நான் ஊருக்கு போகிறேன்: வைகோ


ம.தி.மு.க.,வுக்கு 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்பதில் அ.தி.மு.க., திட்டவட்டமாக இருந்ததால் அக்கூட்டணியில் நீடிப்பது குறித்த இறுதி முடிவெடுப்பதற்கு ம.தி.மு.க., உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச்செயலர்கள் கூட்டம், தாயகத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய நடந்தது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், 56 மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி மலர்ந்த சம்பவங்களையும், 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது, திருமங்கலம் இடைத்தேர்தலில் அத்தொகுதியை அ.தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது, 2009ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த அவமான நிகழ்வுகளையும் வைகோ விவரித்தார்.

மேலும், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன் முதல் கட்டமாக 35 தொகுதிகளும், இரண்டாவது கட்டமாக 30 தொகுதிகளும், மூன்றாவது கட்டமாக 21 தொகுதிகளும் ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையை பற்றியும் வைகோ தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தரப்பில் ஆறு தொகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு பின், எட்டு தொகுதிகள், ஒன்பது தொகுதிகள் என அதிகரித்து இறுதியாக 12 தொகுதிகள் வரை தருவதற்கு நடத்திய பேரத்தையும், வைகோ ஆவேசமாக விளக்கி பேசினார்.

தொகுதி பங்கீட்டில் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டு புறக்கணிப்பதாக அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.

ம.தி.மு.க., கொள்கைப் பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, அ.தி.மு.க., தலைமையை கடுமையாக விமர்சித்தார். தலைவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப மாவட்டச்செயலர்கள் 48 பேர், "அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற வேண்டாம்' என, தெரிவித்தனர்.

ஒரு சிலர் மட்டும் ம.தி.மு.க.,வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அ.தி.மு.க., தரும் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து பேசினர். அவர்களுக்கு வைகோ பதிலளித்து பேசும்போது, "நீங்கள் விரும்பினால் போட்டியிடுங்கள். நான் தொகுதிகளை கேட்க மாட்டேன். பிரசாரத்திற்கு வரமாட்டேன். என்னை அவமானப்படுத்தி விட்டனர்.

தேர்தலில் செலவு செய்வதற்கும் நமது கட்சியில் பணம் இல்லை' என்றார்.அதிகாலையில், ஐந்து பக்கம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், "புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்து போட்டியிடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு ம.தி.மு.க., கருவியாயிற்று என்ற துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும்.

கண்களை விற்று சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை ம.தி.மு.க., வுக்கு இல்லை. தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை பொதுத்தேர்தலில் மட்டுமே போட்டியிடுவது இல்லை' என, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதா வைகோவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் வைகோ அந்த கடிதத்தி பரிசீலனை செய்யவில்லை. நேற்று மாலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு புறப்பட்டார்.

விமான நிலையத்தில் வைகோ பேட்டியளித்தார்.

தேர்தலை புறக்கணிக்க நீங்கள் எடுத்துள்ள முடிவு வருத்தத்தை அளிப்பதாகவும், முடிவு எப்படி இருந்தாலும் அன்பு சகோதரியின் நன்மதிப்பும், அன்பும் எப்போதும் இருக்கும் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டதற்கு,

234 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய 74 தொகுதிகள் போக மீதமுள்ள 160 தொகுதிகளுக்கும் கடந்த 16-ந் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்த போதே ம.தி.மு.க.வை பிடரியை பிடித்து நாங்கள் வெளியேற்றுகிறோம் என்ற விதத்தில் அவமதித்து கூட்டணியை விட்டு வெளியேற்றி விட்டார்.

மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க. மீது ஏற்பட்ட விமர்சனத்தின் காரணமாக 19-ந் தேதி அன்று அ.திமு.க. எங்களுக்கு ஒதுக்க முன்வந்த தொகுதிகளின் எண்ணிக்கை 12 தான் என்பதையும் ஊடகங்களில், செய்தி ஏடுகளில் எண்ணிக்கை குறித்து உலவ விடப்பட்ட செய்திகள் உண்மை அல்ல என்பதையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அவர்கள் குறிப்பிட்ட 12 தொகுதிகள் என்பதில் இருந்து நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிட்ட குற்றச்சாட்டை உண்மை என்று அவரே ஒப்புக்கொண்டு விட்டார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் மனதிலும், பொது மக்கள் மனதிலும் ஏற்பட்டுள்ள, அதிருப்தியின் காரணமாகவே எனக்கு இப்படியொரு கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார் என்று பதிலளித்தார்.

நீங்கள் வெளியூர் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக செய்திகள் வருகிறதே? என்று கேட்டபோது, ``இல்லை எனது தாயாரை சந்தித்து நடந்த சம்பவத்தை விளக்குவதற்காக சொந்த ஊருக்கு செல்கிறேன். அம்மாவை பார்க்க செல்கிறேனே தவிர வேறு ஒன்றும் இல்லை.

இன்னும் இரண்டு மாதங்களுக்கு நான் எந்த அறிக்கையும் விடப்போவதில்லை. அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கப்போகிறேன் என்று தெரிவித்தார்.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment