கேள்வி கேட்ட கருணாநிதி பணிந்தார்: காங்கிரசுக்கு 63 சீட்கள் தர முடிவு


காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?' என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகுகிறது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற்றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 சீட்களை தர ஒப்புக்கொண்டார். அமைச்சர்களின் ராஜினாமா நாடகமும் முடிவுக்கு வந்தது.

"தி.மு.க., அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் திங்கள் கிழமை காலையில் அளிப்பர்' என்று தி.மு.க., ஏற்கனவே அறிவித்து இருந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும் நேற்று காலை டில்லி வந்திறங்கினர். அனைத்து அமைச்சர்களும் நேரடியாக அமைச்சர் அழகிரியின் இல்லத்திற்கு விரைந்தனர். அங்கிருந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிரதமரை சந்திக்கச் செல்வர் என்றும் கூறப்பட்டது. அதற்காக பிரதமரிடம் நேரம் கேட்கப்பட்டிருப்பதாகவும், காலை 11 மணியளவில் பிரதமர் நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது. பார்லிமென்ட் நடந்து கொண்டிருப்பதால் அங்கு, பிரதமர் அலுவலகம் எதிரே நிருபர்கள் குவிந்தனர். திடீரென நிலைமை மாறியது.

மத்திய ஊழல் ஆணையத்தின் தலைவராக தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரம் குறித்து பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்வதில் பிரதமர் வட்டாரங்கள் பிசியாக இருந்ததால் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லாமல் போகவே, மறுபடியும் பரபரப்பும், சஸ்பென்சும் தொடர்ந்து கொண்டே இருந்தது. மதியம் 12 மணியளவில் பார்லிமென்டில் பிரணாப் முகர்ஜியை தி.மு.க., தரப்பிலிருந்து அமைச்சர் ஒருவர் மட்டும் வந்து சந்தித்து விட்டு போனார். அவர் சென்ற சில நிமிடங்களில், பிரணாப் முகர்ஜியின் அறைக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் வந்தார். அங்கு, குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோரும் உடன் இருக்க மீண்டும் ஆலோசனை தொடர்ந்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்புக்கு பிறகு வெளியில் வந்த சிதம்பரம், எதுவுமே கூறாமல் சென்றார். குலாம் நபி ஆசாத்தோ, "பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை; முட்டுக்கட்டை நீடிக்கிறது' என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

இப்படி அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் எதுவுமே எந்தவொரு அறிகுறியையும் காட்டாமலேயே நடந்து கொண்டிருந்ததால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க கூட முடியாத அளவுக்கு மிகுந்த பரபரப்பும், சஸ்பென்சும் நீடித்தபடி இருந்தது. பின்னர் 4 மணியளவில் முதல்வர் கருணாநிதியை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். சென்னையில் இதை உறுதிப்படுத்திய துணை முதல்வர் ஸ்டாலின், "மேலும் ஒரு நாள் கால அவகாசம் காங்கிரஸ் கேட்டிருப்பதாக அறிவித்தார். இதையடுத்து, பரபரப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

துணை முதல்வரின் அறிவிப்பையடுத்து, நேற்று நாள் பூராவும் அழகிரி வீட்டில் ராஜினாமா கடிதங்களோடு காத்திருந்த தி.மு.க., அமைச்சர்கள், பிரதமருடனான சந்திப்பு நிகழ்ச்சியை கைவிட்டனர். காங்கிரசுக்கு தி.மு.க., 60 தொகுதிகள் வரை தருவதற்கு ஒப்புக் கொண்டது. பா.ம.க., தரப்பில் இருந்து 3 தொகுதிகள் வரை விட்டுக் கொடுத்து மொத்தம் 63 தொகுதிகளாக அளித்து சுமுகமான ஒரு முடிவை எடுத்து, இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தி.மு.க., - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டு பிரச்னைக்கு இன்று இறுதி முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இடங்கள் அறிவிக்கப்பட்ட வேறு கட்சிகளிடம் இருந்து, ஒரு சில இடங்களைக் குறைப்பது குறித்து தி.மு.க.,ஆலோசனை நடத்தி வருகிறது.

முதல்வர் கேட்ட கேள்வி: கடந்த 5ம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: காங்கிரசுக்கு 60 இடங்கள் கொடுக்க தி.மு.க., ஒப்புக் கொண்ட நேரத்திலே, பா.ம.க.,விற்கு 31 இடங்கள், வி.சி.,க்கு 10 இடங்கள், கொங்கு முன்னேற்றக் கழகத்திற்கு ஏழு இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு மூன்று இடங்கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடம் என, தி.மு.க.,விற்கு 122 இடங்கள் தான் எஞ்சியிருந்தன. இந்நிலையில், காங்கிரஸ் 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

இதுவரை ஒதுக்கப்பட்ட தொகுதிகள்: தற்போதைய நிலையில், ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 52 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கிவிட்டது. மீதமுள்ள 182 தொகுதிகளில் காங்கிரசுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கினாலும், தி.மு.க., வசம் மீதமிருப்பது 122 தொகுதிகள் தான். எனவே, 63 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தால், தனிப்பெரும்பான்மை பெற 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்ற நிலையில், தி.மு.க.,வால் 119 தொகுதிகளில் தான் போட்டியிட வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரு சிலவற்றை திரும்பப் பெற்று, காங்கிரசை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள தி.மு.க., முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

பா.ம.க., .................................................... 31
விடுதலை சிறுத்தைகள் ................................. 10
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் ................. 7
முஸ்லிம் லீக் ............................................... 3
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ..................... 1

- நமது டில்லி நிருபர் - தினமணி
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment