Sunday, March 13, 2011

ரஜினி ஆதரவு யாருக்கு? சோ ரகசிய சந்திப்பு


தமிழக அரசியலில் நடிகர் ரஜினி ஈடுபடுவார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் மூப்பனார் விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய போது ரஜினி அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் ரஜினி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அ.தி.மு.க.வுடன் ரஜினிக்கு மோதல் ஏற்பட்டதில் இருந்து ரஜினி அலை வீசத் தொடங்கியது. ரஜினி அரசியலில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

ஆனால் ரஜினி எதையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்களை ஆண்டவன்தான் காப்பாத்தணும் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்திய அவர் சில படங்களில் “பஞ்ச்” டயலாக் பேசி, அவரது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தினார். என்றாலும் அரசியலில் அவர் நேரடியாக ஈடுபடவில்லை.

ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்பது அவரது சூசக பேச்சுக்கள் மூலம் உறுதியானது. ஆனாலும் ரஜினி ஆதரவு யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு தேர்தலிலும் எதிரொலித்தபடி உள்ளது. இந்த விஷயத்தில் தனது லட்சோப லட்சம் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் ரஜினி தனது கருத்துக்களை வெளியிடுவது உண்டு.

அத்தகைய எதிர்பார்ப்பு தற்போதைய தேர்தலிலும் எழுந்துள்ளது. தமிழக தேர்தல் களத்தில் எற்கனவே, விஜய காந்த், சரத்குமார், சீமான், கார்த்திக், குஷ்பு, விஜய் உள்பட பல நட்சத்திரங்களின் படையெடுப்பு பிரசார களத்தை விறுவிறுப்பாக்கும் சூழ்நிலையை உண்டாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் ரஜினியின் ஆதரவும் மிக முக்கியமானது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் நடிகர் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் “துக்ளக்” ஆசிரியர் சோ சந்தித்துப் பேசினார். அவர்கள் இருவரும் சுமார் 1 மணி நேரம் பேசினார்கள். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் இருவரும் பேசியதாக தெரிய வந்துள்ளது.

அதன் பிறகு ரஜினியும், சோவும் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தனியாகவே சென்றனர். அவர்கள் எங்கு சென்றனர்? யாரை சந்தித்துப் பேசினார்கள்? என்ற விவரம் தெரிய வில்லை.தமிழக அரசியல் பிரசாரம் சூடு பிடிக்கும் போது ரஜினி தனது கருத்தை வெளியிடுவார் என்று தெரிகிறது.

அவர் யாருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் வழக்கம் போல அவரது ரசிகர்களிடம் எதிரொலிக்க தொடங்கி விட்டது. இது தொடர்பாகத்தான் சோ-ரஜினி சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோவிடம் தொடர்பு கொண்டு நிருபர் கேட்ட போது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ரஜினியின் முடிவு குறித்து இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல இயலாது என்று மட்டும் சோ கூறினார். அ.தி.மு.க அணியில் விஜயகாந்தின் தே.மு.தி. க.வை இடம் பெற செய்ததில் சோ முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் வெளியானது. எனவே ரஜினியுடன் தற்போது சோ சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

http://www.maalaimalar.com/2011/03/13113747/rajini-support-to-who-cho-secr.html

No comments:

Post a Comment