Friday, February 18, 2011

மலேசியத் தமிழர்களை கொந்தளிக்க வைத்த இலக்கியப் புத்தகம்



மலேசியத் தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது, பள்ளி மாணவர்களுக்காக இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலக்கியப் புத்தகம் ஒன்று. ‘தமிழர்களையும், இந்தியர்களையும் மிகக் கேவலமாகச் சித்திரித்து எழுதப்பட்டுள்ள வரிகளை நீக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு களமிறங்கியுள்ளன மலேசியத் தமிழ் அமைப்புகள்.

மலேசிய தேசிய இலக்கியவாதிகளுள் ஒருவர் அப்துல்லா உசேன். இவர் எழுதியுள்ள மலாய் இலக்கியப் புத்தகம் ‘இண்டர்லோக்’. மலேசிய மாணவர்களுக்கான ஐந்தாம் படிவ படிப்பில் இப்புத்தகம் இந்தாண்டு முதல் இடம் பெறுகிறது.

பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள இந்தப் புத்தகம் பற்றி மலேசிய தமிழ் உணர்வாளர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“அப்துல்லா உசேனின் இந்தப் புத்தகத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. இதிலுள்ள சில வரிகளை நீக்கிவிட்டால் போதும் என்கிறோம். அவ்வளவு கேவலமாகத் தமிழர்களைக் கிண்டலடித்திருக்கிறார். குறிப்பாக, சில வரிகளைச் சொல்கிறேன்.

‘மலையாளிகளும், தெலுங்கர்களும் வடக்குப் பகுதியில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ் மொழி தெரியும். மலையாளமும், தெலுங்கும் திராவிட மொழிக் குடும்ப த்தைச் சேர்ந்ததாகும். இவர்கள் எல்லாரும் இயல்பாகப் பழகுவதற்குக் காரணம், இவர்கள் அனைவரும் பறையர் சாதியைச் சேர்ந்தவர்களாவர்’ என்று கூறியுள்ளார் உசேன்.

மேலும், ‘யாரையும் தொட்டால் தீட்டாகுமென இவர்கள் பயப்பட வேண்டியதில்லை’, ‘ஆடுகளைப் போல் முண்டியடித்தனர்’, ‘மற்ற இந்தியர்களைப் போல் மணியமும் தன் மனைவியின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை’ என்ற வாசகங்கள் பாடத்தில் உள்ளன. இதைவிடத் தமிழ்ப் பெண்களை கேவலப்படுத்த வேறு வார்த்தைகள் தேவையில்லை.

இன்னொரு வரியில், ‘சீனக் கூலிகளுக்கு அதிகமான வாய்ப்புக் கிட்டுகிறது. அவர்கள் சுறுசுறுப்புடன் வேலை செய்வதோடு குறைவாகவும் பேசுகிறார்கள்’ என்பதை மணியம் ஒப்புக் கொண்டான்’ என்று வருகிறது. இந்த வரியின் மூலம் சீனர்களைவிட, தமிழர்கள் மட்டமானவர்கள் என்று பொருள்படுகிறது அல்லவா?இதைவிடக் கொடூரமான வரி ஒன்று. ‘தன் வாழ்வில் முதல்முறையாக தானொரு மனிதன் என்பதை உணர்ந்ததால் அவன் இந்நாட்டில் இங்கு வாழ்ந்தான்’ என்கிறார் (பக்கம் 218). ‘இங்கு அவன் தன் இனத்தாருடன் சுதந்திரமாகப் பழகுவதோடு, தன் நாட்டிலுள்ள சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அச்சமுற வேண்டியதில்லை.

‘நம் நாட்டில் வணிகனிடம் பொருள் வாங்க பணத்தைக் கையாலேயே கொடுக்கலாம். ஆனால், அவன் நாட்டில் அப்படியில்லை. பணத்தை ஓரிடத்தில் வைத்துவிட வேண் டும். பின்னர் வணிகன் அப்பணத்தின் மீது தண்ணீர் ஊற்றி தூய்மை செய்தபிறகு பெட்டிக்குள் பணத்தைப் போட்டான்’ (பக்கம் 220) என தமிழ் வணிகர்கள் தீண்டாமை பார்ப்பதாகச் சொல்கிறார்.

இதைவிடக் கொடுமையான வார்த்தையொன்று, ‘பகல் உணவு உண்ணாவிடில் சிக்கல் ஏதுமில்லை. ஆடு, மாடுகளைப் போல அசைபோடுவதற்கு வெற்றிலை கிடைத்தால் போதும்’ என எழுதுகிறார். இந்த நூலைப்பற்றி ஆசிரியர் குறிப்பிடும்போது, 1900-ம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மலாய்க்காரர், தமிழர், சீனர் ஆகியோருக்கு இடையில் நிலவிய தொடர்பினையும், ஒற்றுமையையும் தெளிவுறுத்தும் நோக்கில் எழுதப்பட்டதாகச் சொல்கிறார்.

ஆனால், மேற்கண்ட வரிகளைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது? ஒற்றுமையே நம் வாழ்வு, நம் பண்பாடு என்று முழங்கிக் கொண்டிருக்கும் மலேசிய கல்வியகங்களில் இப்படிப்பட்ட சிந்தனைகள் புகுத்தப்படுவது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.

தமிழர்களைப் பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்தப்போகும் இந்தப் புத்தகத்தை பாடநூலாகக் கொண்டு வருவதை அரசு பரிசீலிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டு மொத்த தமிழர்களின் எதிர்ப்பையும் மலேசிய அரசாங்கம் சந்திக்க வேண்டியது வரும்’’ என்றார் கொந்தளிப்புக் குரலில்.

இந்த நூல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மலேசிய துணைப் பிரதமர் முகைதீன் யாசீன், “இண்டர்லோக் புத்தகத்தால் தமக்கு எந்தவொரு பிரச்னையுமில்லை. ‘இண் டர்லோக்’ புத்தகத்தைப் பொறுத்தவரையில், அது ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான இலக்கியப் பாடமாக நிலைநிறுத்தப்படும். பிரச்னைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது’’ என்கிறார்.

ஆ.விஜயானந்த்

நன்றி: குமுதம்

சும்மா போனா எப்படி ???ஒரு ஓட்டு பொட்டுட்டு போங்க.................

No comments:

Post a Comment