Tuesday, August 30, 2011

காணாமல் போகும் சிறுமிகள்! கதவைத் தட்டும் மர்ம மனிதர்கள்!! கலங்கி நிற்கும் யாழ்ப்பாண மக்கள்!!!


யாழ்.குடாநாடு தற்போது ஒரு ஸ்திரத்தன்மையற்ற ஒரு பிரதேசமாக மாறி, அங்கு வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்வு பதற்றம் நிறைந்த வாழ்வாக மாறி வருகின்றது.

அதாவது காணாமல் போகும் சிறுமிகள், கதவைத் தட்டும் மர்ம மனிதர்கள் இவற்றுக்கு மத்தியில் கதிரவன் மறைந்தால் கதவைத் திறக்க முடியாத நிலை என மக்களின் மன நிலை குறைகுடம் போல் ததும்பிக் காணப்படுகின்றது.

அதாவது யாழ். குடாநாட்டில் மூன்று சிறுமிகள் நேற்று திங்கட்கிழமை முதல் காணாமல்போயுள்ளதாக அவர்களின் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். நல்லூர்க் கந்தசாமி கோவிலின் வருடாந்தத் திருவிழாவின் இறுதி நாளான பூங்காவனத் திருவிழாவுக்கு பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமி நேற்றையதினம் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ். பொலிஸார் கூறினர்.

புதிய செம்மணி வீதி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த வேலன் வேணிகா (வயது 6) என்ற சிறுமியே நல்லூர்க் கோவிலில் காணாமல்போயுள்ளார்.

பெற்றோரும் பொலிஸாரும் இணைந்து கோயில் வளாகத்தில் நேற்றிரவு வரை குறித்த சிறுமியை தேடியபோதிலும் கிடைக்கவில்லையெனத் தெரிவித்த யாழ். பொலிஸார்இ இச்சிறுமியை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இதேவேளை மானிப்பாய்இ வடமராட்சிப் பகுதிகளை சேர்ந்த இரு சிறுமிகள் நேற்றுக்காலை முதல் காணாமல்போயுள்ளதாக மானிப்பாய் மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

மானிப்பாயைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்கும் எஸ்.ரோஷினி (வயது 17) என்பவரும் வடமராட்சியைச் சேர்ந்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம் 8இல் கல்வி கற்கும் கனகலிங்கம் லக்ஷிகா என்ற சிறுமியும் காணாமல்போயுள்ளதாக மானிப்பாய் மற்றும் நெல்லியடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு காணாமல் போன சிறுமிகள் மூவரில் ஒரு சிறுமியின் பெற்றோரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் காணாமல்போன 13 வயது சிறுமியின் பெற்றோர் மனித உரிமைகள் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த சிறுமியைக் கண்டுபிடிப்பது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரி.கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறு தினம்தினம் அரங்கேறும் அரக்கர்களின் அட்டூழியங்களால் நின்மதியிழந்த யாழ்ப்பாண மக்களின் துயரைத் துடைக்க யார் முன்வருவார்கள்? வேலியே பயிரை மேய்ந்தால் யார்தான் என்ன செய்ய முடியும்?

No comments:

Post a Comment