Tuesday, January 31, 2012

அணு குண்டு தயாரிப்பில் புலிகள்: அமெரிக்காவுக்கு பூச்சாண்டி காட்டிய இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அணு குண்டுகள் தயாரிக்கின்றார்கள் என்று அஞ்சி இருக்கின்றது இலங்கை அரசு. சிவப்பு பாதரசம் என்கிற இரசாயனப் பொருள் மூலமாக அணு குண்டுகள் உட்பட பேரழிவை ஏற்படுத்தக் கூடிய நாசகார ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்று விக்கி பீடியா கூறுகின்றது. இந்நிலையில் சிவப்பு பாதரசம் என்கிற இரசாயனப் பொருளை சேகரிக்கின்ற நடவடிக்கையில் புலிகள் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்றும் சிவப்பு பாதரசம் குறித்து கொழும்பு, கலிபோர்னியா ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களிடம் புலிகள் 2002 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் விசாரணை நடத்தி இருக்கின்றனர் என்றும் இலங்கை அரசுக்கு இரகசிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்து இருந்தன. அணு, உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களிடம் இருந்து பாதுகாப்புக் கொடுக்கின்ற கவச ஆடைகள் சம்பந்தப்பட்ட சர்வதேச மாநாடுகளில் புலிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றி இருக்கின்றனர் என்றும் குறிப்பாக லண்டனில் 2001 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி இடம்பெற்று இருந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்று இருந்தனர் என்றும் இலங்கை அறிந்து வைத்திருந்தது. மேற்சொன்ன லண்டன் மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களில் ஒன்று அணு, உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களிடம் இருந்து பாதுகாப்புக் கொடுக்கின்ற கவச ஆடைகள் பற்றியது என இலங்கை அறிந்து இருந்தது. அத்துடன் அணு, உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட ஏராளமான புத்தகங்களை யுத்த நிறுத்த காலத்தில் இருந்து புலிகள் கொள்வனவு செய்திருந்தனர் என்றும் இலங்கை அரசு தெரிந்து வைத்திருந்தது. இந்நிலையில் புலிகளிடம் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய நாசகார ஆயுதங்கள் இருக்கக் கூடும் என்று அமெரிக்காவுக்கு 2006 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி முறையிட்டு இருக்கின்றது.

No comments:

Post a Comment