Saturday, January 21, 2012

அடுத்த ஜென்மத்திலும் என் அன்பான செல்லக் கணவருடன் தான் வாழுவேன்! தற்கொலை செய்துகொண்ட போராளியின் மரண சாசனம்!!

சாவதற்கு நச்சு மருந்துப் போத்தல்கள் வாங்கக் கூடக் காசில்லாமல் தான் நிறையப் பேர் இருக்கின்றார்கள்…. போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலை இவ்வாறு தான் உள்ளது. ஒரு கொள்கைக்காக போராடியவர்களின் பரிதாபகரமான நிலையே இது… போரால் பாதிக்கப்பட்டு மீள முடியாமல் தவித்து மன உளைச்சலுக்கு உள்ளாகும் போராளிகளின் இறுதி முடிவே இவ்வாறு அமைகின்றது. பொருளாதாரக் கட்டமைப்புக்கள் அடியோடு சிதைந்த பின்னர் அடுத்த வேளை சோற்றுக்கு ஏங்குபவர்களின் தவிர்க்க முடியாத இறுதி முடிவாகத் தான் தற்கொலைகள் அமைகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒருகாலத்தில் போராளிகளாக இருந்த கணவன், மனைவியின் அதிர்ச்சியான முடிவைப் பாருங்கள். காலிழந்த கணவன், பொருளாதாரம் இல்லை, இனி வாழ்ந்து என்ன என்ற விரக்தி நிலை இருவரையும் மரணக் குழிக்குள் தள்ளி விட்டது. அண்ணனுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவியுடன் குருணல் எனப்படும் நஞ்சைச் சாப்பிட்டு உயிரைத் துறந்து விட்டார்கள் இந்த இணைபிரியாக் காதலர்கள். “அடுத்த ஜென்மத்திலும் என் அன்பான செல்லக் கணவருடன் தான் வாழுவேன்” இது தற்கொலை செய்வதற்கு முன் மனைவி எழுதிய உருக்கமான மரண சாசனத்திலிருந்த ஒரு வரி… பாருங்கள் தாயகத்தின் இன்றைய நிலைமையை..?? அடுத்த மாவீரர் தினத்தை லண்டனில இன்னும் பிரமாண்டமாய் எட்டு இடங்களில கொண்டாடுங்கோ.. கோடிக்கணக்கில செலவளிஞ்சாலும் பரவாயில்லை… அதுகள் நஞ்சு மருந்தைக் கூட கடன்பட்டுத்தான் வேண்டிக் குடிச்சிருப்பார்கள்.. வெளிநாடுகளில் இருந்து தமிழீழம் பேசுவோர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் பணத்தை சாமர்த்தியமாக பங்கு போடுவதில் தான் குறியாக உள்ளனர். உங்களுக்காக போராடியவர்களின் இன்றைய பரிதாபமான நிலையை கொஞ்சமாவது நினைத்துப் பாருங்கள். போரால் பாதிக்கப்பட்ட போராளிகளின் அன்றாட சாப்பாட்டுச் செலவுகளுக்கு, மருத்துவத் தேவைகளுக்கு தயவு செய்து உதவுங்கள். அவர்களின் மறுவாழ்வுக்கு பேச்சளவில் இல்லாமல் நீங்களே நேரடியாக அல்லது தாயகத்தில் உள்ள உங்களின் உறவுகள் மூலமாக உதவுங்கள். இனியும் இப்படியான அவலச் சாவுகள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போதும் நீங்கள் விழித்துக் கொள்ளா விட்டால் வரலாறு ஒருபோதும் உங்களை மன்னிக்காது.

No comments:

Post a Comment