Monday, April 9, 2012

தமிழ்நாட்டில் புலிகளுக்குச் சிறப்புப் பயிற்சி! மறுக்கிறது இந்தியத் தூதரகம்!!

பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதாகத் தெரிவிக்கப்படுவதை இந்தியத் தூதரகம் முற்றுமுழுதாக மறுத்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டில் சிறப்புப் பயிற்சி பெற்ற விடுதலைப்புலிகள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாகச் செய்திகள் தெரிவித்தன. இந் நிலையிலேயே மேற்படி தூதரம் மறுப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. விடுதலைப்புலிகள் இலங்கையின் உறுதித்தன்மையை பலமிழக்கச் செய்வதற்காக இந்தியாவிலிருந்து திரும்புகிறார்கள் என்றும் இத்தகைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாக நேற்றைய தினம் ஆங்கில ஊடகமான தி ஐலன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தியத் தூதரகம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது. இது குறித்து இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இன்றைய தி ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்த புலிகள் இலங்கையின் உறுதித் தன்மையைப் பலமிழக்கச் செய்வதற்காக இந்தியாவிலிருந்து திரும்புகிறார்கள் இலங்கைப் புலனாய்வு அறிக்கை மூவர் கைது ஏனையோர் தலைமறைவு எனத் தலைப்பிடப்பட்ட செய்தி எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் செய்தியிற் குறிப்பிடப்பட்ட இந்தியாவில் தமிழ் நாட்டின் இரகசிய முகாம்களில் பயங்கரவாதிகள் பயற்சியளிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய கருத்து முற்று முழுதாகத் தவறானதும் அடிப்படையற்றதுமாகும். இது சம்பந்தமாக இரு நாட்டினது பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து செயலாற்றுவதுடன் இத்தகையவொரு தகவல் அவர்களால் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திருகோணமலையில் கடந்த வாரம் ஈ.பி.டி.பி. உறுப்பினரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபரொருவர் இந்தியாவிலிருந்து தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் இலங்கை வந்திருப்பதாக கூறியதாகவும் இதனைத்தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருகோணமலை அன்புவழிபுரம், அநுராதபுரம் ந்தி ஆகிய பகுதிகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை நேற்றும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment