வழங்க தயாரான பீகொக் மாளிகையில் தங்கம்...?



தொழிற்கட்சி தலைவரான ஏ.எஸ்.பி. லியனகே அவ்வப்போது பேசப்படும் ஒருவராக இருந்து வருகிறார்.

லியனகே தனக்குச் சொந்தமான பீகொக் மாளிகையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க தயாரான போது அவர் மிகவும் பரப்ரப்பாக பேசப்படும் நபராக மாறினார்.

பீகொக் மாளிகையில் உள்ள நீச்சல் குளம் வாஸ்து சாத்திரத்திற்கு அமைய பொருத்தமற்றது என்பதால், மகிந்த ராஜபக்ச தான் குடியேறுவதற்கு முன்னர், நீச்சல் குளத்தை மணல் போட்டு நிரப்பினார். எனினும் ராஜபக்சவுக்கு அந்த மாளிக்கையில் குடியேறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் மணல் போட்டு மூடப்பட்ட நீச்சல் குளத்தில் தங்கம் மற்றும் பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் பேசப்பட்டது.

இது குறித்து லியனகே கடந்த 13 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் விசாரணை நடத்தி உண்மையை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த முறைப்பாட்டுக்கு இதுவரை சரியான பதில் கிடைக்காத நிலையில், லியனகே, நீச்சல் தடாகத்தை பார்வையிட ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஊடகவியலாளர்கள் நேற்று பீகொக் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தை பார்வையிட்டனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வலைவீச்சு


love

நாட்டில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்கள் மீது பொலிஸார் கடும் நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவிசாவளை பகுதியில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்தே, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

குறித்த பெண்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று, முச்சக்கரவண்டி சாரதியொருவரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து, பஸ் தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் நிலைப்பாடு குறித்து, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்கள் போன்ற அமைப்புக்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.ஓரினச்சேர்க்கையாளர்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கையில் போதுமான விதிகள் இருப்பதாகவும் அதையும் மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு முறைமையொன்று இருப்பதாகவும் பொலிஸ் பிரிவின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் ஊடாக இந்தியா போய்வர வீசா தேவை இல்லை


89UK1

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் ஊடாக இந்தியா போய்வர வீசா தேவை இல்லை என்று இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் என்ற போர்வையில் பல இலட்சம் படகுகளில் அத்துமீறி நுழைந்து கடத்தல் வியாபாரம் செய்கின்றனர். 

இந்தியாவில் இருந்து உடுப்புகள், பாகிஸ்தானில் இருந்து போதைவஸ்து, கம்போடியா, மியன்மார், மலேசியா ஊடாக வாகன உதிரிப்பாகங்கள் வரை வடமராட்சி கிழக்கு கரைக்கு கடல் ஊடாக கடத்தப்பட்டு பின்னர் மணல் லொறிகளில் மணல் கடத்துவதாக கடத்தபட்டு இலங்கையின் அனைத்து பகுதிக்கும் பயணிகள் பேரூந்துகளில் கடத்தப்படுகிறது.

இத்தகைய செயலை குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மனு சமர்ப்பித்துள்ளது.

எல்லை தாண்டி சட்டத்திற்குப் புறம்பாக தொழில் செய்யும் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் தனது மனுவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.தாம் 1979ஆம் ஆண்டின் சர்வதேச மீன்பிடி படகுகளுக்கான சட்டத்தின் படி இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் இதற்காக அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்படும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் இதுவரையில் இந்திய மீனவர்கள் தண்டிக்கப்பட்டமையினால் அவர்களுக்கு பாதிப்பு அதிகம் இல்லை என்பதுடன் அவர்கள் எல்லை தாண்டுவதை நிறுத்தவும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது சட்டமா அதிபர் திணைக்களம் கூறியதை போன்று 1979ஆம் ஆண்டின் சர்வதேச மீன்பிடி படகுகளுக்கான சட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்திய மீனவர்களுக்கு பதிப்புகள் அதிகமாகும் நிலையில் அவர்கள் எல்லை தாண்டுவதை நிறுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.

2018 ஆம் ஆண்டு வரை கர்ப்பம் தரிப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கை….!


mother

எல்-சல்வடோர் நாட்டில் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுளம்பினால் பரவும் நோய் நிலையொன்றினால் பிறக்கும் குழந்தைகள் , தீவிர குறைபாடுகளுடன் பிறப்பதை கருத்தில் கொண்டே அந்நாட்டு அதிகாரிகள் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு வரை கர்ப்பமாவதை தடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

‘சிகா’ எனப்படும் மேற்படி வைரஸ் தொற்றால் , பிறக்கும் குழந்தைகளின் மூளை முழுதாக வளர்ச்சியடைவது தடுக்கப்படுகின்றது.

குறித்த வைரஸ் பரவுவதை அடுத்து பல தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் பலவற்றிற்கான பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பிரேசியல் மற்றும் கொலம்பிய ஆகியநாடுகள் இந்நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கொலம்பியாவிலும் கர்ப்பம் தரிப்பதை தவிர்க்கும் படி கோரப்பட்டுள்ளது. ஆனால் வெறும் 6-8 மாதங்களுக்கே அக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழினத்தின் பண்டைய வரலாறு திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது: சிறீதரன்



தமிழினத்தின் பண்டைய வரலாறானது அந்நியர்களால் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டுவருகின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலைக்கென குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய மேல்மாடி வகுப்பறைக்கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை 9. மணியளவில் பாடசாலை முதல்வர் வீ. இந்திரலிங்கம் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வகுப்பறைக்கட்டடத்தை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய சிறீதரன்,

இற்றைக்கு உலகிலே தோன்றிய நாகரீக இனங்களுள் இன்றளவும் நாகரீகத்தை பேணிவரும் எம்மினத்தின் சிறார்களான நீங்கள் எமது முன்னோர்களின் பண்பாடுகள் கலாச்சாரங்களை அவர்களால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட அறிவியல்களை ஆழமாக ஆராய்ந்து அதன் நுணுக்கங்களை எமது எதிர்கால சந்ததியினர்க்கும் பயன்படும் வகையில் புதிய அணுகுமுறைகள் மூலம் வளமான ஓர் தேசிய இனமாக ஒன்று சேர்க்க வேண்டிய காலத்தில் நீங்கள் தற்போது உள்ளீர்கள் என்றார். 

திட்டமிட்டு அந்நியர்கள் எல்லோராலும் எமது பண்டைய வரலாறுகள் சிதைக்கப்பட்டு வந்துள்ளது. எனவே உங்களின் காலத்தில் உங்களால் பொறுப்பெடுக்கப்படவேண்டிய பல விடயங்கள் உங்கள் முன் உள்ளன. தற்போதைய சூழ்நிலைகளை எண்ணி உங்கள் கனவுகளை குறுகிய வட்டமாக்கி விடாதீர்கள்.

எனவே உலகம் உங்களை வியந்து பார்க்கும் அளவிற்கு உங்கள் கனவுகள் விரிவடைய வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வே. சிவயோகன், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் சி.நந்தகுமார் ஆகியோர் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கு முதல்வருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த இளைஞனுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்



வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சுதந்திரமாக செயற்பட அனுமதியுங்கள் எனக்கோரி தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய இளைஞனுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்.வரணி பகுதியை சேர்ந்த நா.துஷாந்த் என்ற இளைஞன் முதலமைச்சர் மீது அவதூறு பேசாதீர்கள், முதலமைச்சரை சுதந்திரமாக செயற்பட அனுமதியுங்கள் என்ற 4 கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவந்தார். 

இந்நிலையில் மாலை 6 மணிக்கு மக்களிடம் தண்ணீர் பெற்று குடித்து உண்ணா விரதப்போராட்டத்தை முடித்துள்ள நிலையில் குறித்த இளைஞனுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. 

இது குறித்து மேற்படி இளைஞனிடம் கேட்டபோது, 

தான் உண்ணா விரதப்போராட்டத்தை ஆரம்பித்தபோதும் புலனாய்வாளர்கள் தம்மிடம் விசாரித்ததாகவும், பின்னர் தனது வீட்டுக்கும் சென்று விசாரித்ததாக கூறுகின்றார். 

மேலும் தாம் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்தே உண்ணாவிரதம் இருந்ததாக தெரிவித்த மேற்படி இளைஞன், புலனாய்வாளர்கள் விசாரிப்பதால் தமக்கு பயமாக உள்ளதாவும் கூறியுள்ளார். 


விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டை சுமந்திரன் நிராகரிப்பு



தேர்தல் அறிக்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காற்றில் பறக்கவிட்டு விட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டை சுமந்திரன் நிராகரித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை வடக்கு மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களுடன் நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 

2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது. கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பது தொடர்பாக இடம்பெற்றிருந்த வாக்குறுதி, 

2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். 

அதேவேளை, கிளிநொச்சியில் நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், உரையாற்றிய உறுப்பினர்கள், 

2015 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான தெளிவாக கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். 

2015 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் சுயநிர்ணய உரிமை தொடர்பாக கூடுதலாகப் பேசப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதல்வரை சந்தித்தார் கவிப்பேரரசு வைரமுத்து!

வடமாகாண சபை முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரனை கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்துப் பேசியுள்ளார்.

இன்று மாலை 7 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை அவருடைய இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

வட மாகாண அமைச்சின் ஏற்பாட்டில் நாளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் உழவர் விழா இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  அவர் பங்கேற்கவுள்ளார் என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உழவர்களை கௌரப்படுத்தும் இவ்விழாவில் சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

யோஷித்த ராஜபக்ஷ விரைவில் கைது?! ராஜபக்ஷர்களை சுற்றி வளைக்கும் காவல்துறை


பிரபல றகர் வீரர் வசீம் தாஜுடீன் தனது மோட்டார் வாகனத்தினுள் உயிரிழந்தமை விபத்தல்ல, அது கொலையென விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய இந்த கொலைக்கு முதல் சந்தேக நபர் யோஷித்த ராஜபக்ச என உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான யேபஷித்த ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக தகவல் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இது தொடர்பில் அரசாங்கத்தினால் விசாரணை அறிக்கை பல வருடங்களின் பின்னர் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வழங்கப்பட்டாலும், நிலைமைக்கமைய உறுதியான தகவல்களை வெளியிட முடியவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தன. எனினும் கடந்த காலங்களில் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டாலும், இது தொடர்பில் எவ்வித பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் இந்த கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை தொடர்பில் சட்ட வைத்தியரினால் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், காபன் மொனக்சைட் தாஜுடீனின் உடலில் சேர்ந்தமையினாலே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டன.

எனினும் இந்த கொலையுடன் தொடர்புடைய யோஷித்த ராஜபக்ச உட்பட பலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2012 மே மாதம் 17ஆம் திகதி வசீம் தாஜுடீன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

விக்கிரமாதித்யாவை” பார்வையிட்ட அமைச்சர்கள்!


கொழும்புத் துறைமுகத்திற்கு முதல் தடவையாக வருகைதந்துள்ள இந்தியாவின் யுத்தக் கப்பலான ”விக்கிரமாதித்யா”என்ற கப்பலை வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

குறித்த கப்பல் நேற்றைய தினம் இலங்கை கடற்படையினரின் அமோக வரவேற்புடன்  கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்தது.

இந்த நிலையில், கப்பலின் பிரதான கட்டளை அதிகாரியான ரவினிட்சிங்கால் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புதிய தொழிநுட்பத்துடனான இந்த கப்பலை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

இரு நாடுகளுக்கிடையில் நிலவும் நீண்ட கால உறவை வளர்ப்பதற்கும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் இந்த கப்பலின் வருகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோர் கப்பலை பார்வையயிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். 

இந்த நிகழ்வில் இலங்கையின் இந்தியாவிற்கான தூதுவர் வை.சிங்ஹா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, குறித்த கட்டளை அதிகாரியின் கீழ் வெளிநாடுகளுக்கு ”விக்கிரமாதித்யா” கப்பல் சுற்றுப்பயணம் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிரவைக்கும் கிட்னி மோசடி…. வெளிவரும் உண்மைகள்


kene

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரவழைக்கப்படும் அப்பாவிகள் பலரின் சிறு நீரகங்களை பெற்று சட்ட விரோதமான முறையில் இலங்கையின் நான்கு தனியார் மருத்துவமனைகளில் 6 வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிறு நீரக மாற்று சத்திரசிகிச்சைத் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது.

இந்தியாவின் அஹமதா பாத் பிராந்திய பொலிஸார் தமது விசாரணைகளில் வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைவாக இந்திய பொலிஸாரிடமிருந்து பெற்றுக் கொண்ட அறிக்கைக்குயின் படி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

இந்தியரான 35 வயதுடைய நபரே சிறு நீரக வழங்குநர்களையும் அதனை பெறுபவர்களையும் இலங்கைக்கு அனுப்புவதாகவும் அவர் இவ்வாறு 60 சிறு நீரக வழங்குநர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் சிறு நீரகங்களை வழங்கும் நபர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு சிறு நீரகம் இந்திய ரூபா பெறுமதியின் பிரகாரம் 30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதகவும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் இந் நாட்டில் உள்ளதாக கருதப்படும் இந்த சிறு நீரக மாபியாவின் பிரதான சந்தேக நபரான மருத்துவர் இந்திய பிரதி நிதிக்கு இந்திய பெறுமதியின் பிரகாரம் 445 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அஹமதாபாத் பிராந்திய பொலிஸார் செய்துள்ள விசாரணையின் அறிக்கையினை தற்போது ஆய்வு செய்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் நகஹ முல்ல ஆகியோர் மேலதிக விசாரணைகள் தொடர்பில் விஷேட குழுவொன்றை நியமித்துள்ளதாக அறியமுடிகின்றது.

கொழும்பில் உள்ள பிரபலமான நான்கு தனியார் வைத்தியசாலைகள் ஊடாகவே இந்த சட்ட விரோத சிறு நீரக வர்த்தகம் இடம்பெற்று வந்துள்ளதுடன் அது தொடர்பில் ஆறுவைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது வரை சுமார் 60 சட்ட விரோத சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளாதாக கூறப்படும் நிலையில் இவை அனைத்தும் இந்தியர்களுக்கே செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த இந்தியர்கள் அனைவரும் அஹமதபாத் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் மிக சூட்சுமமாக இடம்பெற்று வந்த இந்த சட்ட விரோத சிறு நீரக மாற்று சிகிச்சை வர்த்தகம் தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனமும் செலுத்தப்பட்டுள்ளது. அதன் படி நாட்டில் உள்ள அனைத்து தனியார் வைத்தியசாலைகளிலும் வெளி நாடவருக்கு சிறு நீரக மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மைத்துனரை வீட்டுக்கு அழைத்து கோடாரி கொத்து!


ddd

தனது மைத்துனரை வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரை கோடாரியால் கொத்திய சம்பவம் குப்பிளான் வடக்கில், நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த சீவரத்தினம் ஜீவராஜ் (வயது 38) என்பவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், தனது மனைவியின் தங்கையின் அலைபேசியிலிருந்து தனக்கு அழைப்பொன்று வந்ததாக மனைவியின் தங்கையின் கணவரிடம் தெரிவித்துள்ளார். எனினும் அதனை மறுத்த அவர் அழைப்பு வந்ததைக் காட்டுமாறு கூறியுள்ளார்.

அலைபேசியில் இருக்கும் அழைப்பைக் காட்டுவதற்காக மனைவியின் தங்கையையும், அவருடைய கணவரையும் அவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மனைவியின் தங்கையின் கணவரை கோடாரியால் கொத்தியுள்ளார்இது தொடர்பில் கொத்து வாங்கியவரின் மனைவி, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு கிழக்கு பிரிகிறது, மாறுகின்றது வரலாறு

பொலன்னறுவை – திருகோணமலை அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின்மூலம் எதிர்காலத்தில் 10 மில்லியன் மக்களை திருகோணமலையில் குடியேற்ற அரசாங்கம் மறைமுக திட்டமொன்றை வகுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் மொத்தமாக 4.5 மில்லியன் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் வாழ்ந்து வருவதாகவும், எனினும் 10 மில்லியன் இலக்கு என்பது சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான திட்டமாக இருக்கலாம் என சிவில் சமூக அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

அதிவேக நெடுஞ்சாலைக்காக காண்பிக்கப்பட்டுள்ள வரைபடத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் தொகை ஒரு மில்லியன் என குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளது. இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

தொழில்ரீதியான அபிவிருத்தியை முன்வைத்து இன விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி திருகோணமலை மாவட்டத்தை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்றும் செயற்பாடாகவே இதனை பார்ப்பதாகவும் சமூக அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வரைபடத்தில் சிங்கள பிரதேசமான தம்புள்ளவலிருந்து யாழ்ப்பாணம் திருகோணமலைக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கான பாதை அமைப்புக்கள் பிரித்து காண்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு, திருகோணமலை முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை இணைத்து அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிஙகள மாவட்டமான அநுராதபுரத்தை இணைத்தே பாதை அமைப்புக்களும் காண்பிக்கப்பட்டுள்ளன.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் 1983 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திலேயே சிங்கள குடியேற்றங்கள் கிழக்கு மாகாணத்தில் வேகமாக ஆரம்பிக்கப்பட்டன.

குறிப்பாக திருகோணமலை மாவட்டம் அரசாங்கத்தின் பிரதான இலக்காக இருந்தது. 1983 ஆம் ஆண்டிலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு சிங்களவர்கள் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணம் இணைப்பு மற்றும் தமிழ்த்தேசியம் தமிழர் சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகளுக்கு எதிரான முறையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த 30 ஆண்டுகளிற்கு மேலாக செயற்பட்டு வருகின்றது.

குறிப்பாக வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லைக்கிராமங்களில் சிங்கள குடியேற்றங்கள் 1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபப்பட்டன. மணலாறு என்ற தமிழ் பிரதேசம் வெலியோயா என சிங்கள பெயராக மாற்றப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மாற்றப்பட்டன.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கதின்போது மணலாறு, தென்னமரவாடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி தனியான பிரதேசசெயலாளர் பிரிவொன்றும் உருவாக்கப்பட்டு அநுராதபுர மாட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அதிவேக நெடுஞ்சாலை என்ற பெயரில் தமிழர்களின் தாயக பிரதேசங்கள் துண்டாடப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் செய்யப்படுவதுடன் வடக்கு கிழக்கு இணைப்பு என்பதை இல்லாமல் செய்யக்கூடிய வேலைத்திட்டங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து யாழப்பாணம், திருகோணமலை போன்ற மாவட்டங்களிற்கு அதிவேக நெடுஞ்சாலை அவசியமாக இருந்தாலும் அதனை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளும், நில உரிமைகளையும் பறிக்கின்ற வேலை திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றமை தமிழர்களின் அரசியல் இருப்பிற்கு ஆபத்தாக அமையும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

விக்கினேஸ்வரனை சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள்: யாழில் இளைஞர் உண்ணாவிரதம்!- கைவிடுமாறு முதலமைச்சர் வேண்டுகோள் (Photos)

January 22nd, 2016 அன்று பிரசுரிக்கப்பட்டது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சுதந்திரமாகச் செயற்பட விடுமாறு வலியுறுத்தி கொடிகாமம் வரணிப் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் துசாந் என்ற தனிநபர் தந்தை செல்வா சதுக்கத்துக்கு முன்பாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். வடக்கு முதலமைச்சரை குறை கூறி விமர்சிப்பதற்காக செலவளிக்கும் நேரத்தை விடுத்து, மக்களுக்கு சேவை செய்வதற்காகச் செலவளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்ற வேண்டாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு முதலமைச்சர் வேண்டுகோள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாகேந்திரன் துசாந்த் என்பவரை வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயலாளர் ஆர். வரதீஸ்வரன் சென்று சந்தித்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கோரியதாக முதலமைச்சரின் செயலாளர் துஷாந்துக்கு தெரிவித்துள்ளார்.