Thursday, February 24, 2011

சச்சினிடம் மன்னிப்புக் கேட்டேன் : சேவாக் தெரிவிப்பு


200 ஓட்டங்கள் சாதனையை நினைக்கவில்லையென்றும் ரன் அவுட்டுக்காக டெண்டுல்கரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் செவாக் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. மிர்பூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 87 ஓட்டங்களில் பங்களாதேஷை வீழ்த்தியது. செவாக்கின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 140 பந்தில் 14 பவுண்டரி, 5 சிக்சருடன் 175 ஓட்டம் எடுத்தார்.

ஆட்டநாயகனாகத் தேர்வு பெற்ற செவாக் பின்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது;

டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 200 ஓட்டங்கள் குவித்தது சாதனையாக உள்ளது. நான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போது அவரது சாதனையைப் பற்றி நினைக்கவில்லை. எனது துடுப்பாட்டத்தில் தான் அதிக கவனம் செலுத்தினேன். ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்றவகையில் இருந்தது.

இந்திய அணி விளையாடிய பின் ஓய்வறையில் நான் டெண்டுல்கரிடம் சென்று ரன் அவுட்டுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

ஓடுவதற்காக டெண்டுல்கர் என்னை அழைத்த போது நான் அவரைக் கவனிக்காமல் பந்தை கவனித்தேன். இதனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ரன் அவுட்டானார்.

ஸ்ரீசாந்தை தவிர எல்லோருமே சிறப்பாக விளையாடினோம். விராட் கோஹ்லியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவரது சதம் பொருத்தமானது. இந்த வெற்றி மூலம் இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது.

2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷிடம் தோற்றோம். அதற்கு பழிவாங்க 4 ஆண்டுகள் காத்திருந்தேன். இது ஒரு பழிவாங்கும் ஆட்டம் தான். பங்களாதேஷ் அணி டெஸ்டில் சிறப்பாக ஆடாவிட்டாலும் ஒருநாள் போட்டியில் நன்றாக ஆடிவருகின்றதென்றார்.

No comments:

Post a Comment