Saturday, January 21, 2012

இறுதி யுத்தத்தில் படையினரும் சிங்கள முஸ்லிம் மக்களுமே கொல்லப்பட்டனராம்!

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிறிலங்கா அரசாங்கம், அதனை மறைத்து, இந்தப்போரில் சிறிலங்காப் படையினரும், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுமே கொல்லப்பட்டதாக கூறத் தொடங்கியுள்ளது. போரில் உயிரிழந்த குடிமக்கள் பாதுகாப்புப் படையினரின் நினைவாக மிகிந்தலையில் நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபியை திறந்து வைத்து உரையாற்றியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மனிதாபிமானப் போரில் சிறிலங்காப் படையினரும், சிங்கள முஸ்லிம் பொதுமக்களுமே கொல்லப்பட்டதாக கூறியுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், இந்தப் போரில் கணிசமானளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள நிலையிலேயே, சிறிலங்கா அதிபர் ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணங்களை அவர் அப்பட்டமான முறையில் மூடி மறைத்துள்ளார். மிகிந்தலையில் சிறிலங்கா அதிபர் நிகழ்த்திய உரையில் கூறியுள்ளதாவது, "பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து துடைத்தெறிந்தாலும், நாம் பெற்றுக் கொண்ட வெற்றியை மீள அபகரித்துக் கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செயற்படுபவர்கள் தொடர்பாக அரசாங்கம் அவதானத்துடன் உள்ளது. பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு சிறிலங்கா இராணுவம், காவல்துறையைப் போன்றே குடிமக்கள் பாதுகாப்புப் படையினரும் தமது உயிரை பணயம் வைத்துப் போராடினர். கெப்பிட்டிக்கொல்லாவயில் இடம்பெற்ற குரூரமான சம்பவம் நாம் மறக்க முடியாதது. சம்பவத்தைக் கேள்விப்பட்டு நாம் உடனடியாக இங்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் துக்கம் விசாரித்தோம். ஏனைய மக்களை ஆறுதல் படுத்துவதிலும் ஈடுபட்டோம். அதுவரை காலமும் குடிமக்கள் பாதுகாப்புப் படையினர் உதாசீனங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. நாம் அவர்களுக்கு சிறந்த பயிற்சியளித்தோம். அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுத்து அவர்களையும் பலமுள்ள படையினராக உருவாக்கினோம். அவர்களுக்கான பொறுப்பை பாதுகாப்புச் செயலாளர் ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்மூலம் கிராமங்களினதும், பிரதேசத்தினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதுடன் கிராமங்களை விட்டுவிட்டு வெளியேற முற்பட்ட மக்களை தடுத்து அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பையும் அவர்கள் வழங்கினர். எல்லைக் கிராமங்களிலுள்ள மக்களை அங்கிருந்து துரத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டனர். அவர்களைத் தெற்குப் பக்கம் துரத்த எண்ணினர். எனினும், நாம் சிவில் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சிகளை வழங்கியிருந்ததால் அவர்கள் அதனைத் தடுத்தனர். நாட்டை மீட்கும் வெற்றியின் பங்காளர்களாக சிவில் பாதுகாப்புப் படையினர் திகழ்கின்றனர். மனிதாபிமான நடவடிக்கையின் போது 525 குடிமக்கள் பாதுகாப்புப் படையினர் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அதேவேளை சிங்கள, முஸ்லிம் மக்களும் உயிரிழந்துள்ளனர். தாய்நாட்டை மீட்பதற்காகவே அவர்கள் இந்தத் தியாகத்தைச் செய்துள்ளனர். இந்த மண்ணில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் உலகின் சகல பகுதிகளிலும் பலமான வலையமைப்பின் மூலம் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. வெவ்வேறு போர்வையில் வெவ்வேறு விதங்களில் அவை இடம்பெற்று வருகின்றன. நாட்டையும் நாம் ஈட்டியுள்ள வெற்றியையும் சீர்குலைப்பதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். புலம்பெயர் தமிழர் அமைப்பு என்ற பெயரில் இயங்குகின்றனர். நான் அந்தப் பெயரைக் கூடக் கூறுவதற்கு விரும்பவில்லை. அரந்தலாவை சம்பவம் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இலங்கையில் கால்வைக்காத, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிராத இரண்டாம் மூன்றாம் பரம்பரையினர் தவறாகத் திசைதிருப்பப்பட்டு தவறாக செயற்படுகிறார்கள். இவர்களுக்குப் பக்க பலமாகச் செயற்படும் அமைப்புக்கள் எமது வெற்றியை எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை அபகரிக்கப் பார்க்கின்றன. இத்தகைய நிலையில் நாம் மிக அவதானமாகச் செயற்படவேண்டும். கவனமாக நிர்வாகம் செய்யவேண்டும். இதுதொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. எமது படையினரும் காவல்துறையினரும் பெரும் தியாகங்களுடன் பெற்ற வெற்றியை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நாட்டை சீர்குலைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment