Monday, March 14, 2011

பெண்களின் அந்த "மூன்று நாள்' அவதியிலும் ஒரு நன்மை! ஸ்டெம் செல் தாராளமாய் கிடைக்குதாம்

தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல் எடுத்ததைப் போல, இப்போது, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் போது, வெளியேறும் ரத்தத்திலிருந்து ஸ்டெம் செல் எடுக்க முடியும் என, கண்டறியப்பட்டுள்ளது.

இது போன்று எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லை, "லைப் செல் இன்டர்நேஷனல்' என்ற தனியார் நிறுவனம், விற்பனைக்கே வைத்துள்ளது.

வயிற்றில் குழந்தை உருவாகும் போது, அது வளர, தாயின் கர்ப்பப் பைக்கும், குழந்தையின் வயிற்றுக்கும் இணைப்பாக ஒரு கொடி உருவாகும். இது, தொப்புள் கொடி என அழைக்கப்படுகிறது.

இந்த தொப்புள் கொடியில் உள்ள ரத்தத்தில், எந்த பாதிப்புக்கும் ஆளாகாத, புதிய வேர் செல்கள் இருக்கும். இந்த வேர் செல்களைக் கொண்டு, புற்றுநோய் உட்பட பல கொடிய நோய்களைத் தீர்க்கலாம் என, ஆய்ந்தறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தற்போது பக்க வாதம், முதுகெலும்பு பாதிப்பு போன்றவற்றுக்கு தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல் கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல் சேகரிக்க என்று வங்கிகள் ஏற்கனவே வந்துவிட்டன.இத்தகைய வேர் செல்கள், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தத்தில் இருப்பது தெரிய வந்தது.

இந்த ரத்தத்தை எடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில், இதில் உள்ள வேர் செல்கள், வேகமாக பல்கிப் பெருகும் தன்மை கொண்டவையாகவும், தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் தன்மை உடையதாகவும் இருப்பது தெரிந்தது.

எனவே, இந்த ரத்தத்தைச் சேமித்து வைத்தால், பல நோய்களுக்கு எளிதில் தீர்வு காணலாம் என கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து, மும்பையில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் இந்திரா ஹிந்துஜா என்பவர் ஆராய்ச்சி மேற்கொண்டார்.

அவர், சர்வதேச மருத்துவ சஞ்சிகையில் வெளியிடுவதற்காக, இது குறித்து கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.அதில், "கரு உருவாவதை எதிர் பார்த்து, கர்ப்பப் பையில் மாதா மாதம் உருவாகும் கர்ப்பப்பை உள் படிமங்கள், கரு உருவாகாமல் போகும் போது, தானாகவே ரத்தத்துடன் வெளியேறி விடுகின்றன.

இந்த உள் படிமங்களில், ஏராளமான வேர் செல்கள் உள்ளன. இவை, கருவில் உள்ள வேர் செல்களை ஒத்திருக்கின்றன. இவற்றைப் பதப்படுத்தி, வேர் செல்களைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டால், பல நோய்களுக்குத் தீர்வு காணலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தான், தற்போது, லைப் செல் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம், "லைப் செல் பெமே ' என்ற பெயரில், மாதவிடாய் ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட வேர் செல்லை, அறிமுகப்படுத்தியுள்ளது.

இதை அறிமுகப்படுத்தியவரும், வேர் செல் மாற்று சிகிச்சையால், ரத்தப் புற்றுநோயிலிருந்து முற்றிலும் வெளிவந்தருமான மாடல் அழகி லிசா ரே கூறுகையில், "வேர் செல் மாற்று சிகிச்சை செய்து கொண்டதன் மூலம், நோயிலிருந்து முற்றிலும் வெளி வந்த தன் முழு உதாரணமாக நான் திகழ்கிறேன்.

பெண்கள், மேலும் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ, மாதவிடாய் ரத்தத்திலிருந்து எடுக்கப்படும் வேர் செல்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன' என்றார்.மும்பையில் வில்லே பார்லே, முலுண்ட், தாதர் ஆகிய இடங்களில் இதற்கான வங்கி கிளைகளை லைப் செல் இன்டர்நேஷனல் திறந்துள்ளது.

தீர்வு:மாத விலக்கின் இரண்டாம் நாளில், பிறப்புறுப்பில், "மென்ஸ்ட்ருவல் கப்' செலுத்தி, ரத்தம் சேகரிக்கப்படும். பின், இந்த ரத்தத்தில் கிருமிகள் நீக்கப்பட்டு, வேர் செல்கள் பிரிக்கப்படும்.பிரித்தெடுக்கப்பட்ட வேர் செல், திரவ நைட்ரஜனில், மைனஸ் 150 டிகிரி செல்ஷியசில் பாதுகாக்கப்படும். இதைக் கொண்டு மூட்டு வலி, சில வகையான இதய நோய்களுக்கு தீர்வு காணலாம்

No comments:

Post a Comment