தமிழினம் மகிழும் நாளை எதிர்பார்த்து புத்தாண்டை வரவேற்கும் சிறிதரன் எம்.பி.!

பிறக்கும் புத்தாண்டு தமிழினத்தின் மகிழ்ச்சி தர வேண்டும், அதனை எதிர்பார்த்தே புதுவருடத்தை வரவேற்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழர்கள் என்ற புனிதமான அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து இந்த ஆண்டில் பலம் சேர்ப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் புத்தாண்டுவாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஒரு சிறிய இனத்தால் சாதிக்கக்கூடிய ஒரு வரலாற்று உண்மையை நாம் நிச்சயம் சந்திக்கும் நாள் உண்டு.தமிழினம் மகிழும் நாளை எதிர்பார்த்து இந்த ஆண்டை நாம் எதிர்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார், புதியதோர் ஆண்டில் நாம் காலடி எடுத்து வைத்திருக்கின்ற பொழுது இது எல்லா ஆண்டுகளையும் எல்லா மனிதர்களையும் மீண்டுமோர் முறை நாம் நினைத்துப் பார்த்து எமது இலட்சிய பயணத்தை தொடர்கின்றோம். எமது மண்ணில் போர் முடிவுற்றதன் பின்பு அடுத்து வந்த ஆண்டுகள் பெருத்த எதிர்பார்ப்புகளை சுமந்தனவாகவே அமைகின்றன. ஏனெனில் நாம் இன்று பெரும் சிகரம் ஒன்றில் இருந்து சதிகளால் வீழ்த்தப்பட்டு மிதிக்கப்படுகின்றவர்களாகவே வாழ்க்கைப்படுகின்றோம். எமது உறவுகளுக்குள் அந்தரங்கமாக மகிழ்கின்ற பொழுதுகளுக்குள் கூட ஒரு அன்னியன் நுழைந்து ஏகப்பட்ட சர்வாதிகார கேள்விகளை எழுப்புகிறான். நாம் இருந்த இடம் எது இப்போது இருக்கும் இடம் எது என்பதை நினைத்துப்பார்க்கும்போது நெஞ்சு கனக்கின்றது. விடைபெறும் இந்த ஆண்டில் த.தே.கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் சூனியமான முடிவுகள் உணர்த்துகின்றன.தமிழினத்தின் சாம்பல் மேடுகளும் புதைகுழிகளும் பேசுகின்ற காலம் இது. தமிழ் ஆத்மாக்கள் உலகத்தை உலுப்பிக்கொண்டிருக்கும் காலம். கனவுளோடு களமாடியவர்கள் உயிர்கொடுத்தவர்களின் நினைவுகள் தமிழர்களை வழிநடத்துகின்ற காலம். இப்போதும் திருத்தமுடியாத துரோகத்தனங்கள் எம்மினத்துக்குள் இருந்தபோதும் வெல்லப்போவது சத்திய மனிதர்களின் எதிர்பார்ப்புக்களே. இன்று வர்ணம் தடவியும் பெயர்பலகை மாற்றியும் களியாட்டம் நடத்தியும் எமது உணர்வுகளை வேறுதிசைகளில் புதைத்து எமது இன அடையாளங்களை பண்பாடுகளை சிதைத்து தமிழர்களின் தனித்துவத்தை தரிசாக்கலாம் என நினைக்கின்ற அரசியல் எவ்வளவு கேலிக்குரியது என்பதை எம்மக்கள் உள்ளே நன்றாய் உணர்ந்தவர்கள். அத்தகைய கேலித்தனங்களுக்கு எமது மக்களாகிய நீங்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டியும் வந்துள்ளீர்கள். சொல்லப்போனால் எமது மக்கள் கடவுள்கள் கையெடுத்து கும்பிடுவதற்கு நிகரானவர்கள். முள்ளிவாய்க்கால்வரை இனவிடுதலைக்காய் உறுதியோடு சென்று வார்த்தைகளில் வடித்துவிடமுடியாத வலிகளை சுமந்தபோதும் இன்னும் நீறுபூத்த நெருப்பாய் இருப்பது அவர்களை அதிஉயர்ந்த இடத்தில் வைத்திருக்கின்றது. எமது மக்களின் தாகம் எமது இனத்தின் வாழ்வு உரிமை உறுதிப்படுத்தப்படும்வரை தீராது. அரசாங்கம் தமிழர்களை ஏமாற்ற நினைத்தால் எமது சுதந்திர தாகத்தை எமது சந்ததிகள் ஏந்திச்செல்வார்கள். இலங்கை திருநாடு அமைதியின் சின்னமாக மாறவேண்டுமாயின் பிறக்கின்ற ஆண்டிலேயே தமிழர்களுக்கான உரிமைகள் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்ற சிந்தனை இலங்கை அரசாங்கத்திடம் பிறக்கவேண்டும். பிறக்கின்ற இந்தஆண்டில் சிறையில் வதைபடும் எமது உறவுகளுக்கு விடிவுகிடைக்கும் பொழுதுகளும் வெள்ளைக்கொடியோடு சென்று காணாமல் போன உறவுகளின் கண்ணீர் கரையநல்ல சேதிகளும் பிறக்கட்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தாயகத்தில் நலிந்துபோன எமது உறவுகளுக்கு ஒத்தடமாய் என்றுமிருக்கும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளுக்கு நன்றிகளும் வரவேற்பும் உரித்தாகட்டும். மண்ணில் வீழ்ந்த எம் மகத்தான உறவுகளின் நினைவுகளோடு இந்த ஆண்டிலும் நம் இலக்கு நோக்கி பயணிப்போம். என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment