Friday, March 11, 2011

போதையில் ஆட்டம் போட்ட பெண் பொலிஸ்!


போதையில் ரகளை செய்து, ஓசி, "சைடு டிஷ்'க்கு கடை ஊழியரை தாக்கிய பெண் போலீஸ்,"சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சென்னை, மயிலாப்பூர் எலைட் குடியிருப்பில் வசித்து வருபவர் ராணி(32); திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் கான்ஸ்டபிளாக உள்ளார். திருமணமாகாத நிலையில் இவர், குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

தினசரி குடித்துவிட்டு, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையில் உள்ள மிக்சர் கடையில், "இலவச சைடு டிஷ்' வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இது போல், நேற்று முன்தினம் மாலை, அளவுக்கதிகமாக மது அருந்திய ராணி, ஒரு ஆட்டோ பிடித்து, லாயிட்ஸ் சாலை சென்றார். அங்குள்ள மிக்சர் கடையில், வழக்கமான, "சைடு டிஷ்' கேட்டார்.

கடை ஊழியர் நடேசன் தர மறுக்கவே, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, நடேசனின் கையை முறுக்கிய ராணி, போலீஸ் பாணியில் ஒரு உதை கொடுத்தார்.

இதில், நடேசன் கீழே விழுந்த போது, கையில் கிடைத்த சிப்ஸ் மற்றும் காரத்தை அள்ளி, ஆட்டோவில் போட்டுக் கொண்டு புறப்பட்டார்.

அப்போது, நடேசன் சத்தம் போட்டதால், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து, ஆட்டோவை நிறுத்தி, ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையம் கொண்டு சென்று, அங்கிருந்த போலீசாரிடம், போலீஸ் உடையில் இருந்த ராணியை ஒப்படைத்தனர்.

போலீசார், உடனடியாக ராணியை, ராயப்பேட்டை மருத்துவமனை சென்று, மது அருந்தியதற்கான சான்றிதழ் பெற்று, அவர் மீது வழக்கு பதிவு செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

பெண் போலீஸ் ஒருவர், போலீஸ் உடையில் இருக்கும் போதே, மது அருந்தி கலாட்டா செய்த விவகாரம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றது.

ராணி மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்," சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடந்த 1997ம் ஆண்டு போலீசில் சேர்ந்த ராணி, திருச்சியில் பணியாற்றி வந்தார்.

அங்கும், பணியின் போது மது அருந்தியதால், கோவைக்கு மாற்றப்பட்டார். கோவையிலும் அதே நிலை தொடர, அங்கிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment