Saturday, March 5, 2011

இந்தியாவின் ஐந்து வயது காவல்துறை அதிகாரி


அன்மோல் சிங்க ராச்புத்துக்கு வயது 9 ஆகின்றது. கடந்த மூன்று ஆண்டுக்கு மேலாக காவல்துறையினர் அணியும் காக்கி உடையில் காவல்துறை நிலையத்தில் உலா வரும் சிறுவன். ஐந்து வயதில் காவல்துறையில் இணைந்த அன்மோல் போல பல சிறுவர்கள் சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த மாநில சட்டத்தின்படி காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி இறந்துவிட்டால் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு காவல்துறையில் வேலையில் இணைய முடியும். பொதுவாக ஏழைக் குடும்பங்களில் இருந்து பணியாற்ற வரும் காவல்துறை அதிகாரிகள் பணியாற்றும் காலத்திலேயே மரணித்துவிடும் பட்சத்தில் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினருக்கு ஒரு பணியை அளிப்பது வழக்கம். அவ்வாறு பணியில் சேர வயது வரம்பு என்பது எல்லாம் கிடையாது. அப்படித்தான் அன்மோல் சிங்க ராச்புத்தின் தந்தை பணியாற்றும் போதே இறந்துவிட்டார். வறுமையான குடும்ப சூழலில் அவரது ஐந்து வயது மகனான அன்மோல் சிங்க ராச்புத்துக்கு பணியாற்ற வாய்ப்புக் கிட்டியது. அவனைப் போல அம்மாநிலங்களில் 15 சிறுவர்கள் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு பணியில் சேர்ந்தவர்களில் அன்மோல்லுக்குத் தான் வயது மிகவும் குறைவு. தற்போது 9 வயதாகும் அன்மோல் கிழமையில் மூன்று நாள் பள்ளிக்கு செல்லாமல் SP அலுவலகத்தில் பணி செய்ய வருகிறார். 14 வயதாகும் வரை இந்த குட்டிக் காவலர்கள் அலுவலகத்துக்கு கண்டிப்பாக வந்து அறிவித்துவிட்டாவது செல்லவேண்டுமாம். பொதுவாக அன்மோலின் வேலை கோப்புகளை அடுக்குவது, குடிநீர் போத்தில்களை வாங்கி வருவது, பிரதி எடுப்பது போன்ற சிறிய வேலைகள் தான்.

அன்மோலுக்கு என சிறிய காவல்துறை சீருடை அணிந்து கச்சிதமாக காவல்துறை அதிகாரி போல இருக்கிறார். பள்ளியில் நடக்கும் ஒப்பனை ஆடை அணிவகுப்பில் இந்த சீருடையே அணிவாராம். பிற மாணவர்கள் இந்த உடையை வாடகைக்கு எடுத்து அணிவதாக கிண்டல் செய்வார்களாம். இருந்தாலும் இப்படி இந்த ஆடையை அணிவதில் அவரது தாயாருக்கு விருப்பம் இல்லை. இவனைப் பார்க்கும் போது எல்லாம் இறந்த கணவரின் ஞாபகம் வருவதாலும், தண்டேவாடா பகுதியில் காவல்துறை சீருடையை அணிவது ஆபத்தானதும் கூட என்கின்றார் அன்மோலின் அன்னையார். ஆனாலும் வறிய குடும்பத்துக்கு அன்மோல் மாதம் 4500 ரூபாயை சம்பாதித்துக் கொடுப்பது மிகவும் உதவியாக இருக்கின்றது.

ராய்பூரில் அன்மோல் காவலர்களுடன், திருடர்களுடன் புழங்கி வருகிறார். ” எனக்கு பயமே இல்லை. திருடர்களைப் பிடிக்கணும். திருடர்களை எளிதில் கண்டுப்பிடித்து விடலாம். அவர்கள் முகத்தில் முகமூடி அணிந்து இருப்பார்கள் ” என்றான் மழலைப் பேச்சு கலந்த மொழியில் அன்மோல்.

குடும்பத்தில் ஏற்பட்ட பெற்றோரின் ஒரு இழப்பை எப்படி இந்த சிறுவர்கள் தாங்கி கொள்கிறார்கள்? இளமையில் இன்பங்களைத் தொலைத்து எதோ ஒரு வகையில் குடும்ப சுமையைத் தாங்கு இவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? இளம்பருவத்தை கவலை இன்றி களிக்கும் காலத்தில் தந்தையின் இழப்பையும் ஏற்றுக் கொண்டு, குடும்ப பொறுப்பையும் சுமந்து அரசு அலுவலகத்தில் பணியாற்றி வரும் அன்மோல் போன்ற சிறுவர்களின் நிலை நமக்கு ஒரு அனுதாபத்தையும், மன இறுக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. ஆனால் சிறுவயதில் இப்படி பணியாற்றும் இந்த சிறுவர்களின் பொறுப்புணர்வும், தன்னம்பிக்கையும் நம்மை அசத்துகின்றது.

மொழியாக்கம்: அங்கிதா வர்மா

No comments:

Post a Comment