Tuesday, April 10, 2012

பிரேம்குமாரை யார் கடத்தினார்கள் என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்: வீரவன்ச கோரிக்கை

மக்கள் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களான பிரேம்குமார் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரை யார் கடத்தினார்கள் என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பிரேம்குமார் குணரட்னம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்கள் கடத்தப்பட்டிருந்தால் அதனை யார் செய்தார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். வழமை போன்று இந்தக் கடத்தல் சம்பவத்திற்கும் பாதுகாப்பு தரப்பை குற்றம் சுமத்துவது இலகுவானது. எனினும், இவ்வாறு குற்றம் சுமத்துவதன் மூலம் வேறும் தரப்பினர் இந்தச் சம்பவத்தில் தொடர்பு பட்டிருந்தால் அவர்கள் தப்பிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இலங்கைக்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகள் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் தருணத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் சிலர் செயற்படுகின்றனர். அண்மையில் மட்டக்களப்பு நகரில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலும் இந்தக் கும்பல் இயங்கியுள்ளது. எனவே பிரேம்குமார் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தல் சம்பவம் தொடர்பில் உண்மையான தகவல்களை அரசாங்கம் துரித கதியில் வெளியிட வேண்டுமென விமல் வீரவன்ச கோரியுள்ளார்.

No comments:

Post a Comment