63 நாயன்மார்களும் …. 3 சீட்டு சூதாட்டமும்.- மணி.செந்தில்


காங்கிரசுக்கு 63 நாயன்மார்களைப் போல 63 இடங்களை ஒதுக்கியிருக்கிறேன் என்று கருணாநிதி தெரிந்து சொன்னாரோ…தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. 63 –ல் முதலாம் நபர் திருஞான சம்பந்தர். 8000 சமணர்களை கழுவிலேற்றி அந்த காலத்து ராஜபக்சே பட்டம் வாங்கியவர். இரண்டாம் நபர் திருநாவுக்கரசர். வயிற்று வலியை காரணம் காட்டி கட்சி மாறியவர். .(யாருக்காவது இந்த காலத்து திருநாவுக்கரசர் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல..) மூன்றாம் நபர் சுந்தரர் . முதலில் ஒரு பெண்ணை மணவறை வரை அழைத்து ஏமாற்றி விட்டு பின் திருவெற்றியூரில் ஒரு மனைவி, திருவாரூரில் ஒரு மனைவி என வாழ்ந்த அந்த காலத்து ‘நான் அவனில்லை’ ஆள். நான்காம் நபர் மாணிக்கவாசகர். குதிரை வாங்க சொல்லி கொடுத்த அரசுப் பணத்தினை கையாடல் செய்த அந்த காலத்து கல்மாடி. இவ்வாறாக நீளுகின்ற இந்த பட்டியலை தான் காங்கிரசாக கருணாநிதி காட்டுகிறார். நவீன நாயன்மார்களும்..அறிவாலய வியாபாரிகளும் ஆடிய 3 சீட்டு சூதாட்டத்தில் தோற்றது என்னவோ கரை வேட்டி கட்டி..முரசொலியில் முழ்கி..கருப்பு சிவப்பில் வாழ்க்கையை தொலைக்கும் வக்கற்ற அப்பாவி தொண்டன் தான்.

.சோகமும், வேகமும் , நகைச்சுவையுமாய் கலந்து கட்டி அடித்த இக்காட்சிகள் ஒரு வெகுஜன திரைப்பட காட்சிகள் அல்ல . உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் கள காட்சிகள் இவை. இளகிய மனம் படைத்தோர் இக்காட்சிகளை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் அது மிகையல்ல. திரெளபதி துரியோதனனைப் பார்த்து செய்த கிண்டல் தான் 18 நாள் போர்க்களமாக விரிந்தது என்கிறது இதிகாசம். அது போல “இவ்வளவு சீட்டு கேக்குறீங்களே – நிக்க உங்ககிட்ட ஆள் இருக்கா ?” என ஒருவர் அடித்த கிண்டல் தான் 63 ஆக நாம் ஆட வேண்டிய களமாக மாறி நிற்கிறது. அமைச்சர் துரைமுருகன் அடித்த அந்த கிண்டலில் வெகுண்டெழுந்து சென்ற கதர் பட்டாளம் கடைசியில் திரைமொழியில் சொல்வதென்றால் ப்ளாக்மெயில் செய்து 63 இடங்களை திமுகவிடமிருந்து பறித்தது. திமுக விடம் காங்கிரசு ப்ளாக்மெயில் செய்வதற்கு காரணம்…..இருக்கவே இருக்கிறது… இமாலய ஊழல் ஸ்பெக்ட்ரம். இதற்கு நடுவே அண்ணா அறிவாலயத்தில் சிபிஐ ரெய்டு….கனிமொழி,தயாளு அம்மாளிடம் விசாரணை என்றெல்லாம் பரபரப்பு காட்சிகள் வேறு…இதன் நடுவில் இடைவேளைக்கு முந்தைய ஒரு காட்சியில் …ஒரு பாட்டில் கோடீஸ்வரனாக்கும் விக்கிரமன் படத்து பாடல் போல மானமிகு. ஆசிரியர் வீரமணி சுயமரியாதை பேசி புல்லரிப்பை ஏற்படுத்தினார். நடுநடுவே நகைக்கடை அதிபர் போல வந்து நிற்கும் குங்குமப்பொட்டு தங்கபாலு சற்றும் அசராமல் “ மிக சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.நாளையும் பேச்சுவார்த்தை தொடரும்” என்பதை சொல்லி வைத்த பாடத்தை தப்பாமல் பேசும் கிளிப்பிள்ளையாய் நிருபர்களிடம் சொல்லி நகைச்சுவையை ஏற்படுத்தினார். சகோதரப் பாசத்தினால் முதல்நாள் லாலி பாடிய திருமாவும், ராமதாசும் மறுநாள் அப்படியே திருப்பி அடித்து மக்களை திகைக்க வைத்தார்கள். நாக்கினால் இவ்வளவு வேகமாய் புரள முடியுமா என்பதற்கு நாசூக்கான ஆதாரங்கள் இவர்கள் . தமிழ்த் தேசிய சகதியாய் திமுகவின் சல்லடையில் தேங்கிக் கிடக்கும் பேராசிரியர் சுப.வீக்கு தற்போது பிடித்த வசனம்..வடிவேலின் அது நேத்திக்கு…இது இன்னிக்கு. காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து திமுக வெளியேற போகிறது என உயர்நிலை (?) செயல் திட்டக்குழுவின் தீர்மானத்தினை கேட்டு ( ஆவ்வ்…எவ்வளவு பாத்தாச்சி…) உணர்ச்சிவசப்பட்டு சோனியா ஒழிக…கலைஞர் வாழ்க என அப்பாவி திமுக தொண்டன் அலறி…அலறி தொண்டை புண்ணாகிப் போனதுதான் மிச்சமாய் நின்ற எச்சம்.
.தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் கொள்கை பேச வக்கற்று ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டு திகார் சிறையில் களி தின்கிறார் . அவர்தான் குற்றவாளி என காங்கிரசு கட்சியின் மத்திய அரசு சொல்கிறது. முதல்வரின் மகளும்..மனைவியும் எப்போதும் விசாரணை வளையத்திற்குள். இதையெல்லாம் மீறி…கருணாநிதி காங்கிரசு மீது வைத்திருக்கும் அளவற்ற காதலுக்கு காரணம் பதவியின் மீதும்..பணத்தின் மீதும் வைத்துள்ள வெறிதானே ஒழிய வேறென்ன..?

மக்களுக்கான பணி என்ற நிலைமாறி மக்களின் தீராத பிணியாக மாறி நிற்கிறது தமிழ்நாட்டு அரசியல். அழுக்கேறி குடலைப் பிடுங்கும் நாற்றமெடுக்கும் சாக்கடையில் நெளியும் புழுக்களாய் அரசியல் வியாதிகள் இவைகள் நெளிய …இவைகளை சற்றும் கூச்சம் இல்லாமல் பார்க்க பழக்கப் பட்டு விட்டான் தமிழன் . இந்த முறை இந்த கேடு கெட்ட ஆட்டங்கள் சற்றே அதிகம் . ஈழத் தமிழினத்தின் ரத்த கறை படிந்த காங்கிரசின் கரங்களோடு கை குலுக்க திமுக நடந்த நடை…அலைந்த அலைச்சல் இவை எல்லாம் யாரிவர்கள்.. என்பதனை நமக்கு அழுத்தம் திருத்தமாக அடையாளம் காட்டின. பதவியை பாதுகாக்கவும், ஊரை கொள்ளையடித்து சேர்த்து வைத்த ஊழல் காசினை பதுக்கவும் இவர்கள் காட்டிய அக்கறையை சற்றே அழிவின் விளிம்பில் நின்ற ஈழத் தமிழினத்தின் மீதும் காட்டியிருந்தால் கல்லறைகளாவது குறைந்திருக்குமே…

.இன்றளவும் நம்மால் சீரணிக்கவே முடியாத அழிவுக் காட்சிகள் நம் கண்ணிலே தேங்கிக் கிடக்கின்றன. யாராலும் ஈடு கட்ட இயலாத ஒரு அறிவார்ந்த தமிழினத் தலைமுறை அழிக்கப்பட்டிருக்கிறது .. இனி நாம் கட்ட ஒரு தலைமுறை வேண்டுமே என்ற தவிப்பில் நம்மை தகிக்க வைக்கும் உலகத் தமிழினத்தின் ஒற்றை நாடு உருக் குலைந்து கிடக்கின்றது. இன்றளவும் கோணிப் பைக்குள் அடுத்த வேளை சோற்றிக்காக நாறிக் கிடக்கிறான் நம் இனத்து சகோதரன். பிணந்தின்னி கழுகு கூட உண்ண மறுக்கும் அருவருப்பு பிணமாய் நம் அக்காவையும் ,தங்கையும் சிதைத்துப் போட்டு வைத்திருக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு உற்ற துணையாய்…ஆயுதங்கள் அள்ளிக் கொடுத்து..ஆட்களை அனுப்பி வைத்து அழித்து முடித்து வைத்திருப்பது யார் என்று உலகத்திற்கே தெரியும்.

.பதவிகள்…பணங்கள்…என தங்க காசுகள் மினுமினுத்து புரளும் ஓசையில் இனத்தினை காட்டிக் கொடுத்தார்கள் நவீன யூதாசுகள். தன் மவுனமே தன் இனத்தினைக் கொன்றது என்ற குற்ற உணர்வில் சிலுவை சுமக்கிறது தமிழினம்.. நினைவெங்கும் அப்பிக் கிடந்து வன்மம் வளர்க்கச் சொல்கிறது சொந்த சகோதரனின் குருதி. எதன் பொருட்டும் மன்னிக்கவே முடியாத..மறக்கவே இயலாத காயங்களை நம்முள் ஏற்படுத்தியவர்கள் புனிதர்களாய் மாறி ஓட்டுப் பிச்சை கேட்டு வீதியில் வருகிறார்கள். கையோடு…கைகளாய் இணைந்து வரும் அந்த இணக்கத்தின் இடைவெளியில் பாருங்கள் .. சொட்டிக் கொண்டே இருக்கிறது …சரியாக மூடப்படாத இரவு நேரத்து குடிநீர் குழாய் போல நம் ஈழத்தின் ரத்தம்.

.நம் விரலில் இடப்படுகின்ற அடையாளம் வெறும் மையல்ல. நாம் பொத்தி பொத்தி நம்முள் வளர்த்து வரும் நம் இனத்தின் வன்மம் அது. நம் தமிழினத்தின் ஒற்றைக் கனவான தமிழீழத்தினை தகர்த்த காங்கிரசினை ஆவேசம் கொண்ட தமிழினம் இந்த மண்ணை விட்டு அகற்றட்டும்.வாக்குச் சாவடிக்குள் நுழையும் போது சற்றே எத்தனிப்போம். ஒரு நொடி கண் மூடுவோம். பல்லாயிரக்கணக்கான நம் சகோதரர்களின் பிணங்கள். சகிக்க முடியாத நம் சகோதரிகளின் ஓலங்கள்… எதுவும் அறியாத நம் அப்பாவி குழந்தைகளின் சிதைந்த உடல்கள்..அத்தனையும் நினைவிற்கு வரட்டும். பிறகு அழுத்துவோம். ஒரே அழுத்து. அந்த ஒற்றை அழுத்தலில் பல்கி பெருகி வெடிக்கட்டும் ஒரு இனத்தின் கோபம்.

.திலீபன்(எ)மணி.செந்தில்.
நாம் தமிழர் கட்சி
கும்பகோணம்
www.manisenthil.com.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment