Tuesday, January 17, 2012

புலிகள் அமெரிக்காவை தாக்க இருந்தனரா? கலைந்தது மர்மம், கண்டுபிடிக்கப்பட்டது உண்மை!

அமெரிக்காவுக்கு தாக்குதல் நடத்த தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்ட பெண் தற்கொலைப் போராளி என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்ட துஸியந்தினி கனகசபாபதிப்பிள்ளை உண்மையில் ஒரு ஊடகவியலாளர் ஆவார். இவர் பி.பி.சியின் ஊழியர். பி.பி.சியின் இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பான செய்தியாளராக இருந்த பிரான்சிஸ் ஹரிசனின் உதவியாளர். அமெரிக்க தூதரகம் தொடர் புலனாய்வு விசாரணைகளின் பின் இத்தகவல்களை கண்டு பிடித்துக் கொண்டது. அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த துஷியந்தினி கனகாபாபதிப்பிள்ளை புலிகளால் அனுப்பப்பட்டு இருக்கின்றார் என்று தூதரகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்த அன்ரன் மோசஸ் என்பவரை நேரில் சென்று தூதரக அதிகாரிகள் விசாரித்து இருக்கின்றனர். அக்கடிதத்தை அவர் அனுப்பி இருக்கவில்லை என்று அன்ரன் சாதித்து இருந்தார். ஆனால் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த விடயங்கள் எல்லாம் அவருக்கு தெரிந்து இருந்தன. துஷியுடனான காதல் தோல்வி அடைந்த நிலையில் இதயம் உடைந்து போய் இருக்கின்றார் என்று தெரிவித்து இருக்கின்றார். காதல் நிறைவேறாமையால் ஏற்பட்ட கவலை, வெறுப்பு, பொறாமை ஆகியவற்றால் அன்ரன் இக்கடிதத்தை எழுதியிருக்கின்றார், கடிதத்தில் சொல்லப்பட்டு இருந்த விடயங்கள் பெரும்பாலும் பொய் என்று தூதரக அதிகாரிகளுக்கு தென்பட்டது. பி.பி.சியின் ஹரிசனுடன் தொடர்பு கொண்டு கேட்டிருக்கின்றனர். துஸி பி.பி.சியைச் சேர்ந்தவர்தான் என்றும் கலிபோர்னியாவில் அமெரிக்க புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்டார் என்றும் அன்ரன் என்பவர் நீண்ட காலமாக துஸிக்கு இவ்வாறான துன்பங்களை கொடுத்து வருகின்றார் என்று ஹரிசன் கூறி இருக்கின்றார். துஸிக்கும் புலிகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்று இலங்கைப் புலனாய்வாளர்களிடம் தூதரகம் வினவியும் இருக்கின்றது. கடைசியாக அன்ரனால் அனுப்பப்பட்ட கடிதம் பொய்யான தகவல்களை கொண்டது என்கிற முடிவுக்கு வந்தது. இவ்விபரங்கள் இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் கொழும்பில் உள்ள தூதரகத்தில் இருந்துஅமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்டு இருந்தன. தற்போது விக்கிலீக்ஸ் மூலம் இவ்விடயங்கள் பகிரங்கமாகி விட்டன.

No comments:

Post a Comment