Monday, March 14, 2011

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்-விக்கிலீக்ஸ் மர்மங்கள்! தோடரும் பாகம் 13.முற்றும்


இத்தொடரின் கதாநாயகனும், ஸ்விடனின் மைனர் குஞ்சுமான ஜூலியன் சரணடைந்த பின்னர் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஜூலியன் சிறை சென்றதும் கடலலைகள் பாறைகள் மீது மோதியபடி நின்றன, பறவை கூட்டங்கள் வானில் பறந்தபடி நின்றன, உலகமே ஸ்தம்பித்துப் போனது. ட்விட்டர், வலைப்பதிவுகள், பேஸ்புக் என இணையமெங்கும் சோக கீதங்கள் தட்டச்சிடப்பட்டது. விக்கிலீக்ஸ் ஆர்வலர்கள் அனைவரும் ஜூலியன் விரைவில் வழக்கிலிருந்து மீண்டு வர மண் சோறு சாப்பிட்டு, அலகு குத்தி, பால் குடமெடுத்து அனேக நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க, ஸ்விடனும், பிரிட்டனும் மைனர் குஞ்சை சுட்டே தீருவது என்று உறுதியாக இருந்தன.
அடுத்த சில நாட்களில் நீதிமன்றத்தில் ஸ்விடனுக்கு ஜூலியனை அனுப்பி வைப்பதற்கான விசாரணை நடத்துவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. தங்கள் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளை மட்டுமே அடைத்து வைக்கும் தனிச் சிறையில், வெறும் வானொலி வசதி மட்டுமே கொண்ட அறையில் அடைக்கப்பட்டார் ஜுலியன். அவ்வாறு அடைக்கப்பட்டது ஜூலியனின் உயிர்ப் பாதுகாப்புக்காக என்று சமாளித்தது இங்கிலாந்து. பயன்பாட்டுக்கு இணைய இணைப்பு ஏதுமில்லாத ஒரு மடிக்கணினி ஒன்று கேட்கப்பட்ட போது, அச்சத்துடன் மறுக்கப்படும் அளவுக்கு ஜூலியனின் திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தது இங்கிலாந்து அரசாங்கம். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன் தாயுடன் சில நிமிடங்கள் பேச மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது, அதைப் பயன்ப்டுத்தி தன் தாய் மூலம் "நான் குற்றமற்றவன், இவையனைத்தும் ஆதாரமின்றி, பழிவாங்கும் நோக்கோடு செயல்படுத்தப்படுகின்றன" என்று அறிக்கை விட்ட ஜூலியன், ஒரு வாரம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட, விக்கிலீக்ஸ் ஆர்வலர்களான இங்கிலாந்தின் எழுத்துலக, திரையுலக பிரபலங்கள் பலர் ஜூலியனின் பிணைக்கு உத்தரவாதம் அளிக்க முன்வர, அனைத்து தரப்பிலும் திருப்தியடைந்த நீதிபதி ஜூலியனுக்கு பிணை வழங்க உத்தரவிட, இங்கிலாந்து அரசாங்கத் தரப்பு மேல்முறையீடு செய்து அனைத்தையும் மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திப்போட்டது.
இங்கிலாந்தின் இச்செயல் மிகப்பெரிய விமர்சனத்துக்குள்ளானது. விக்கிலீக்ஸ் ஆர்வலரும், முன்னாள் இராணுவ வீரருமான வாகன் ஸ்மித், தனது 600 ஏக்கர் பண்ணை வீட்டில் ஜூலியனைப் பிணைக் காலத்தில் தங்க வைக்க முன்வந்தும், பல பிரபலங்கள் உத்தரவாதம் அளித்தும், இதுவரை நிரூபிக்கப்படாத ஒரு குற்றத்திற்காக, ஒரு தனி மனிதனை இப்படி அலைக்கழிக்கக் கூடாது என்று அனைவரும் கொந்தளித்தனர். அடுத்த வாய்தாவில் 240,000 பவுண்ட்களுக்கு பிணை வழங்கப்பட்டது. ஆதரவாளர்கள் அனைவரும் பணம் திரட்டி, உடனே செலுத்தி ஜூலியனை வெளிக்கொணர்ந்தனர். பிணைக்காலத்தில் ஜூலியனின் இருப்பிடத்தினை கண்டறியும் பொருட்டு ஒரு இலத்திரனியல் தாயத்து ஒன்று மந்திரித்து, அவரது காலில் கட்டிவிடப்பட்டது, மேலும் தினமும் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் 'உள்ளேன் ஐயா' சொல்லவும் உத்தரவிடப்பட்டது. விடுவிக்கப்பட்ட ஜூலியன், சுதந்திர காற்றை சுவாசிப்பது சுகமாயிருக்கிறதென்றும், பாரம்பரிய வசனமான தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும், நீதி வென்றது போன்றவற்றை உதிர்த்து விட்டு விக்கிலீக்ஸ் தளத்தின் இயக்கமும், ஆக்கமும் தொடரும் என்று சூளுரைத்து வாகன் ஸ்மித்தின் பண்ணை வீட்டிற்குச் சென்ற காரில் ஏறி மறைந்தார்.
ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு போகும் பொழுதும், வரும் பொழுதும் லண்டன் மாநகரச் சாலைகளில் ஜூலியன் பயணித்தக் காவல் துறை வாகனத்தைத் துரத்திச் சென்று, ஜூலியனுக்குத் தங்கள் ஆதரவினைத் தெரிவித்ததில் லண்டனுக்கு மதுரை அந்தஸ்து கிடைக்கப்பெற்று வரலாற்றில் இடம்பிடித்தது. இத்தனை களேபரத்திலும் தினமும் ஆவணங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது விக்கிலீக்ஸ் தளத்தின் சிறப்பம்சம். ஜூலியனை ஸ்விடனுக்கு அழைத்துச் செல்வதற்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உண்மைகளை சட்டத்திற்கு புறம்பின்றி வெளிக்கொணர்ந்த ஒரு தனி மனிதனை வல்லரசு வல்லூறுகள் அலைக்கழிப்பது தொடர, உலகம் வழக்கம் போல் ஊமையாய் உறைந்திருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
இதுநாள் வரை ஜூலியன் மீது விக்கிலீக்ஸ் விவகாரங்கள் எதிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாதது, ஆஸிதிரேலியக் குடிமகனான ஜூலியனும், ஐரோப்பிய யூனியனில் பதிவுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனமும் (sunshine) அமெரிக்க சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்பதால், ஜூலியனைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா தன் சகாக்கள் மூலம் சிரமப்பட்டு முக்கி, முனகுவது, இன்று வரை விக்கிலீக்ஸ் தளத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பது, தனக்கு ஆவணங்கள் தருபவர்கள் குறித்துத் தகவல்கள் கசியாமல் பார்த்துக் கொள்வது ஆகியவை ஜூலியனின் தொழில்நுட்பத் திறனுக்கும், சிறப்பானத் திட்டமிடலுக்கும் அத்தாட்சிகள். விக்கிலீக்ஸ் மீதும் ஜூலியன் மீதும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதித்து அதிகார மையங்களுக்காக தங்கள் நிர்வாகக் கொள்கைகளை வளைத்து அதிர்ச்சயளித்தவை நிதி-வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி, அச்சு ஊடகமான டைம்ஸ் பத்திரிக்கை கூட 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் தேர்வில் அதிக வாக்குகள் பெற்றிருந்தும், ஜூலியனை அறிவிக்க மறுத்து பேஸ்புக் தளத்தின் நிறுவனரான சுகர்பெர்க்கினை அறிவித்துப் புண்ணியம் தேடிக்கொண்டது.
மனித குலத்திற்கு எத்தனையோ வசதிகளையும், வரங்களையும் தந்துள்ள இணையமெனும் தொழில்நுட்பத்தின் சிறப்பு வெளியீடு தான் ஜூலியன். இணையத்தின் வரலாற்றுப் பக்கங்களில் ஜூலியனுக்கு என்றென்றும் நீங்கா இடமுண்டு. விக்கிலீக்ஸ் தளம் பல சீர்திருத்தங்களுக்கான காரணியாக அமைவதற்கும், ஜூலியனின் சிறப்பான எதிர்காலத்திற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டு இத்தொடர் நிறைவடைகிறது.

நன்றியுரை:
இது வரை தொடர்ந்து இவ்வளவு எழுத சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அமைந்ததில்லை. ஒரே ஒரு சிறிய பதிவிடலாம் என்று எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இன்றி தொடங்கப்பட்ட இத்தொடர் இவ்வளவு தூரம் நீண்டதற்கு தொடர்ந்து ஊக்கமளித்த நீங்களனைவருமே காரணம். உங்கள் பின்னூட்டங்களும், அறிவுரைகளுமே கம்பெனியின் சோம்பலை விரட்டியடித்து, இயங்க வைத்ததென்பது குறிப்பிடத் தக்கது. ஜூலியன் ஒரு வாழும் வரலாறு என்பதாலும், பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஆளென்பதாலும், குறிப்பிட்டக் கால இடைவெளியில் ஜூலியன் குறித்து நிச்சயம் எழுத முயற்சிக்கப்படும்.

இத்தொடர் முழுமைக்கும் தொடர்ந்து ஆதரவளித்த அன்பர்களுக்கும், எந்தவித பிரதிபலனுமின்றி தங்கள் பதிவுகளில் இத்தொடர் குறித்து வெளியிட்டு சுட்டிகள் வழங்கிய அன்பர்கள் சுதந்திர மென்பொருள் - சாய்தாசன், வெட்டிக்காடு - ரவிச்சந்திரன், ஜோதிஜி, கேபிள் சங்கர் ஆகியோருக்கும், சொல்லிவிட்டு மறுபிரசுரம் செய்த தமிழ்மீடியா, கோவைச்செய்திகள் இணையத்தளங்களுக்கும் சொல்லாமலேயே மறுபிரசுரம் செய்து மகிழ்ச்சியூட்டிய பிறதளங்களுக்கும் சுடுதண்ணியின் தாழ்மையான வணக்கங்களும், நன்றிகளும். ஒவ்வொரு தொடரினையும் படித்தப்பின் பின்னூட்டமிட்டு தங்கள் கருத்துக்களை (அனைத்துப் பெயர்களும் சொல்ல வேண்டியிருப்பதால் தவிர்க்கப்படுகிறது - மன்னித்தருளவும்) பதிவு செய்து மகிழ்ச்சியளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பாகம் 12


சுடுதண்ணி.
முற்றும்.

No comments:

Post a Comment