Tuesday, March 8, 2011

டிவிட்டரில் மன்னிப்பு கேட்டு ஒரே நாளில் பிரபலமான மனிதர்


ஒரே ஒரு டிவீட்(டிவிட்டர் பதிவு) பல மாயங்களை செய்யக்கூடும். இந்த மாயங்களுக்கு பல உதாரணங்களும் இருக்கின்றன.

சமீபத்திய உதாரணம் அமெரிக்க வாலிபர் ஒருவர் தன்னால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதற்கு டிவிட்டரில் மன்னிப்பு கேட்டு ஹீரோவாகியிருக்கிறார். சியாட்டல் நகரை சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் மைக்கேல் மைக்கேலிட்டி.

சமீபத்தில் ஒரு நாள் காலையில் அவர் சியாட்டல் நெடுஞ்சாலையில் தனது பி.எம்.டபில்யூ காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடுவழியில் அவரது கார் மக்கர் செய்தது. போகிற வழியில் நிறுவன டீலர்ஷிப் இருக்கும். அங்கு பழுது பார்த்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் அவர் மெதுவாக காரை ஓட்டிச் செல்ல சிறுதி நேரத்திலேயே கார் முழுவதும் பழுதாகி சாலை நடுவிலேயே நின்று விட்டது.

பரபரப்பான நெடுஞ்சாலையில் நடுவழியில் கார் நின்றால் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள். பின்னே வரிசையாக வந்து கொண்டிருந்த வாகன‌ங்கள் ஒலி எழுப்பி கொண்டிருக்க மற்ற வாகன‌ங்கள் கொஞ்சம் பக்கவாட்டில் வந்து முன்னேறி செல்ல முயன்று கொண்டிருந்தன. மைக்கேல் பதட்டத்தோடு கார் நிறுவனத்திற்கு போன செய்துவிட்டு உதவிக்கு காத்திருந்தார்.

ஆனால் இது போன்ற நேரத்தில் பொதுவாக எல்லோரும் செய்யக்கூடியதை போல போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக அதிருப்தியையும், கோபத்தையும் தெரிவிக்கும் சகவாகன ஓட்டிகளிடம் சண்டை போட்டுக் கொண்டு நிற்கவில்லை.

மாறாக அவர் உள்ள படியே தன்னால் ஏற்பட்ட பாதிப்பிறகு மனம் வருந்தினார். காரை இழுத்துச் செல்ல உதவி கிடைக்கும் வரை வேறு எதுவும் செய்ய முடியாது என்னும் நிலையில் அவர் டிவிட்டரில் இது பற்றி தன் நிலையை பகிர்ந்து கொள்ள விரும்பினார்.

சியாட்டல் நெடுஞ்சாலையில் நடுவே போக்குவரத்தை மறித்த படி ஒரு கார் நின்று கொண்டிருக்கிறது. அந்த கார் என்னுடையது தான். என‌க்கும் இதில் வருத்தம் தான் என்று தெரிவிக்கும் பதிவு ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டார்.

கிட்டத்தட்ட டிவிட்டர் மூலம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என்று கூட சொல்லலாம். ஆனால் யாரிடம் என்று குறிப்பாக இல்லாமல் பொதுவாக தனது வருத்ததை டிவிட்ட‌ரில் அவர் பகிர்ந்து கொண்டார்.

டிவிட்டரில் அந்த பதிவை படித்தவர்கள் அவரது நிலையை புரிந்து கொண்டவர்கள் போல அதனை திரும்பவும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர். இவர்களில் வாஷிங்டன் போக்குவரத்து அலுவலக அதிகாரியும் அடக்கம். அந்த அதிகாரி மறுடிவீட் செய்ததோடு மைக்கேலுக்கு இடம் அளிக்கும் படியும் வாகன ஓட்டிகளை கேட்டுக் கொண்டார்.

20 நிமிடங்களில் பலர் அந்த செய்தியை மறு வெளியீடு செய்யவே நூற்றுக்கணக்கானோர் இந்த‌ சம்பவம் பற்றி தெரிந்து கொண்டனர். அவரது நிலையையும் புரிந்து கொண்டனர். ஒரு சிலர் அவருக்கு ஆறுதலும் தெரிவித்தனர். அரை மணி நேரத்தில் அவரது கார் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்தும் சீரானது.

இதற்குள் அவருக்கு டிவிட்டரில் புதிய நம்பர்களும் கிடைத்திருந்தனர். கார் பழுது பார்க்கப்பட்டு வந்த பிறகு அத‌னையும் டிவிட்டரில் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து கொண்டார். டிவிட்டரில் மன்னிப்பு கேட்ட இந்த சம்பவத்தை நாளிதழ்களும் செய்தியாக வெளியிட்டன. அதோடு தொலைக்காட்சியிலும் பேட்டி கண்டு ஒளிபரப்பினர்.

மைக்கேல் இந்த ஆதரவையும் புகழையும் எதிர்பார்த்திருக்கவில்லை. எந்த வித திட்டமிடலும் இல்லாமல் இயல்பாக தனது நிலையை டிவிட்டரில் அவர் பகிர்ந்து கொண்டார். ஆனால் அதற்கு பலரும் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் காண்பித்த பரிவு அவரை நெகிழ வைத்து விட்டது.

தனது மகிழ்ச்சியையும் டிவிட்டர் வழியே பகிர்ந்து கொண்டார். அது மட்டும் அல்லாமல் டிவி பேட்டியில் தன்னை பார்த்த பழைய நண்பர்கள் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஸ்பீடு பிரேக்கருக்கு தனது பெயரை வைக்க வேண்டும் என்று சகோதரர் கூறியதாகவும் அவர் மகிழ்ச்சியோடும் குறிப்பிட்டிருந்தார்.

மைக்கேல் டிசைனராக இருக்கிறார். டீப்கிரேசாங் டாட் காம் என்ற பெயரில் இணையதளம் ஒன்றையும் வைத்திருக்கிறார். இந்த விவரம் எல்லாம் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. ஆனால் டிவிட்டரில் போக்குவரத்து பாதிப்புக்காக மன்னிப்பு கேட்டது அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கி விட்டது.

No comments:

Post a Comment