Thursday, February 24, 2011

தமிழக மீனவர்களை பகடைக்காய்களாக்கி அரசியல் விளையாட்டு நடத்தும் தி.மு.க. - பலவந்தமாக இலங்கைக் கடலுக்கு அனுப்பப்பட்ட றோலர்களின் உரிமையாளர் பாலு


பருத்தித்துறை மற்றும் மாதகல் பகுதியில் அண்மையில் 136 மீனவர்கள் கைது செய்யப்பட்ட விடயத்தின் பின்னணியில் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியும் இந்திய மத்திய அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியுமான தி.மு.க. பின்னணியில் இருப்பதாக மாதகலைச் சேர்ந்த பங்குத் தந்தை ஒருவர் கூறியுள்ளார்.

மீனவ சமூகத்துடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி வரும் வண.பிதா ஆனந்தகுமாரே இந்த விடயம் குறித்து எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

உதாரணமாக கடந்த திங்கட்கிழமை 50 றோலர்கள் மாதகல் கடல் பகுதியில் காணப்பட்டன என்று குறிப்பிட்டுள்ள அந்த மத குரு தமிழக மீனவர்களை கடத்தி வந்த விடயத்தில் யாழ்ப்பாண மீனவர்கள் சட்டத்தை தமது கரங்களில் எடுத்துக்கொண்டுள்ளனர் என்பதை தான் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பலவந்தமாகவே தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டதாக அந்த மீனவர்கள் தனக்குத் தெரிவித்ததாக வண.பிதா தெரிவித்திருக்கிறார்.

இந்த மீனவர்கள் விடயத்தில் அரசியல் ரீதியான தூண்டுதல்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண மீனவர்கள் தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த விடயத்தில் இலங்கைக் கடற்படை தூண்டியதா அல்லது உதவி வழங்கியதா என்பது பற்றி கேட்டபோது, இலங்கைக் கடற்படை இதில் சம்பந்தப்பட்டிருக்கவில்லையெனவும் தி.மு.க. இதன் பின்னணியில் இருந்ததாகவும் அத்துடன், யாழ்ப்பாண அரசியல்வாதி ஒருவரும் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் மதகுரு ஆனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரமானது இந்தியாவில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலைமைக்கு தி.மு.க. தலைவர் ரி.ஆர்.பாலுவே பொறுப்பேற்க வேண்டுமென பிடிபட்ட தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர்.

ட்றோலர்களின் உரிமையாளர்களால் அழிவையேற்படுத்தும் றோலர்களை இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவி ஈடுபடுத்துமாறு தாங்கள் பலவந்தப்படுத்தப்பட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

இந்த ட்றோலர் படகுகள் யாவும் தி.மு.க. தலைவர் ரி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவையென அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்று வண.பிதா ஆனந்தகுமார் கூறியுள்ளார்.

நாங்கள் பிடிக்கும் மீன் அளவின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதாகவும் அதிகளவு மீன்களைப் பிடிக்கவில்லையாயினும் றோலர்களின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஊதியங்களை வழங்குவதாகவும் பிடிபட்ட தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர்.

அநேகமான மீன்பிடி றோலர்கள் தி.மு.க. தலைவர் ரி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவை என மீனவர்கள் குற்றஞ்சாட்டியிருப்பதாக வண.பிதா ஆனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.

இந்தியக் கடல் பகுதியில் மீன்கள் குறைவாக இருப்பதால் தாங்கள் இலங்கைப் பகுதிக்கு வந்ததாகவும் அவ்வாறு செய்யுமாறு றோலர்களின் உரிமையாளர்கள் தங்களை வலியுறுத்தியதாகவும் அந்த மீனவர்களை மேற்கோள் காட்டி வண.பிதா ஆனந்தகுமார் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அந்த மீனவர்களால் பாலு மீது வெளிப்படையாக குற்றச்சாட்டு சுமத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது.

பழிவாங்கப்படுவார்கள் என்ற அச்சத்தினால் அவர்கள் அதனை மேற்கொள்ளவில்லையென அவர் கூறியிருக்கிறார்.

பூனைக்கு மணி கட்டுவதற்கு யார் என்ற நிலையிலேயே தமிழக மீனவர்கள் இருப்பதாகவும் வண.பிதா ஆனந்தகுமார் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment