Thursday, September 22, 2011

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்


மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனமான என்டிஆர்ஓ-வில் பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடிக்கப்பட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான என்டிஆர்ஓ (National Technical Research Organisation -NTRO),கார்கில் ஊடுருவலுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

மத்திய அரசு நிறுவனமான இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் பெண் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் உபயோகிக்கும் கழிப்பறையில் "ஸ்பைகேம்" எனப்படும் சிறிய ரக கண்காணிப்பு கேமரா ரகசியமாக பொருத்தப்பட்டு, அது இந்த உளவு நிறுவனத்தின் மற்றொரு உளவு ஏஜென்சியின் அதிகாரி ஒருவரது கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்திருக்கிறது.

அந்த கம்ப்யூட்டரில் இருந்தபடி அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை அந்த அதிகாரி கண்காணித்து வந்துள்ளார்.

நீண்ட நாட்கள் இவ்வாறு நடைபெற்றுவந்த நிலையில், ஒருநாள் கழிப்பறைக்கு சென்ற பெண் ஊழியர் ஒருவருக்கு,ஏதோ சந்தேகம் ஏற்பட, அந்த அறையில் உற்று நோக்கியுள்ளார். அப்போதுதான் அங்கு ஸ்பைகேமரா வைக்கப்பட்டுள்ளதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் மற்ற பெண் ஊழியர்களுக்கும் தெரியப்படுத்த, அதனைத் தொடர்ந்து உயரதிகாரியிடம் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இது குறித்து பெண் அதிகாரி ஒருவர் தலைமையில் உள்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, நடந்த சம்பவம் உண்மைதான் என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் என்டிஆர்ஓ பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த போதிலும், இந்த விவகாரம் குறித்து அங்கு தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் கடந்த 2007-08 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றபோதிலும், தற்போதுதான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment