Friday, December 2, 2011

நடிகை வைஷ்ணவி தற்கொலை வழக்குநடிகருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை!


2-வது திருமணத்துக்கு வற்புறுத்தி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நடிகர் தேவ் ஆனந்துக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு கடுங்காவல் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை அண்ணாநகர் 11-வது பிரதான சாலையில் வசித்தவர் வைஷ்ணவி. பாபா, தீனா ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில டி.வி. தொடர்களிலும் நடித்தார்.

இவருக்கும் தேவ் ஆனந்த் (வயது 34) என்ற டிவி. நடிகருக்கும் நட்பு ஏற்பட்டது. தேவ் ஆனந்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவர், 'செல்லமே' டி.வி. தொடரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனக்கு 2-வது மனைவியாக இருக்க வேண்டுமென்று வைஷ்ணவியை தேவ் ஆனந்த் வற்புறுத்தியதாகவும், நண்பர்களாகவே தொடரலாம் என்று தான் கூறியதாகவும் பெற்றோரிடம் வைஷ்ணவி கூறியுள்ளார்.

17.4.06 அன்று வைஷ்ணவியின் தாயாரும், தங்கையும் வெளியே சென்றுவிட்ட நிலையில், வீட்டில் வைஷ்ணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக தேவ் ஆனந்த் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

5 ஆண்டு கடுங்காவல்

வைஷ்ணவியை 2-வது திருமணத்துக்கு வற்புறுத்தியதாலும், தாங்க முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்ததாலும், திருமணத்துக்கு மறுத்ததால் வைஷ்ணவியை அடித்து காயப்படுத்தி மோசமாக நடந்துகொண்டதாலும், அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று தேவ் ஆனந்த் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை சென்னை மகளிர் நீதிமன்றம் விசாரித்தது. தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த அக்டோபர் மாதம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இடைக்கால தடை

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவ் ஆனந்த் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்தார். தேவ் ஆனந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment