Saturday, December 3, 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - அரசு பேச்சுவார்த்தை முறிவடைந்தது


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இன்று முறிவடைந்துள்ளது.

அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையில் 15 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்ற போது, பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நியமிக்கக் கூடிய தமிழத் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பெயர்களை முன்வைக்குமாறு அரசதரப்பில் வலியுறுத்தப்பட்டதையடுத்தே பேச்சுவார்த்தையை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் இடம்பெற்ற 14 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது இவ்விவகாரம் ஆராயப்பட்டு இணக்கப்பாடு ஒன்று காணப்பட்டது.

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களின் போது காணப்படும் இணக்கப்பாட்டை பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சமர்ப்பிப்பதெனவும் அச்சந்தர்ப்பத்தில் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறும் தமது உறுப்பினர்களின் பெயர்களை உடன் வெளியிடுமாறு கூட்டமைப்பினரை அரச தரப்பு கோரியதையடுத்தே பேச்சுக்களில் முறுகல் நிலை ஏற்பட்டது.

கூட்டமைப்பினர் அவ்வாறு தமது உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிடவில்லை எனில் தம்மால் பேச்சுக்களைத் தொடரமுடியாது என அரச தரப்பினர் கூற, இணக்கப்பாடு எட்டப்பட்டு அதனைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்வைப்பதற்கு முன்னதாக தம்மால் பெயர் விபரங்களைத் தர முடியாது என கூட்டமைப்பு உறுதியாகக் கூற பேச்சுக்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பிலான அறிக்கை ஒன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் மாதத்தில் 1, 06, 14, 15ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அதன்படி முதலாம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழு தெரிவுக்குழு என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment