Wednesday, December 26, 2012

ஒடும் காரில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம்: டெல்லியில் மேலும் ஒரு சம்பவம்

டெல்லியில் ஓடும் காரில் தலித் சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தைச் சேர்ந்த தலித் சிறுமியை அவரது வீட்டில் இருந்து 4 பேர் கடந்த 15ம் திகதி டெல்லிக்கு கடத்தி வந்து காரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவரை மீண்டும் பைசாபாத் கொண்டு சென்று பேருந்து நிறுத்தத்தில் விட்டுச் சென்றுள்ளனர். இதுபற்றி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் ஜம்முவின் புறநகரான அம்குரோடாவில் கடந்த சனிக்கிழமை இரவு 18 வயது பெண்ணை ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் இருவரும் வனப்பகுதிக்கு கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர். குற்றவாளிகள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இதுபோன்று நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் பாலியல் பலாத்காரப் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொலிஸ் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஏற்கனவே ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.

இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பாரத ரத்னா விருது வழங்குமாறு சுப்பிரமணிய சுவாமி பிரதமரிடம் கோரிக்கை!

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று தமிழ்நாடு, கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறான கோரிக்கையை அவர் முன்வைத்தார். உலக பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக இந்த விருதை வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை படைவீரருக்கு இந்தியாவில் வைத்து பயிற்சி வழங்கப்படுவதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைதி திரும்பியுள்ள இலங்கையில் இந்திய மாணவர்கள் சென்று கல்விகற்க வேண்டிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தீபம் ஏற்றத் தடையில்லை! ஒரு மாதத்தின் பின் வாய் திறந்தார் அமைச்சர் டக்ளஸ்!

இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பட்டதாரி பயிலுனர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இறந்த உறவுகளுக்காக தமது வீடுகளில், வியாபார நிலையங்களில் தீபம் ஏற்றலாம் அதனை யாரும் தடுக்க முடியாது அவ்வாறு தடுத்தால் தன்னிடம் கூறுமாறு கோரிக்கை விடுத்ததுடன். நாட்டில் யுத்தம் நிறைவடைந்து நிரந்தர சமாதானம் நிலவுகின்றது. இதனை குழப்ப சிலர் முயற்சிக்கின்றனர். தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலவும் போது சிலர் திட்டமிட்ட செயற்கை யுத்தம் ஒன்றை ஏற்ப்படுத்த முனைகின்றனர். இதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. ஆட்சியிலுள்ள அரசாங்கத்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வினை நிச்சயமாக வழங்க முடியும். ஆனால் இந்த அரசாங்கம் தவிர்ந்த வேறு ஒரு அரசாங்கத்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை வழங்க முடியாது என அவர் தெரிவித்தார். கடந்த மாதம் இதே நாளில் இறந்த உறவுகளை நினைத்து தீபமேற்றியவர்களை இராணுவம் எவ்வளவு துன்புறுத்தியது என்பதை தெரிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு மாதத்தின் பின் தீபம் ஏற்றத் தடையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளமை ஆச்சரியமாகவுள்ளது என பொதுமக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.