Tuesday, March 8, 2011

எஜமானின் பிரிவைத் தாங்காமல் மரணமடைந்த நாய்


தனது எஜமான் தலிபான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதால் மனம் உடைந்து போன பிரிட்டிஷ் இராணுவத்தின் மோப்பம் பிடிக்கும் நாய் மரணமடைந்தது.

இறந்த படை வீரர் லான்ஸ் கோப்ரல் லியாம் டஸ்கர். இராணுவத்தின் தேடுதல் பணிக்காகப் பயன்படுத்தும் மோப்ப நாய் தியோ. இவருக்கு செல்லப் பிராணி போன்றது. இவருக்கு மிகவும் விசுவாசமானது. இந்த நாயும் இவரும் இணைந்து பல தேடுதல்களை நடத்தி எண்ணற்ற பிரிட்டிஷ் படை வீரர்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

வாழும் போது எப்போதும் லியாமுடன் கூடவே இருந்த தியோ, தலிபான்களுடனான ஒரு மோதலில் லியோ கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் வலிப்பு ஏற்பட்டு மரணமடைந்து விட்டது. ஆப்கானிஸ்தானில் நஹ்ரே சராஜ் பகுதியில் தனது நாய் சகிதம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தான் அவர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.

கடந்த ஐந்து மாத காலத்தில் இவர் தனது நாயுடன் இணைந்து இந்தப் பகுதியிலிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 14 குண்டுகளையும், பெருந்தொகையான ஆயுதங்களையும் கண்டுபிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மோதலில் ஒரு நாயும் அதனைக் கையாள்பவரும் இணைந்து கண்டுபிடித்துள்ள பெருந்தொகை ஆயுதமாக இது அமைந்துள்ளது.

26 வயதான இந்தப் படைவீரரின் மரணம் கடந்த பத்தாண்டில் ஆப்கானிஸ்தானில் பலியான பிரிட்டிஷ் படைவீரர்கள் வரிசையில் 358 வது மரணமாகும். தியோவுடன் பணி புரிவது தனக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக அவர் அடிக்கடி தனது சகாக்களிடம் கூறுவதுண்டு.

தனது எஜமானும் மற்றும் நண்பனுமான லியோவின் பிரிவை தாங்க முடியாமலே மனமுடைந்து அதற்கு வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment